Pages

Thursday, April 16, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 13

 

டாக்டர். எம்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயர் தண்ட்ராம்பட்டில் பணி புரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் ஆசிரமத்துக்கு வந்து அங்கிருப்பவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார்.
டாக்டரின் மனைவிக்கு டைபாய்ட் ஜுரம் கண்டது. அந்த காலத்தில் தண்ட்ராம்பட்டு தனியாக ஒதுக்குப்புறத்தில் இருந்தது.
திடீரென்று பகவான் தன் பக்தரான நம்பியாரிடம் டாக்டரின் மனைவிக்கு உடம்பு சரியில்லை. உடனே உங்க காரை அனுப்பி கூட்டி வந்து டவுனில் வைத்தியம் பார்க்கச்சொல்லுங்கோஎன்றார்.
அதே போல சிகித்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ஜுரம் அதிகமாகி நாடி விழுந்துவிட்டது. டாக்டர் தன் மனைவியை நன்கு சோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். அதை நம்பாமல் அவருடைய தகப்பனார் இன்னொரு டாக்டரை கூப்பிட்டு பார்க்கச் சொன்னார். அவரும் நன்கு சோதித்துவிட்டு இறந்துவிட்டதாகவே சொன்னார். இந்த தகவல் பகவானுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பகவான் நிமிர்ந்து அமர்ந்தார். ஏதும் பேசாமல் மௌனமானார்.
சிறிது நேரத்தில் டாக்டர் மனைவிக்கு மூச்சு வந்து பிழைத்துவிட்டார்!

பகவானுக்கு ஒரு முறை தொடர் விக்கல் வந்து கொண்டு இருந்தது. ஆசிரம டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வைத்தியம் பார்த்தார். நாட்கள் ஆயிற்றே தவிர விக்கல் கொஞ்சமும் குறையவில்லை. என்ன செய்வதென புரியாமல் மானசீகமாக பகவானிடமே வேண்டிக்கொண்டார். இந்த நோய்க்கு என்ன மருந்து? பகவானே சொல்லி அருளணும்!
வீடு திரும்பியும் அழுது கொண்டு இருந்தார். ஏன் என்று யாருக்கும் புரியவும் இல்லை; கேட்க துணிவும் இல்லை.
அழுதே தூங்கிப்போனார். அதி காலை ஒரு கனவு கண்டார். அதில் பகவான் எதிரில் இவர் அழுது கொண்டு இருந்தார். பகவான் அவரிடன் ஏன் அழறேள்?” என்று கேட்க இவர்  உங்களுக்கே தெரியுமே!என்றார்.
 “அட, இதுக்கா அழுகை? உங்க வீட்டு தோட்டத்திலே சீந்தல் கொடின்னு ஒண்ணு இருக்கு. அதோட இலையை பறிச்சு நெய்ல வதக்கி கொஞ்சம் வெல்லம் சுக்கு சேத்து உருண்டை பண்ணி கொண்டு வாங்கோ! கவலைப்பட வேண்டாம்என்றார்.
திடுக்கிட்டு எழுதவர் மனைவியை ஹரிக்கேன் விளக்கு கொண்டுவரச்சொல்லி தோட்டத்துக்கு போனார். தோட்டத்தில் கொடியா? அங்கே முழுக்க சிமெண்ட் தரைதானே? போய்ப் பார்த்தார். அங்கே சிமெண்ட் தரை ஒரு மூலையில் உடைந்து இருந்தது. சில செடிகள் தாமாக வளர்ந்து இருந்தன. ஒரே ஒரு கொடியும் இருந்தது. அதன் இலைகளை பறித்து பகவான் சொன்னபடி தயாரித்து எடுத்துக்கொண்டு அதிகாலையிலேயே ஆசிரமம் சென்றார். பகவான் சோஃபாவில் அமர்ந்து இருந்தார். டாக்டரை பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது! “வாங்கோ என்ன கொண்டு வந்திருக்கேள்? கொடுங்கோ” என்று கை நீட்டினார்.
ஒரு உருண்டையை சாப்பிட்டார். டாக்டர் தான் கண்ட கனவை விவரித்தார். பகவான் எதுவுமே அறியாதவர் போல கேட்டுக்கொண்டார்.
நோய் நீங்கியது!

 

No comments: