Pages

Tuesday, April 14, 2015

ரமணர் அடியார்கள் - முருகனார் 4



பகவானுக்கு தமிழ் கவிதைகளை அறிமுகம் செய்தவர் முருகனார். பழனிஸ்வாமிக்காக மலையாளம் கற்றது போல முருகனாரிடம் வெண்பா எழுதக் கற்று தேர்ச்சி பெற்றார் பகவான். முருகனார் தமிழாசிரியராக பணி புரிந்தவர். ஆசு கவி. ஆன்மீகத்தின் பக்கம் முழுக்க கவனம் திரும்பாது இருந்திருந்தால் பாரதியார் போல புகழ் பெற்றிருப்பார். அந்த அளவு திறன் வாய்ந்தவர்.
ஒரு முறை திருவாசகம் திருவெம்பாவையை ஒத்ததாக பகவான் பேரில் ஒரு பாடலை எழுதி வந்து கொடுத்தார்,

அண்ணாமலை ரமணன் அன்பர்க்கு அருள்மாரி
கண்ணாலே பெய்யும் கருணைத் திறம்பாடி
எண்ணா தனஎண்ணி யேங்கடியர் வெம்பாவத்
திண்ணா சறவே தெறுசே வகம்பாடிப்
பெண்ணாண் அலிகளெனும் பேதத்தை நீத்துத்தம்
உண்ணா டுளத் தெளிரும் உண்மை வளப்பாடிப்
பண்ணார் அவன்புகழைர் பாடுங்கீ தாமுதம்போல்
தண்ணார் அமைதி தழையேலோர் எம்பாவாய்”

இப்படியே எழுதிக்கொண்டு வந்தா திருவாசகம் போல அமையுமே!” என்றார் பகவான்.
கண்ணீருடன் “மாணிக்கவாசகர் எங்கே நான் எங்கே?” என்றார் முருகனார்.
ஆனால் பகவான் மனது வைத்தது நடவாமல் இருக்குமா?
ரமண சந்நிதிமுறை உருவாகி வெளியாகியது.
வெளியாகும் முன் அதற்கு சிறப்புப்பாயிரம் எழுத வேண்டி இருந்தது. அப்போது விஸ்வநாதஸ்வாமி 'முகவாபுரி முருகன்' என வேடிக்கையாக குறிப்பிட்டார். இதை கேட்ட பகவான் “விஸ்வநாதா! இதை வெச்சு ஒரு பாடல் எழுதி சிறப்புப்பாயிரத்துக்கு வெச்சுக்கலாம்” என்றார்.
அவரும் எழுத முயன்றார். ஆனார் அந்த வரியைத்தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை, பேப்பரில் முகவாபுரி முருகன் என்று மட்டுமெழுதி கொடுத்துவிட்டு போய்விட்டார். அதை பகவானே பூர்த்தி செய்துவிட்டு விஸ்வநாதன் என்று பெயரும் போட்டுவிட்டார்.

அகத்தாமரை மலர் மீதுறை அருணாசல ரமணன்
நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை
மிகத்தான ருள் சுரந்தானென முகவாபுரி முருகன்
செகத்தாருய வகுத்தான் முறை திருவாசக நிகரே.

இந்த ரமண சந்நிதி முறை திருவாசகத்தை ஒட்டி எழுதப்பட்டாலும் அதில் சிவபுராணம் விட்டுப்போயிருந்தது. (சந்நிதி முறை என்பதற்கு இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று முறை உள்ளது போலும்!)

அதை சரி செய்ய முருகனார் ஒரு அகவல் செய்தார். அதை ஆரம்பிக்கும் போதே சிவபெருமானார் திருக்கயிலையில் உமையோடு வீற்றிருக்கையில் நந்தியை எம் பெருமான் அழைத்து ‘உலகிற்கு ப்ரபத்தி தத்துவத்தை நீ போய் ஒழுகிக்காட்டு’ என்று உத்திரவிட நந்தியம் பெருமான் மாணிக்கவாசகராய் ஜீவபாவம் கொண்டு தோன்றினார் என்றே ஆரம்பித்தார்.
அறம் பாவம் என்னும் இரு வினையால் மீண்டும் மீண்டும் பிறந்து உழன்று மீள்கை தெரியாது தத்தளித்து ஜீவத்துயர் உற்று கதியற்று நிற்கும்போது... என்று எழுதிய பின் இனி இறைவன் என்ன செய்தான் என்பதை அவனேதான் எழுத வேண்டும் என்று அத்துடன் நிறுத்திவிட்டு பகவானிடம் சமர்ப்பித்துவிட்டு சென்று விட்டார். இதற்கு சிவபுராணம் என்று பெயரிடுவதா அல்லது ரமண புராணமா? என்றும் யோசித்துக்கொண்டு இருந்தார்.
மாலையில் முருகனார் வந்த போது பகவான் “இது சரியா இருக்கான்னு பாருங்கோ!” என்று அவர் கொடுத்த பேப்பர்களை திருப்பிக்கொடுத்தார். அரைகுறையாக விட்ட பாடலை “அருணை நகர் தன்னில் ஓர் அந்தணணாய் தோன்றி கருணை விழியாலே தன் கமலபதம் காட்டி” என்று தொடர்ந்து முடித்துவிட்டார் பகவான்.

ரமண சந்நிதி முறை இரண்டாம் பதிப்பில் இது சேர்த்து வந்த போது அதற்கான அச்சு பிரதி சரி பார்க்க வந்தது. முருகனார் இந்த இடத்தில் குறியிட்டு அடிக்குறிப்பாக ‘இந்த வரிகளுக்கு மேல் பகவான் எழுதியவை’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
பகவான் அச்சுப்பிரதியை சரி பார்க்கும்போது இந்த அடையாளக்குறிப்பையும் அதன் விவரத்தையும் படித்துவிட்டு முருகனாரை பார்த்து சிரித்துக்கொண்டே “ஓஹோ! அப்போ இது மட்டும்தான் பகவான் எழுதியதோ?” என்றார்.
இதை கேட்டவுடன் முருகனார் கதறிவிட்டார்.
பகவனே! எல்லாமே நீங்க எழுதியதுதான். நான் எழுதினேன்னு ஏதும் கர்த்ருத்வம் இருந்தா அதை இத்தோட போக்கணும்” என்று வேண்டினார்!

பிற்காலத்தில் முருகனாரின் பெருமையை தாளாமல் யாரோ இழிவாக பேசிய போது பகவான் ‘அவருக்கு உங்க சர்டிபிகேட்தானே வேணும்? எப்ப சந்நிதிமுறையும் குருவாசகக்கோவையும் வெளிவந்ததோ அப்பவே அவர் நால்வர்ல ஒருவர் ஆயிட்டார்’ என்று முருகனரின் உண்மை ஸ்திதியை வெளிப்படுத்தினார். இதையே முருகனாரும் “வாதவூரார் மாணிக்க வாசகர் என் வாக்கிலிருந்து ஓதலால் ஓதினேன். ஓர் தகவும் இல்லேன்’ என்று தன்னைப்பற்றியும் கூறினார்!


No comments: