நடேசமுதலியார் பள்ளி ஆசிரியர். சுமார் இருபது வயதிருக்கும்போது பகவானை ஸ்கந்தாஸ்ரமத்தில் சந்தித்தார். அப்போதெல்லாம் பகவான் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார். பேசினால் அது பெரும் அதிசயம். இக்காலகட்டதில் பகவானை சந்தித்த நடேசமுதலியார் கண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு விட்டார். “இறைவன் யார்? நான் இறைவனை உங்க அருளாலே உணர முடியுமா? என்னோட இந்த தீவிர ஆசையை நிறைவேத்தித்தரணும். உங்க அருள் வேணும் என பிரார்த்தித்தார்.
பகவான் நிதானமாக பேச ஆரம்பித்தார். “முன்னாலே நிக்கிற இந்த உடம்பு
என் அருளை கேக்கறதா இல்லை அதுக்குள்ளே இருக்கற உணர்வா? உணர்வுதான்
வேண்டிக்கறதுன்னா அது தன்னை இந்த உடம்புன்னு நினைச்சு கொண்டு வேண்டிக்கறதா?
முதல்ல அது தன் உண்மையைத் தெரிஞ்சுக்கட்டும். அப்போ
அதுக்கு இறைவன்னா என்ன அருள்ன்னா என்னன்னு என்பதெல்லாம் நல்லாவே தெரிய வரும்.
இந்த உண்மையை இங்கேயே இப்பவே உணரலாம்”
”இந்த உடம்பு அருளுக்கு ஏங்கலை. நான் ந்னு ஒளிர்ற உணர்வுதான்
ஏங்கறது. உனக்கு நீ இருக்கே என்கிற உணர்வு இப்ப இருக்கு.
ஆனா தூங்கும்போது மனசு புத்தி இந்திரியங்கள் ப்ராணன் உடம்பு இது
எதோடயும் அது சம்பந்தமில்லாம இருக்கு. விழிப்பு வந்த உடனே
அது உனக்கு தெரியாமலே இது எல்லாத்தோடையும் சம்பந்தப்படுத்திக்கிறது. இது உனக்கு அனுபவம்தானே? இனிமே செய்ய வேண்டியது
எல்லாம் உன்னை இந்த உடம்பு முதலாவற்றோட சம்பந்தப்படுத்திக்கக்கூடாது. விழிப்புலேயும் கனவுலேயும் தூக்கத்திலேயும் இருக்கறா மாதிரி இருக்க
கத்துக்கணும். உன்னோட இயல்பே எதோடயும் சம்பந்தம் இல்லாதது
என்கிறதால தூக்கத்தை முழு அறிவோட இருக்கிற தூக்கமா மாத்தணும். இது உன்னோட இயல்பில ஸ்திரமா நிக்கறதால வரும். அதுக்கு
நீண்ட கால பயிற்சி தேவைப்படும் என்கிதை மறந்துடாதே. அந்த
அனுபவம் கிடைச்சாச்சுன்னா அது இறைவன் வேற நீ வேற இல்லைன்னு புரியவைக்கும்.”
சாதனையின் இலக்காக ஒரு மலை
காட்டப்பட்டது; அதை
நடேசமுதலியார் துவக்கினார். அவ்வப்போது சாதனையின் அம்சங்களை
பகவானிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். இதை தனக்காக ஒரு நூல்
வடிவிலேயே குறித்து வைத்துக்கொண்டார். பிற்காலத்தில் அது
பகவானால் உறுதி படுத்தப்பட்டு ‘உபதேச மஞ்சரி’ என்று பெயரிடப்பட்டது.
‘எவ்வாற்றேனும் ஒரு விருத்திக்குக்கூட
இடந்தராதிருத்தலே சாதனைக்கு சிறப்பாம்’
‘மனம் முயற்சி இன்றியே விருத்தியற்ற
நிலையை ஸஹஜமாக அடையும் வரையில் அதாவது அகங்கார மமகாரங்கள் முழுதும் நசிக்கும் வரை
சாதனை வேண்டும்’ இது
போன்ற தீவிர சாதகர்களான முமுக்ஷுக்களுக்கேயான உபதேசங்களை பெற்றார்.
வேலையையும் குடும்பத்தையும் துறந்தார். தீவிர சாதனை கைவந்தது. சாது நடனானந்தர் ஆனார்.
குகை நமச்சிவாயர்கோவிலில்
தங்கிக்கொள்வார். திருவண்ணாமலை
நகரில் பிக்ஷை எடுப்பார். அவரது ஒரே நட்பு முருகனார்.
அக்காலத்தில் அதி தீவிர சாதகர்கள் இவர்கள் இருவரே என அறியப்பட்டனர்.
இருவரும் முசுடுகள். முருகனாரை தேங்காய்
என்றும் இவரை பலாப்பழம் என்றும் சொல்வர். முட்களாக இருக்கும்;
நெருங்க முடியாது.
பிக்ஷை நீங்கலான மீதி நேரமெல்லாம்
பகவானுடன் வாசம். தீவிர
சாதனை. பகவான் மீதுள்ள அன்பால அவ்வப்போது பாடல்கள்
இயற்றுவார். அது யாருக்கும் தெரியாது!
ஒரு முறை பகவான் சன்னிதியில் நாயனாவும்
இன்னும் சில பண்டிதர்களும் சம்ஸ்க்ருதத்திலேயே சாஸ்திர விசாரம் செய்து கொண்டு
இருந்தார்கள். சாது
நடனானந்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை எண்ணி அவர்
வருந்தினார். அவருக்கு ஆத்ம சாதனை மீது இருந்த மலைப்பும் தன்
இயலாமையும் சேர்ந்து தான் ஆத்ம ஞானத்துக்கு அருகதை இல்லை என்று சோர்வடையச்செய்தது.
கண்ணீர் பெருகும் கண்களை மூடிக்கொண்டார்.
நேரம் சென்றது. விழித்த போது பகவான் மட்டுமே
இருந்தார். மற்றவர்கள் விடை பெற்று சென்றுவிட்டனர்.
பகவான் கருணையோட நடனானந்தரை பார்த்தார். “ ஏன் விசனப்படனும்? நீ உண்மையிலேயே ஆத்ம ஞானத்துக்கு தகுதியோட இல்லைனா இதுகிட்டேயே வந்து
இருக்க முடியாது. எது உன்னை இங்கே கூட்டி வந்ததோ அதுவே ஆத்ம
ஞானத்தை அடைய வைக்கும். இன்னைக்கு இல்லைன்னா நாளை. அதோட வேலையை அது நிச்சயம் பார்க்கும். கவலைப்படாதே” என்றார்.
No comments:
Post a Comment