Pages

Thursday, April 9, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 10



சேஷாத்ரிஸ்வாமிகள் தன் இறுதிக்காலம் நெருங்கும் தறுவாயில் தன் பக்தை ஒருவரிடம்நான் வீடு கட்டி க்ருஹப் ப்ரவேசம் செய்யட்டுமா? இல்லை இப்படியே இருந்துடட்டுமா?” என்று கேட்டார். அவளோ கேலியாக உனக்கு இடுப்பு வேட்டியே ஒழுங்கா கட்டத்தெரியாது! வீடு கட்டப்போறோயா?’ என்றாள்.
சேஷாத்ரிஸ்வாமிகள் திருப்பியும் அதே கேள்வியைக் கேட்டார்.
அவளோஎனக்கு வேற வேலையில்லே!” என்றாள்.
மூன்றாம் முறையும் கேட்டார்.
இம்முறை அவள் சரி வீடு கட்டிக்கோ!” என்றாள்.
உடனே சேஷாத்ரிஸ்வாமிகள் அண்ணாமலையார் உத்திரவு!” என்று சொல்லி சென்றுவிட்டார்.
சில நாட்களிலேயே உடல்நலம் சரியில்லாமல் சின்ன குருக்கள் வீட்டுத்திண்னையில் அமர்ந்துவிட்டார். நகரவே இல்லை.
அவரை தரிசித்த கோவில் தர்மகர்த்தா வீரப்ப செட்டியார் ஏதோ நினைத்து நேரே பகவானிடம் வந்து பேசினார். பகவான் குஞ்சு ஸ்வாமியிடம் திருமந்திரத்தில் இருந்து சமாதி கட்ட வேண்டிய வழி முறைகளை விவரமாக எழுதிக் கொடுக்கச்சொன்னார்.
ஆசிரமத்துக்கு பக்கத்தில் செட்டியார் சமாதி கட்ட ஆரம்பித்து 20 நாட்களில் கட்டி முடித்தார். 21 ஆம் நாள் சேஷாத்ரிஸ்வாமிகள் சாமாதியானார்.
சமாதி வைபவத்தில் பகவான் ஆனந்தமாக கலந்து கொண்டார்.
புகைப்படம் எடுக்க போட்டோக்ராபர்கள் வந்து இருந்தனர். அவர்களிடம் பகவான் இவர் ஒத்தர்தான் உங்ககிட்ட மாட்டிக்காம இருந்தார். இன்னைக்கு மாட்டிக்கொண்டார். நல்லா எடுங்கோ!” என்றார்.

ஒரு நாள் நிர்வாகம் தொடர்பான சர்ச்சையும் விவாதமும் பழைய ஹாலில் நடந்தது. பகவான் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தார். எல்லாரும் பேசப்பட்ட விஷயம் பற்றி பகவான் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து இருந்தனர்.
அப்போது குஞ்சு ஸ்வாமி உள்ளே நுழைந்தார். இறுக்கமான சூழ்நிலையை உணர்ந்தவர் வெளியே போவதா உள்ளேயே நிற்பதா என்று புரியாமல் தயங்கி நின்றார்.
பகவான் குஞ்சு ஸ்வாமியை பார்த்து கேட்டார்: “உனக்கு இங்க என்ன வேலை? நீ ஏன் இவாளோட சேர்றே? நீ எதுக்கு திருவண்ணாமலை வந்தே?”
பகவானோட அருளுக்காக வந்தேன்.”
அப்ப போய் உன் வேலையை கவனி! இங்கே நிக்காதே!”
தாம் வந்த நோக்கத்தை உணர்ந்த எல்லாரும் வெளியேறினர்.

ஒரு சமயம் பகவான் சமயலறையில் கீரை நறுக்கிக்கொண்டு இருந்தார். முருகனாரும் உடன் வேலை செய்து கொண்டு இருந்தார், பகவான் மலை மேலே இருந்த காலத்தைப்பற்றி கதைகள் சொல்லிக்கொண்டு இருந்தார். “இந்த மலை மேலே அபூர்வமான மூலிகைகள் எல்லாம் இருக்கு. ஒரு மூலிகையை சாப்பிட்டா பசியே தெரியாதுஎன்று பலவித மூலிகைகள் கீரைகள் பற்றி சொல்லிக்கொண்டே போனார். முருகனார் இந்த பேச்சில் லயித்து இருந்தார். பகவான் தன் பக்கம் இருந்த கீரைகளை நறுக்கி முடித்து வேர்களை ஒன்று சேர்க்க முருகனார் பக்கம் பார்த்தார். முருகனார் இஷ்டத்துக்கு கீரைகளை நறுக்கி அலங்கோலமாக வைத்து இருந்தார்.
பகவான் ஒரு கீரையை எடுத்துக் காட்டிஇப்படித்தான் நறுக்கறதா? எவ்வளோ தண்டை விட்டு வீணாக்கி இருக்கீர்? நல்லா இருக்கு நீங்க கீரை நறுக்கற லட்சணம்! நீர் குடித்தனம் பண்ணா மாதிரி இருக்கு!” என்று கேலி செய்தார்.
இதை கேட்ட முருகனார் பகவான் பக்கம் பார்த்தார். அத்தனை கீரையும் ஒழுங்காக நறூக்கப்பட்டு வேர், தண்டு, இலைகள் தனித்தனியாக நேர்த்தியாக வைக்கப்பட்டு இருந்தன.
முருகனார் இதை ஒரு பாடலாக எழுதி பகவானின் சோபா அருகில் வைத்துவிட்டு போய்விட்டார்.
பகவான் சோபாவில் உட்கார வந்த போது இதை எடுத்துப்படித்தார். உடனே பலமாக சிரித்துவிட்டார். அருகில் இருந்தவர்கள் என்ன என்று விசாரித்தனர்.
நானும் முருகனாரும் கீரை நறுக்கினோம். முருகனார் தாறுமாறாக நறுக்கியதை நான் நீர் குடித்தனம் நடத்தின மாதிரி இருக்குந்னு சொன்னேன். அதுக்கு அவர் நீர்தான் இவ்வளோ சாமர்த்யசாலியா இருக்கீரே? பேசாம ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டு குடித்தனம் நடத்த வேண்டியதுதானேந்னு கேட்டு எழுதி இருக்கார்!” என்றார் பகவான்!
 

No comments: