Pages

Monday, April 13, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 12



பகவானின் ஒரு ஜெயந்தியின் போது அன்பர்கள் நிறைய உணவுப்பொருட்களை அனுப்பி இருந்தனர். ஓர் அன்பர் நிறைய கத்திரிக்காய் மூட்டைகளை அனுப்பி இருந்தார். தினசரி கத்திரிக்காய் சமைத்து மாளவில்லை! கடைசியில் எக்கச்சக்கமாக கத்திரிக்காய் காம்புகள் சேர்ந்து இருந்தன.
பகவான் இவற்றை கொஞ்சம் பட்டாணி சேர்த்து வேக வைக்கச்சொன்னார். வெந்து வெந்து வெந்து... ஆறு மணி நேரமாகியும் அது வேகவில்லை. பகவான் வந்து பார்த்துவிட்டு எப்படி வெந்திருக்கு?” என்று கேட்டார். நாம் என்ன காயா வேக வைக்கிறோம்? இரும்பு ஆணி இல்லே வேகவைக்கறோம்!” எனறார் சம்பூர்ணம்மாள்.
பகவான் ஒன்றும் பேசாமல் கொஞ்சம் கிளறிவிட்டுவிட்டு சென்று விட்டார்.
சற்று நேரத்தில் அது நன்றாக வெந்து பிரமாதமாக அமைந்துவிட்டது.
யார் கிட்டேயும் இது என்னன்னு சொல்ல வேண்டாம் யாராவது என்னன்னு கண்டுபிடிக்கிறாளான்னு பார்ப்போம்என்றார் பகவான்.
யாராலும் அதை என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை! ஆனால் நல்லா இருக்கு என்று இரண்டாம் முறையும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். சமைத்த சம்பூர்ணம்மாளை எல்லாரும் புகழ்ந்தனர்.
ஆனால் பகவான் அதை மிகவும் கொஞ்சமே - ஒரு வாய் அளவு- போட்டுக்கொண்டார். மேலே எவ்வளவு கேட்டும் போட்டுக்கொள்ளவில்லை.
அடுத்த நாள் பகவான் சமையலறையில் ஒருவரிடம் சொன்னார்: “சம்பூரணத்துக்கு ரொம்ப வருத்தம்தான் நான் நேத்து அந்த கறியை அதிகம் சாப்பிடலேன்னு. பின்னே ரசிச்சு ருசிச்சு சாப்பிடதெல்லாம் யாராம்? எல்லா வாயிலேயும் நாந்தானே சாப்பிடறேன்? யார் சாப்பிட்டா என்ன?”
சமைக்கறதுதான் முக்கியம். சாப்பிடறவாளோ சமைக்கறவாளோ இல்லை. பக்தி சிரத்தையா ஒரு காரியம் செய்யறதேதான் அதுக்கான பலன். அந்த கார்யம் பிறகு என்ன ஆறதோ அது முக்கியமில்லை. ஏன்னா அது நம்ம கையிலே இல்லை!”
 ---  
சாந்தம்மாள் ஒரு முறை தன் ஊருக்கு புறப்பட்டார். சாயங்கால ரயிலில் கிளம்ப வேண்டும். காலை பத்து மணி அளவில் பகவானிடம் வந்து பகவானே ஊருக்கு போயிட்டு வந்துடறேன்!” என்று உத்திரவு கேட்டாள்.
சாயங்காலம்தாம்னே போறே? அதுக்குள்ள என்ன?” என்றார் பகவான்.
கிளம்பற அவசரத்துல மறந்துட்டா என்ன செய்யறது? அதான் இப்பவே சொல்லிடறேன்என்றார் சாந்தம்மாள்.
பகவான் சிரித்துக்கொண்டே இதுக்கு ஒரு ஸ்லோகம் இருக்குஎன்று ஸ்லோகத்தை சொல்லி பொருள் சொன்னார். “பகவானே இந்த உலகத்தைவிட்டு நான் போகும்போது உன் பெயரைசொல்ல நினைவு இருக்குமோ இருக்காதோ! அதனால் இப்பவே சொல்லிடறேன். நான் சாகும்போது இதை சொன்னதா எடுத்துக்கோ!”

ஏதோ காரணத்தால் சாந்தம்மாள் அன்று ஊருக்கு போக முடியவில்லை.
அடுத்த நாள் காலை பகவானுக்கு இட்லி பரிமாறும் போது பகவான் வேடிக்கையாக சொன்னார்: “பாத்தேளா? சாந்தம்மாள் ஊருக்குப் போகத்தானே உத்திரவு கேட்டா? இருக்கறதுக்கு கேக்கலையே?”
 ---
ஒரு முறை ஆசிரமத்தில் எல்லாருக்கு பேதிக்கு விளக்கெண்ணை கொடுத்தனர். முருகனார் இதை சாப்பிட மறுத்துவிட்டார். இந்தத் தகவல் பகவானுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அவர் சாப்பிட முடியாதுன்னா என்ன செய்ய முடியும்? அவர் பங்கையும் எனக்குக் கொடுங்கோஎன்றார்.
இரண்டு பங்கு சாப்பிட்ட பகவானுக்கு ஒன்றும் செய்யவில்லை. பதிலாக முருகனாருக்கு சில மணி நேரத்தில் பேதி கண்டு பத்து முறை சென்றது!

No comments: