Pages

Friday, April 3, 2015

ரமணர்- அடியார்கள் - முருகனார்



பகவானின் முக்கிய அடியார்களில் ஒருவர் முருகனார்.
1923 ஆம் ஆண்டு ஒரு வியாழக்கிழமை அவர் பகவானை தரிசிக்க திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலையில் காலடி வைத்ததுமே தன்னிலை மறந்தார். ஆசிரமம் செல்வதற்கு பதில் கோவிலுக்கு சென்று தரிசித்து நெகிழ்ந்தார். குருவைக்காண வெறுங்கையுடன் போகலாகாது என்று எண்ணி கோவிலிலேயே அமர்ந்து ரமண தேசிக பதிகம் எழுதினார்.
அவர் ஆசிரமத்துக்கு சென்ற போது பகவான் மலைக்கு செல்ல எண்ணி வெளியே வந்தார். தரிசித்த மாத்திரத்தில் முருகனார் தன்னிலை அற்றுப்போனார். சிறிது நேரம் கழித்து, தான் எழுதிய பதிகத்தை படிக்க முயன்றார். வாய் குளரியது. கண்ணீர் பாட்டுக்கு பெருகிற்று!
இதை கண்ட பகவான் அதை இப்படிக் கொடும் நான் படிக்கிறேன் என்று சொல்லி வாங்கிக்கொண்டார். படித்துவிட்டு மாணிக்க வாசகர் போல பாடுவீரோ என்று கேட்டார்! காரணம் முதல் பாடலில்  ‘கயிலையை விட்டு மாணிக்கவாசகரின் வாக்கை கேட்க திருப்பெருந்துறைக்கு அன்று வந்தது போல் எளியேன் என் பாடலை கேட்க இன்று திருவண்ணாமலை வந்தீரோ!’ என்று பாடி இருந்தார்!
வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே அவருக்கு மாறுதல் தெரிந்தது. அது இன்னதென்று அறிய முடியவில்லை. இருந்தாலும் அது அவரை உற்சாகப்படுத்தியது. பகவான் எதிரில் அமர்ந்து மனதை ஏகாக்கிரப்படுத்தினார். சில நிமிடங்களில் அவருக்கு ஒளிக்காட்சி ஒன்று புலனாகியது. பகவானைச்சுற்றியும் அவரைச் சுற்றியும் ஒளிவட்டம் உண்டாயிற்று. எவ்வளவு நேரம் இந்த காட்சி இருந்ததோ நாள் முழுதும் இதிலேயே அவர் ஆழ்ந்து விட்டார். உலக விஷயங்கள் தன்னை விட்டு போவது போலவும், தனித்தன்மை இழப்பது போலவும் அவருக்கு தோன்றியது, தன் தாயாருக்கு தன்னை விட்டால் வேறு ஆதரவில்லை என்ற பயம் தோன்றி மேலோங்கி நின்றது.
உடனே இங்கே இந்த ரமண மகரிஷி தலைமையில் ஒரு பெரிய திருடர் கூட்டமே இருக்கு. வரவா மனசை எல்லாம் மயக்கி அவர் கூட்டத்திலே சேர்க்கறதுதான் அவா வேலை. என் அம்மாவுக்கு என்னை விட்ட வேற யாருமில்லே! என்னை விட்டுடுங்கோ, நான் போறேன்!” என்று கூறியபடி வெளியே சென்றார். பகவான் குஞ்சு ஸ்வாமியையும் அருணாசல ஸ்வாமியையும் பார்த்து கூடப்போகுமாறு ஜாடை காட்டினார்.
மூவரும் அருகில் உள்ள அக்னி தீர்த்தம் வரை சென்றனர். குஞ்சு ஸ்வாமி முருகனாரிடம் ஏன் ஸ்வாமி! நல்லா நிலா காயுதே! இப்படி உக்காரலாமே!” என்றதும் அவரும் சரியென்று உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து நடந்ததை எல்லாம் கூறினார். குஞ்சுஸ்வாமி அப்படி பயப்பட ஏதும் பகவானிடம் இல்லை என்று எவ்வளவு எடுத்துக்கூறியும் அவருக்கு நிலை கொள்ளவில்லை. செங்கம் சாலையிலேயே அதி காலை மூன்று மணி வரை அலைந்தார்.
அவர் திரும்பிச்செல்ல செய்த ப்ரயத்னம் எல்லாம் வீணாகின. இரண்டு நாள் கழித்தே அவரால் சென்னைக்கு திரும்ப முடிந்தது. (தொடரும்)

 

No comments: