Pages

Friday, April 17, 2015

ரமணர் அடியார்கள் - சிவானந்தஸ்வாமி


சிவானந்தஸ்வாமி கிராமவாசி. வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தவர். பகவானை தரிசித்த மாத்திரத்திலேயே ஈர்க்கப்பட்டார். ஏதேனும் வேலை செய்து கொண்டு இங்கேயே இருந்துவிடலாமா என்று யோசித்தார். ஆனால் தம் சேவையை இங்கே ஏற்றுக்கொள்வார்களா என்று தயக்கம்.
அப்போது ஆச்சரியமாக அவரிடம் சின்னஸ்வாமி நேராக வந்து மாலை கட்டத்தெரியுமா?” என்று கேட்டார்/
இவரும் சந்தோஷமாக கட்டுவேன் சாமி!” என்றார்.
முதல் நாள் கட்டிய மாலையை பகவானிடம் காண்பித்தார்.
பகவான்அருமையா இருக்கு! நானும் கட்டுவேன். ஆனா இவ்வளோ அழகா வராது. கந்தாஸ்ரமத்துலே இருக்கும்போது மாலை கட்டி பெரிய கோவிலுக்கு அனுப்புவோம். இந்த கலையை மத்தவாளுக்கும் சொல்லிக்கொடு!” என்றார்.
இது தொடர்ந்தது. பின்னால் இவர் ஓல்ட் ஹாலிலேயே பகவானுக்கு நேரடி சேவகராக நியமிக்கப்பட்டார்.

நூல் திரட்டு புத்தகம் வெளியான போது அது ஒரு பெரிய விசேஷமாக நிகழ்வாக இருந்தது. எல்லாரும் சந்தோஷத்துடன் அதை வாங்கினார்கள். சின்னஸ்வாமி மிகவும் கண்டிப்பானவர். ஆசிரமவாசிகள் உட்பட யாருக்கும் இலவச பிரதி கிடையாது என்று சொல்லிவிட்டார்.
அது வெளியான சில நாட்களாக பகவான் தன்னிடம் இருந்த ஒரு நோட்டுப்புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். மணி மணியான அச்சிட்டாற் போன்ற கையெழுத்து! எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுதிக்கொண்டே இருந்தார். அதை யாருக்கும் காட்டவும் இல்லை!
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் பகவான் சிவானந்தஸ்வாமியை கூப்பிட்டுசிவானந்தம், நூல் திரட்டு வாங்க காசுக்கு நீ எங்கே போவே? இதை நானே எழுதியிருக்கேன். நீ இதை வெச்சுக்கோ!” என்று அவர் கையில் கொடுத்தார்!
மற்ற சேவகர்களிடம் காசு இருந்ததால் அவர்கள் வாங்கி இருந்தார்கள். சிவானந்தஸ்வாமியால் வாங்க முடியவில்லை!
கிராமத்துக்காரர் என்பதால் யாரும் அவரை தீவிரமான ஆன்மீக சாதகராக பார்ப்பதில்லை. ஆனால் பகவான் அவரது சாதனையை மதித்தது அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. நெக்குருகி வணங்கி நோட்டை பெற்றுக்கொண்டுபகவானே! எனக்கு விசேஷமா மந்திரம் ஏதாவது உபதேசம் பண்ணுங்கோ! நான் எப்பவும் அதை ஜபம் பண்ணறேன்!” என்றார்.
பகவான் சிரித்துக்கொண்டே நீயே உனக்கு எப்பவும் உண்மையா இரு! அது போதும்என்றார்.




ஒரு நாள் சிவானந்தஸ்வாமிக்கு பகவான் அருணாசலனேதான் என்ற உணர்வு பலமாக ஏற்பட்டது. பகவானை பார்க்கும்போதெல்லாம் அது மேலோங்கியது.
இதை பகவானிடம் சொல்வதா இல்லையா, இது உண்மையா அல்லது பகவான் மீது தமக்கு இருக்கும் பிரியத்தால் இப்படி தோன்றுகிறதா என்று குழம்பி தவிப்பில் இருந்தார்.
அப்போது பகவான் சிவானந்தம், உன்கிட்டே கொடுத்த நோட்டுப்புத்தகத்தை கொடுஎன்று கேட்டு வாங்கிக்கொண்டார். அதை இரண்டு மணி நேரம் கையில் வைத்து இருந்தார். யாரேனும் வந்தால் மூடி வைத்துக்கொண்டார்!
இரண்டு மணிநேரமான பின் சிவானந்தம், எதுக்கு சந்தேகம்? தீர்த்துட்டா போச்சு! நீயே பாரு! “ என்று சொல்லி நோட்டுப்புத்தகத்தை கொடுத்தார். அதில் முதல் பக்கத்தில் பகவான் அருணாசலத்தை தன் கையால் வரைந்து இருந்தார்.
 

No comments: