Pages

Monday, April 20, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 14



ஜி.வி.சுப்பராமையா பழைய ஹாலில் த்யானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய குழந்தை வந்து அப்பா எப்போது த்யானம் கலைந்து எழுந்திருப்பார் என்று காத்திருந்தது. பகவான இதை கவனித்துவிட்டு குழந்தையிடம் தன் தந்தையை எழுப்பச்சொன்னார்.
எழுந்த சுப்பராமையாவை பகவான் கடுமையாக கண்டித்தார். “குழந்தை சாப்பிட்டதா என்று கூட பார்க்காம என்ன த்யானம் வேண்டி இருக்கு? குழந்தையை விடவா த்யானம் பெரிசு?”

சுப்பராமையாவின் குழந்தை லலிதா துருதுரு என்று இருப்பாள். ஒரு முறை பழைய ஹாலில் ஏதோ செய்து கொண்டே இருந்தாள். பங்காவை பிடித்து இழுப்பது, புத்தகங்களை எடுப்பது வைப்பது என்று காரியம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது பகவான் என்ன பண்ணறே என்பார். அவள் நான் ஒண்ணும் பண்ணலே!” என்பாள். இதே போல மூன்று முறை நடந்தது.
அப்போது பகவான் சொன்னார்: “இந்தக் குழந்தை எதையாவது செய்து கொண்டே இருக்கா. ஆனால் கேட்டா தான் ஒண்ணுமே செய்யலை என்கிறா. இதான் பரமார்த்தம்! நாம் என்ன செஞ்சாலும் ஒண்ணும் செய்யலை; சும்மாத்தான் இருக்கோம். சின்னக்குழந்தை இதை சொல்லறது. ஆனா இங்கே வரவாளுக்கு இது புரிய மாட்டேங்கிறது! ஏதேதோ செய்யறதா சொல்லறா!”

சுப்பராமையாவின் குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பினர். குழந்தைகள் சொல்லிக்கொண்டு போக வந்தனர். அப்போது வழக்கமாக பகவான் மலைக்குப் போகும் நேரம். குழந்தைகள் நமஸ்கரித்து நாங்க எங்க வீட்டுக்கு போறோம்என்றனர்.
பகவான் சந்தோஷமாக சரி, நீங்க உங்க வீட்டுக்கு போங்க. நானும் என் வீட்டுக்குப்போறேன்என்றபடி மலைக்கு கிளம்பினார்.

சுப்பராமையா பகவானிடம் குரு அருள் என்கிறது ப்ரத்யேகமா என்ன? என்று கேட்டார்.
இப்போ..... யாருக்கு ஆத்ம ஞானம் வேணும்ன்னு விசாரிச்சாலும், இல்லை யார் ஆத்ம ஞானம் அடையப்போறான்னு விசாரிச்சாலும் நான் இந்த உடம்பு என்கிற தனித்தன்மையும் போயிடும்; கூடவே நான் இன்னும் ஆத்ம ஞானம் அடையலேங்கிற அஞ்ஞானமும் போயிடும்! இதான் குருவோட ப்ரத்யேக அருள்! குரு செய்யறது நான் ஞானமடையலே என்கற மயக்கத்தை போக்கறதுதான். ஆத்ம ஞானம் தரது குருவாலேயும் முடியாது; கடவுளாலேயும் முடியாது!
குருகிட்டே ஆத்ம ஞானம் கொடுங்கோன்னு கேட்கிறது என்னை எனக்கு கொடுங்கோன்னு கேக்கிற மாதிரிதான். குருவையும் தனி ஆளா பாக்கிறேள். அவர் உங்களைவிட வேற இல்லைஎன்றார்.


No comments: