Pages

Monday, April 27, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 16


சுப்பலக்‌ஷ்மி அம்மாள் டவுனுக்கு போய் வரும்போதெல்லாம் சிறிது உலர் திராட்சையுடன் திரும்புவார். பகவானுக்கு சமர்ப்பித்து நமஸ்கரிப்பார். ஒரு முறை இப்படி சமர்ப்பித்த போது பகவன் கடுமையானார்.
எதுக்கு இந்த பக்தி வேஷம் எல்லாம்? யார்கிட்ட கத்துண்டே? நீ பாட்டுக்கு இயல்பா இருக்க வேண்டியதுதானே? சுத்தமான ஹ்ருதயமும் சிரத்தையும்தான் வேணும். இப்படி நடிச்சு உனக்கு என்ன கிடைக்கப்போறது? இப்படி நடிச்சு கள்ளக்கும்பிடு போடறவாளை எனக்கு சுத்தமா பிடிக்காது. ”
என்ன நமஸ்காரம் வேண்டி இருக்கு? நான் உள்ளே வந்தா வெளியே போனா ரொம்ப பவ்யமா எழுந்து நிக்கறது! மத்தவா யாரும் அவா பாட்டுக்கு உக்காந்து இருந்தா அவாளையும் எழுப்பறது. நான் என்ன புலியா சிங்கமா பயந்து எழுதிருக்க?”
முருகனாரை பார்த்து மேலும் சொன்னார்: “இவா எல்லாம் என் சிஷ்யாளாம்! சொல்லிண்டு திரியறா! செய்யறது எல்லாம் சேஷ்டை! ஒரு கதை இருக்கு. வைஷ்ணவ சம்பிரதாயத்திலே ஒரு குரு இருந்தார். அவரோட சிஷ்யா எல்லாம் சேந்துண்டு அவரைப் பட்டினப் ப்ரவேசம் பண்ணினா. வழி எல்லாம் ஆசார்ய கோஷம். எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு குழி வெட்டி வெச்சிருந்தா. அதுகிட்ட பல்லக்கிலேயே கூட்டி வந்து இறக்கினா. அப்புறம் அவரைப் பாத்து எம்பெருமானாரே! தாங்களே குழிக்குள்ள எழுதருறேளா இல்லை நாங்க எழுந்தருளப் பண்ணட்டுமா?’ ந்னு கேட்டாளாம்.”
முதல்ல இங்கே வரப்போ எல்லாரும் நல்லாத்தான் இருக்கா. ரொம்ப சிரத்தையோடத்தான் வரா. அப்பறம் எல்லா சேஷ்டையும் வந்துடறது. அவா போடற கும்பிடுக்கெல்லாம் ஸ்வாமி ஆடணும். அவா பண்ணற சேஷ்டை எல்லாத்தையும் அவர் பொறுத்துக்கணும்; இவாளை தலையில வெச்சிண்டு திரியணும். அதான் எல்லாருக்கும் தேவைப் படறது.”
இப்படி பொரிந்து தள்ளிய பிறகு முருகனார் உட்பட யாரும் பகவானுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில்லை.

பலராம ரெட்டி ஒருநாள் மாலை பகவானிடம் அரவிந்தரின் உபதேசத்தின் ஈர்ப்பே காயசித்தி அடையலாம் என்கிறதுதான்என்றார். அதற்கு அப்போது பகவான் பதில் ஏதும் சொல்லவில்லை. அடுத்த நாள் காலை பலராமரெட்டி நமஸ்கரித்து அமர்ந்தபோது அவரை நோக்கிச் சொன்னார்: “கும்பகோணத்துல சி.வி.வி. ராவ் ந்னு ஒரு யோகி. காய கற்பம் பண்ணிக்கொண்டதா சொன்னார். அதோட இல்லாம டாக்டர் அன்னிபெசண்டுக்கும் காயகற்ப ரகசியத்தை சொல்லித்தறதா பகிரங்கமாவே அறிவிச்சார். ஆனா அன்னிபெசண்ட் போய் பாக்கிறதுக்குள்ளே காலமாயிட்டார்! ” என்றார்.


No comments: