இறுதி நாளன்று காலை பகவான் சிவானந்தஸ்வாமியைப் பார்த்து ‘சந்தோஷம்’ என்றார். அனைவரும் புரியாமல் கவலையுடன் நின்றனர். சிவானந்தஸ்வாமிக்கு மட்டும் புரிந்தது! தம் பாக்கியம் நிறைவுற்றது என நினைத்தார். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.மற்றவர்கள் விழிப்பதை பார்த்து பகவான் “அதான் ஓய்! வெள்ளக்காரன் தேங்க் யூ ந்னு சொல்லுவான். நாம சந்தோஷம் ந்னு சொல்லுவோம்!” என்றார்.
பகவானின் அந்திம தினம் ஏப்ரல் 14. 1950. அன்று காலை முதலே ஜனங்கள் தரிசித்து சென்ற வண்ணம்
இருந்தனர். ஓரிரு நொடிகள் மட்டுமே தரிசிக்க முடிந்தது. ஒரு இளம் தம்பதியினர் தம் 3 வயது பெண் குழந்தையுடன்
வரிசையில் நின்றனர். கணவன் வேறு வரிசையில் போய்விட்டான். மனைவி குழந்தையுடன் நின்றார். அவளது முறை வந்தது. குழந்தையை கீழே இறக்கிவிட்டு நமஸ்கரித்தாள். நகர்ந்தாள்.
குழந்தை தன் சிறு கைகளை கூப்பி ‘நமஸ்தே!’ என்றது; நகரவில்லை! கூப்பிய கைகளை பிரிக்கவில்லை. மீண்டும் ‘நமஸ்தே’ என்றது. கூட்டம் ஆட்சேபித்ததால் தாய் குழந்தையை பிடித்து
இழுத்தாள். குழந்தை பிடிவாதமாக அங்கேயே ‘நமஸ்தே’ என்றபடி நின்றது!
பகவானை கிடத்தி இருந்தார்கள்! கண்கள் மூடி இருந்தன. யாரையும் பார்க்கும் சாத்தியக்கூறுகள் இல்லை. இது தெரிந்து பெரியவர்கள் ‘குழந்தையை தூக்குங்க’ என்றார்கள். குழந்தையோ இன்னும் பிடிவாதமாக ‘நமஸ்தே’ என்றபடி நின்றது! சிறு களேபரமே ஏற்பட்டது. இது நடந்து கொண்டு இருக்கையிலேயே குழந்தையின் கண்களில்
சந்தோஷம்! பகவான் தலை மெதுவாக குழந்தையை நோக்கி திரும்பியது. உதடுகள் மெதுவாக அசைந்து ‘நமஸ்தே’ என்றன. குழந்தை சந்தோஷமாக தாயுடன் சென்றுவிட்டது!”
- இந்த தொடரின் பதிவுகள் நிறைந்தன-