முதலியார் பாட்டி தில்லையாடி என்னும் கிராமத்தில் தன் மகன் மருமகளுடன் வசித்தவர். அங்கே ஒரு சாதுவுக்கு சேவை செய்து வந்தனர். அவர் விதேகமாகும் போது "அருணாசலத்துக்கு போங்க. அங்கே இதைவிடப்பெரிய பாக்கியம் காத்திருக்கு. பெரிய மஹானோட தரிசனமும் சேவை செய்யும் பாக்கியமும் கிட்டும்" என்று ஆசீர்வாதம் செய்தார்.
முதலியார்பாட்டி பகவானை 1910 இல் விரூபாக்ஷ குகையில்
முதன் முதலில் தரிசித்தார். அம்மாத்திரத்திலேயே ஆனந்தம்
பொங்கி வழிந்ததை உணர்ந்தார்.
ஊரில் இருந்த நிலங்களை குத்தகைக்கு
விட்டுவிட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
ஒரு வாடகை வீட்டில் வசிக்கலானார். தினசரி
பகவானுக்கும் அங்கு கூட இருந்தவர்களுக்கும் உணவளிப்பதை வழக்கமான சேவையாக
ஆக்கிக்கொண்டார்.
ஊரில் நேரடி கண்காணிப்பு இல்லாததால்
குத்தகைதாரர்கள் ஏமாற்றினர். மெதுவாக நிலங்கள் கைவிட்டுப்போயின. ஆனாலும்
பகவானுக்கான சேவை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில்
திருவண்ணாமலையில் தங்குவதே சிரமமாயிற்று. இந்நிலையில் அவரது
மகன் சுப்பைய முதலியார் சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஊரை விட்டு போய்விட்டார்.
பாட்டி அப்பளம் இடுவார். வேப்பங்கொட்டை சேகரித்து,
எள் வாங்கி எண்ணை ஆட்டி விற்பார். இதில்
கிடைத்த சொற்ப பணத்தில் பகவானுக்கான சேவையை தொடர்ந்தார். 38-39 இல் மருமகளும் காலமானார். பகவானுக்கு உணவு படைப்பது
நிற்கவில்லை.
பகவான் மலையில் இருந்து இறங்கி
ரமணாசிரமத்துக்கு வந்த போது பாட்டி கையில் காசில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆனாலும்
எப்படியோ உணவு சம்பாதித்து கொண்டு வந்துவிடுவாள்.
பகவானின் அன்பர்களும் ஆசிரம நிர்வாகமும்
அவளிடம் “பாட்டி!
இப்ப ஆசிரமம் வசதியா இருக்கு. பகவானுக்கு
மட்டுமில்லே; மத்த பலருக்கும் சாப்பாடு போடற அளவுக்கு
வளந்துடுத்து. நீ ஏன் கஷ்டப்படறே? நீயும்
இங்கேயே இருந்துண்டு சாப்பிட்டு பேசாம பகவானை தரிசனம் பண்ணிண்டு இரேன்” என்று சொல்லிப்பார்த்தார்கள்.
பாட்டியோ “எவ்வளவு கஷ்டமானாலும் நான்
உசிரோட இருக்கும் வரைக்கும் பகவானுக்கு சாப்பாடு கொண்டு வருவேன். காசு இல்லைன்னா என்னய்யா! பத்து வீட்டுலே பிச்சை
எடுத்தாவது பகவானுக்கு சாப்பாடு கொண்டு வருவேன். இத்தனை
நாளும் பகவானுக்கு சாப்பாடு கொடுத்துட்டுத்தான் சாப்பிட்டு இருக்கேன். என் உசிர் இருக்கற வரைக்கும் இப்படித்தான்” என்று
கண்ணீருடன் சொல்லிவிட்டு சென்றாள்.
அது போலவே கடைசி வரை நடந்து கொண்டாள். வயதாகி கண் தெரியாத
காலத்திலும் வருவாள். ஒரு அன்பர் “கண்
தெரியாத காலத்திலே ஏன் இப்படி வரே?” என்று கேட்டார்.
“நான் பாக்க முடியலைன்னா என்னப்பா? பகவான்
என்னை பாக்குமே? அதுக்குத்தான் இப்படி வரேன்” என்றாள்.
பகவானின் கடைசி காலத்தில் பகவானை
பார்க்க விரும்பினாள். அப்போது கண் சுத்தமாக தெரியவில்லை. இருந்தாலும் போய்
பார்த்தாக வேண்டும் என்று அடம் பிடித்தாள். பிறர் பாட்டியை
ஹாலுக்கு அழைத்து வந்தார்கள். பகவானை கண்களை
சுருக்கிக்கொண்டு பார்த்தாள். “பாட்டி எனக்கு ஒண்ணுமில்லே.
நல்லா இருக்கேன்” என்றார் பகவான்.
பாட்டிக்கு திருப்தி ஆகவில்லை. வெளியே வந்து காத்திருந்தாள்.
பகவான் வெளியே வந்த போது “பகவானே நில்லு”
என்று சொல்லி கிட்டே போய் பகவானை தலை முதல் கால் வரை வாஞ்சையுடன்
தடவிப்பார்த்தாள்.
பகவான் “இப்ப திருப்தியா?” என்று
கேட்டார்.
அவளுடைய கடைசி நாள். உணவு தயாரித்து அனுப்பினாள்.
உணவு கொண்டு சென்றவர்கள் திரும்பியதும் “பகவான்
சாப்பிட்டாரா?” என்று கேட்டாள். அவர்கள்
சாப்பிட்டார் என்றார்கள். “சந்தோஷம்!” என்று
சொல்லி சாய்ந்துவிட்டாள்.
பகவானுக்கு தகவல் போயிற்று. பகவான் குஞ்சு ஸ்வாமி மற்றும்
சில பக்தர்களிடம் ஒரு முக்தனுக்கு உரிய முறையில் அவளை சமாதி வைக்க பணித்தார்.
எச்சம்மாள் பாட்டி மறைந்த போது “இன்னும் முதலியார் பாட்டி
பாக்கி இருக்கா” என்று பகவான் கூறினார். இப்போது “பெரிய பொறுப்பு முடிஞ்சது!” என்றார்.
சில மாதங்களிலேயே தன் உடல் பாரத்தையும்
பகவான் இறக்கி வைத்தார்.
No comments:
Post a Comment