Pages

Thursday, July 23, 2015

இறுதி நாட்கள் - 2




பகவானின் இறுதி நாட்களில் முதல் ஆபரேஷன் முடிந்து இருந்த சமயம். பகவானை யாரும் தொந்திரவு செய்யக்கூடாது என்று டாக்டர்கள் கடுமையாக உத்திரவு இட்டு இருந்தார்கள். ஆகவே அதற்காகவே ஒருவரை நியமித்து இருந்தார்கள்.
ஒரு சாது பகவானை பார்க்க வந்தார். காவலர் காரணத்தை சொல்லி அனுமதி மறுத்தார். சாது ஆபீஸுக்கு சென்று அனுமதி கேட்டார். மறுக்கப்பட்டது. இன்னைக்கு ஊரைவிட்டு போக ஏற்பாடு ஆகியிருக்கு. அதனால் தயை செய்து அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். “டாக்டர்கள் உத்திரவு ஸ்வாமி! நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார்கள்.
சாது தனக்கு பாக்கியம் இல்லை என்று சொல்லியபடி வெளியே வந்தார். ஆச்சரியமாக வழியில் பகவான் நின்று இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆனந்தமாக பத்து நிமிடம் போல் பார்த்துக்கொண்டு நின்றனர்! பின் சாது அவர் வழியில் சென்றார். பகவான் ரூமுக்குள் போனார்.

விதேகத்துக்கு இரு நாட்களுக்கு முன் சில பக்தர்களுக்கு பகவான் இல்லாமல் தம் எதிர்காலம் குறித்த அச்சம் இருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் பகவானிடமே முறையிட முடிவாயிற்று. குஞ்சுஸ்வாமி முருகனார் போன்ற சிலருடன் பகவானை பார்க்க சென்றனர். அப்போது அங்கே டாக்டர்கள் குழுமி இருந்தனர். அவர்களுக்கு குழப்பம். எந்த மருந்தும் வேலை செய்யாத நிலை. பரீட்சார்த்தமாக மருந்து ஒன்றை உள்ளே செலுத்தலாமா வேண்டாமா?
டாக்டர் தம் குழப்பத்தை தெரிவிக்கும் வண்ணம் பகவானே! இனிமே என்ன செய்யறது? நீங்களேதான் வழி காட்டணும்!” என்றார். இது பக்தர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பதிலுக்கு காத்திருந்தார்கள்.
பகவான் மெதுவாக தன் கடைசி உத்திரவை பிறப்பித்தார்.
படிச்சதை ப்ராக்டீஸ் பண்ணுங்கோ!”



No comments: