Pages

Friday, July 24, 2015

இறுதி நாட்கள் - 3



விதேகம் அடையும் முன் சில நாட்கள் பகவான் உணவு கொள்வதை தவிர்த்தார். திரவமாகக்கூட ஒன்றுமே உட்கொள்ளவில்லை. டாக்டர்கள் அன்பர்கள் வற்புறுத்தியும் அதற்கு இணங்கவில்லை. உணவு ஏற்பது உபத்திரவம் செய்வதாக சொல்லிவிட்டார்.
நிலமை மோசமாகிக்கொண்டே போனது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அப்போது பகவான் தெலுங்கு பேசும் ஒரு சேவகரை கூப்பிட்டு மெதுவாக ஏதோ சொன்னார். அவர் வெளியே சென்று ஏதோ விசாரித்து அங்கே நின்ற ஒரு பெண்மணியிடம் ஏதோ வாங்கி வந்தார். பொட்டலத்தை பிரிக்க அதில் கொஞ்சம் திராட்சை, கற்கண்டு, ஒரு துண்டு ஆகியன இருந்தன. பகவான் திராட்சை கற்கண்டில் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் உணவு கொள்ளாமலே இருந்தவர் இதை வாயில் போட்டுக்கொண்டதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். துண்டால் தன் பாதங்களை துடைக்கச்சொன்னார். மிகுந்த சிரமத்துடன் தன் பாதங்களை அதற்கு வாகாக வைத்துக்கொண்டார். பின் மிகுந்த கற்கண்டு திராட்சை துண்டு ஆகியவற்றை அந்த பெண்மணியிடம் தரச்சொன்னார்.

சேவகர் நடந்ததை சொல்லி அந்த பெண்மணியிடம் அவற்றை கொடுத்த போது அவர் தேம்பித்தேம்பி அழுதார்.

அவர் பகவானின் நீண்ட நாள் பக்தையான விஜயவாடா மஹா லக்‌ஷ்மி அம்மாள். பகவான் ஆபரேஷன் செய்து கொண்டதைக்கேட்டு ஓடோடி வந்து தரிசித்து விட்டு சென்றார். பின் உடல்நிலை இன்னும் சீர்குலைந்து விட்டது என்று கேள்விப்பட்டு கடைசியாக ஒரு முறை தரிசனம் செய்து போக வந்தார். வரும்போது திராட்சை கற்கண்டு துண்டு ஆகியவற்றை கொண்டு வந்தார். துண்டை பகவான் பாதங்களில் சாற்றி எடுத்து வாழ்நாள் முழுதும் பூஜை செய்ய நினைத்தார். பார்வை பட்ட திராட்சை கற்கண்டை பிரசாதமாக எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆனால் இங்கே வந்து சேர்ந்த போது நிலைமை மோசமாக இருந்தது. தரிசனத்துக்கு மட்டுமே அனுமதித்துக்கொண்டு இருந்தார்கள்.அதற்கே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து இருந்தனர். இதனால் இவருக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. ஒன்றும் சொல்ல முடியாமல் கொண்டு வந்ததை என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு இருந்த போதே சேவகர் வந்து பகவான் சொல்லியதாகச்சொல்லி அவர் கொண்டு வந்ததை கேட்டார்!

பகவானின் இறுதி நாட்களில் தரிசனம் செய்ய நின்றிருந்த நெடும் வரிசையில் ஆச்சரியமாக ஒரு திருவண்ணாமலைவாசி நின்று இருந்தார். பெயர் மங்காராம். அவர் வட்டிக்கு பணம் கடன் கொடுப்பவர். அவரை யாருக்கும் பிடிக்காது. ஏனேனில் எல்லோரிடமும் அவர் கடுமையாகவும் திமிருடனும் நடந்து கொள்வார். ஆசிரமத்தின் அருகாமையில் அவர் அடாவடிகளில் ஈடுபடுவாரே தவிர ஒரு போது ஆசிரமத்துக்குள்ளே வந்ததில்லை.
வரிசை நீண்டு இருந்தமையால் ஓரிரு வினாடிகளே பகவானை தரிசனம் செய்ய முடிந்தது. மங்காராம் முறை வந்தது. அவர் பகவானின் காலடியில் ஒரு சீட்டை வீசினார்; நகர்ந்து விட்டார். பகவான் அந்த சீட்டை எடுத்து படிக்கச்சொல்லி சேவகரிடம் கேட்டார். பின் மங்காராமை அழைத்து வரச்சொன்னார். அவரை கருணையுடன் பார்த்து சரி என்பது போல தலையாட்டினார்.
சீட்டில் பகவானே காப்பாத்து!” என்று எழுதி இருந்தது!
 

No comments: