சுப்பலக்ஷ்மி அம்மாள் ஆசிரம சமையலறையில் சேவை செய்ய ஆரம்பித்தார். பகவானிடம் ஆசிரம நிர்வாக குறைகளைக் கூறத் துவங்கினார். பகவான் இடை மறித்து “இதை எல்லாம் சொல்லத்தான் நீ நெல்லூர்லேந்து இங்கே வந்தியோ?” என்று கேட்டார்.
“நீ எதுக்கு வந்தியோ அதை மட்டும்
கவனி. இந்த குறையெல்லாம் சொல்லறது யாருன்னு பார். மத்தது கடவுள் பாரம். நீ சும்மாயிரு” என்றார்.
ஒருமுறை வடநாட்டு இளம்பெண் ஒருத்தி
ஆசிரமத்துக்கு வந்திருந்தாள். அப்போதெல்லாம் வெளிநாட்டவரோ வட நாட்டவரோ வந்தால் தங்குவதற்கு ஆஸ்போர்ன்
வீட்டுக்கு அனுப்பிவிடுவர்.திருமதி ஆஸ்போர்ன் அவளை தன் மகள்
கிட்டியின் அறையில் தங்க வைத்தார். இது கிட்டிக்கு
பிடிக்கவில்லை. காரணம் அந்த பெண் மிகவும் பதட்டத்துடனும்
விசனத்துடனும் எதிலும் பிடிப்பில்லாமலும் இருந்தாள். சினேகித
பாவம் இல்லாதது கிட்டிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அந்த பெண்மணியுடையது சோகக்கதை. வீட்டு எதிர்ப்பை மீறி காதல்
திருமணம் செய்து கொண்டாள். சில நாட்களிலேயே அவள் எதிரிலேயே
கணவன் சுறாவால் கொல்லப்பட்டான்.இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு
ஆசிரமமாக போய்க்கொண்டு இருக்கிறாள். எல்லாரிடமும் ஒரே
மாதிரியான கேள்விகளை கேட்பாள். "எனக்கு என் இப்படி
நடந்தது? இது அநியாயமில்லையா? காரணம்
இல்லாமல் கடவுள் ஏன் இப்படி தண்டிக்கிறார்?” யாராலும்
அவளுக்கு சமாதானம் சொல்ல முடியவில்லை. அவளது உக்கிரம்
வளந்துவிட்டது. இப்போது ரமணாசிரமத்துக்கு வந்து
சேர்ந்திருக்கிறாள்.
கிட்டியை அவளது தாயார் அழைத்து பகவான்
இருக்குமிடத்தை காட்டும் படி சொன்னார்.
கிட்டி வேண்டா வெறுப்பாக செய்தாள். கூட
போகாமல் ஐந்தடி முன்னாலேயே சென்று இடத்தை சுட்டிக்காட்டிவிட்டு
விளையாடப்போய்விட்டாள்.
உணவுக்கான மணி ஒலித்தபோதுதான்
கிட்டிக்கு அந்த பெண்ணை மறுபடி வீட்டுக்கு அழைத்துப்போக வேண்டும் என நினைவு வந்தது! வேண்டா வெறுப்பாக
அழைக்கச்சென்றாள்.
பெரும் ஆச்சரியம்! அந்த பெண்ணின் முகத்தில் பெரிய
மாற்றத்தை கிட்டி உணர்ந்தாள். அந்த சாந்தமும் ஆனந்தமும் அவளை
அழகாக காட்டின!
இப்போது கிட்டி அவளது கைகை பற்றி
அழைத்துப்போனாள்! வீட்டுக்குப்போனதும்
’தன் அம்மா என்ன ஆயிற்று என்று கேட்பாள்; தெரிந்து கொள்ளலாம்’ என்று அங்கேயே நின்றாள்.
அதே போல திருமதி ஆஸ்போர்ன் ஆவலுடன் 'என்னவாயிற்று?' என்று கேட்டார்.
அந்த பெண் சொன்னது: “நான் ஹாலுக்குள்ளே போனேன்.
அங்கே உட்கார்ந்தேன். பகவான் என்னைப்பார்த்தார்.
அவர் கண்களில் கருணை தவிர வேறு ஏதுமில்லை. என்
வேதனை கோபம் கேள்விகள் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை! எதுவுமே
இப்ப முக்கியமா தோணலை. நான் ஒரு வார்த்தையும் பேசலை. பகவானும் ஒரு வார்த்தையும் பேசலை”
No comments:
Post a Comment