Pages

Tuesday, March 13, 2018

அந்தணர் ஆசாரம் - 23 - பகல் 2 ஆம் பாகம்





ப்ரஹ்ம யக்ஞத்துடன் பகலின் முதல் பாகத்தில், அதாவது சூர்யோதயத்துக்கு பின் வரும் முதல் மூணே முக்கால் நாழிகைகளில், அனுஷ்டிக்க வேண்டிய தர்மங்கள் முடிந்தன. இனி இரண்டாம் பாகம்.வேத சாத்திரங்களை சிந்தனம் செய்ய வேண்டும். சிஷ்யர்களுக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். பூஜைக்கான புஷ்பங்கள், ஹோமங்களுக்கான ஸமித், தர்ப்பைகளை க்ரஹிக்கலாம். துளசியை க்ரஹிக்க தனி மந்திரங்கள் இருக்கிறன. அவற்றை சொல்லிக்கொண்டு க்ரஹிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி மன்வாதிகள், (மாதப்பிறப்பு) யுகாதிகள், மத்யாஹ்னத்துக்குப்பிறகு, ஆகிய வேளைகளில் துளசி க்ரஹிக்கக்கூடாது. அதே போல ஸங்க்ரமணம், அமாவாசை, பௌர்ணமி, த்வாதசீ, இரவு சந்த்யா காலம் ஆகிய காலங்களும் விலக்கத்தக்கவை. மீறி க்ரஹித்தால் விஷ்ணுவின் சிரசை ஹிம்சித்த தோஷம் உண்டு என்கிறது சாஸ்த்திரம்.
காலை ஏழரை நாழிகைக்கு மேல் பதினொன்றரை நாழிகைக்குள் செய்ய வேண்டியன சொல்லப்படுகிறது.
க்ருஹஸ்தனால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தாய், தந்தை, குரு, பத்னீ, குழந்தைகள், தாசன், அண்டிப்பிழைப்பவன், அப்யாகதன், அதிதி, அக்னி என்கிறார் ஹாரீதர். மேலும் ஞாதி (பங்காளி), பந்து, பணமில்லாதவன், பந்துக்களால் கைவிடப்பட்டவன், தரித்திரன் இவர்களும் கூட ரக்‌ஷிக்கத்தகுந்தவர்கள் என்கிறார். இவர்களை போஷித்து காப்பாற்ற தர்மமான வழியில் பணம் சம்பாதிக்க இந்த நேரத்தை செலவிட வேண்டும். தார்மீகமான ராஜாக்களை அண்டும்படி ஹாரீதர் சொல்கிறார். ஆனால் இந்த கால கட்டத்தில் ராஜாக்களே இல்லாமல் போய்விட்டதால் மற்ற தர்ம வழிகளில் திரவியம் சம்பாதிக்கலாம். இப்படி சம்பாதித்து தன்னால் ரக்‌ஷிக்கத்தகுந்தவர்களை ரக்‌ஷிப்பது புண்ணியம்; நல்ல லோகங்களை அடையலாம் என்கிறார் ஹாரீதர். சம்பாதித்து தன் வயிறை மட்டுமே வளர்க்கிறவன் செத்தவன் போலவாம்.

No comments: