Pages

Wednesday, March 7, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் - 3





ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக்கறோம்?
ரெண்டு பேர் இருந்தா அங்க பத்து பிரச்சினை இருக்கும். லோகத்தில என்ன ஜனத்தொகை? எத்தனை பிரச்சினை இருக்கும்? இதுக்கெல்லாம் கவலைப்பட்டு பிரயோசனமில்லை. சில பிரச்சினைகள் அவ்வப்போது மீடியாவோட பசிக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப தலைதூக்கும். அப்புறம் காணாமப்போகும். ஏன், பிரச்சினை தீர்ந்ததுன்னா? இல்லை. அது அப்படியேத்தான் இருக்கும். வேறு தேவைகள், ஃபோகஸ் மாறுதல்! சிரியால வருஷக்கணக்கா ஒரே மதத்தின் இரண்டு பிரிவினர் அடிச்சு கொன்னுக்கறாங்க. திடீர்ன்னு இப்ப அது கவனத்துக்கு வருதுன்னா அது ஒரு தேவை. போட்டோஷாப் செஞ்சு படங்கள் போட்டு கவனத்தை ஈர்த்து ரேட்டிங் வாங்கற சமாசாரம்.
இதுல இருந்து எப்ப மீளப்போறோம்? லோகத்து பிரச்சினை எல்லாத்தையும் என்னால தீர்க்க முடியாது; அது என் வேலையும் இல்லை. என்னை சுத்தி நடக்கற சில விஷயங்களில் ஏதேனும் செய்ய முடியலாம். அது அவசியமான்னு பார்க்க வேண்டி இருக்கு.
எல்லா நல்லது கெட்டதும்- அது எவ்வளவு மோசமா தோணினாலும்- பகவானோட ப்ளான்லதான் நடக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற படி அவரவர் கர்மாவை அனுபவிக்கிறார்களே ஒழிய வேறு ஒன்றுமில்லை. இதில் நம் புரிதல் திடமாக இருந்தால் ஒழிய நிம்மதிக்கு வழியே இல்லை. நடப்பதில் நாமாக மூக்கை நுழைக்காமல் நாம் செய்ய வேண்டியது ஏதேனும் இருந்தால் அதை பகவான் நிச்சயம் செய்ய வைப்பான் என்கிற புரிதலோடு நடப்பதை வெறுமே கவனிக்க வேண்டும். சினிமா பார்க்கிற மாதிரி என்ன சோகம் சந்தோஷம் இருந்தாலும் அதில் முழுக்க அழுந்தி விடாமல், 'நடக்க வேண்டியது நடக்கவே நடக்கும், நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது' என்ற நிச்சயத்தோட பார்க்கக்கத்துக்கொண்டு விட்டால் நலம்!

No comments: