Pages

Wednesday, December 5, 2018

ஞானாம்ருதம் - 2





இப்படி செய்ய முடியுமான்னு நினைக்கலாம். வள்ளலார் பாடி இருக்கார். மரணமில்லா பெருவாழ்வு வாழலாமே! நான் அடைஞ்சிருக்கேன்பா, உன்னாலேயே முடியும். நீயும் செய்யேன்னு கெஞ்சரா மாதிரிதான் பாட்டு இருக்கும்.
விவேகானந்தர் இளைஞனா இருந்தப்ப இப்படியேதான் கேட்டுண்டு அலைஞ்சார். கடவுளை பாத்திருக்கீங்களா? முதல்ல ஒத்தர் காட்டிக்கொடுத்தது நபீந்த்ரநாத் தாகூரோட அப்பா மஹரிஷி தேவேந்திரநாத் தாகூர். கங்கையில் ஒரு ஹவுஸ் போட்ல உக்காந்து த்யானம் பண்ணிண்டு இருக்கார். நரேந்திரன் 15 வயசு பையன். கங்கையில் குதிச்சு நீந்தி அங்கே போய், அவரை தட்டி எழுப்பி தண்ணி சொட்ட சொட்ட நின்னுண்டு கேக்கறான்: கடவுளை பாத்திருக்கீங்களா? தேஜஸோட ஒரு பையன் இப்படி ஈரத்தோட நின்னுண்டு கேட்கறதை பாத்து அவருக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு. உசந்த நிலையை அடைஞ்ச யோகியானாலும் அவருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அவர் சொன்னார் " உன்ன பாத்தா யோகி மாதிரி இருக்கு. உன் கண்களில யோக லக்‌ஷணம் இருக்கு. உன்னால் அடைய முடியும். நீ இங்க உக்காரு.” நரேனுக்கு கோவம் வந்துடுத்து. நான் கேட்டது நீங்க பகவானை பாத்திருக்கீங்களான்னு. இவர் பாட்டுக்கு வேற என்னவோ சொல்லிண்டு போறாரே?
இது ஒரு டெக்னிக். யார் கேள்விக்காவது பதில் சொல்ல தெரியலைன்னா அவாளை கொஞ்சம் ஸ்துதிச்சுட்டா போறும். அவா எங்கேயோ மேல போயிடுவா! என்ன கேக்க வந்தோம்ன்னு மறந்தே போயிடுவா.
நரேனுக்கு திருப்தி ஆகலை. திருப்பியும் தண்ணில குதிச்சு நீஞ்சி கரைக்கு போயிட்டான்.
அப்புறம்தான் யாரோ அவனோட காலேஜ் ப்ரொபசர், ராமகிருஷ்ணரை அறிமுகப்படுத்தறார். முதல்ல கல்கத்தால ஒரு பஜனைல வெச்சு பார்க்கறார். இனிமையா பஜன் கூட பாடினார். அப்புற தக்‌ஷிணேஸ்வர் போய் ராமகிருஷ்ணரை பாத்து இதே கேள்வியத்தான் கேட்டார். “நீங்க பகவானை பாத்திருக்கீங்களா?”
அவர் இவனுக்கு புரியறா மாதிரி சொன்னார்: "பாத்திருக்கேன்பா. இதோ உன்னை இப்ப பார்க்கறதைவிட கிட்ட பாத்திருக்கேன்! ”
'சந்தம் சமீபே ரமணம் ரதிப்ப்ரதம்' ன்னு பாகவதம் சொல்லறது. ரொம்ப கிட்டே. அதவிட கிட்ட வர முடியாது. எனக்குள்ளேயே என்னோட சொரூபமாவே இருக்கற பொருளா, ஆனந்தத்துக்கு இருப்பிடமா சாந்தியோட தாமமா பகவானை நான் பாத்திருக்கேன். நான் பாத்திருக்கேன்னு மட்டுமில்லை. உனக்கு வேணுமானால் காட்டிக்கொடுக்க முடியும். அப்புறம் தனக்குத் தானே பேசிண்டாராம் ' அப்படி யாருக்கு வேணும்? யாருக்குமே ஈஸ்வரன் வேண்டாம்!”
ஐஸ்வர்யத்துக்குத்தான் ஆசைப்படறாளே தவிர ஈஸ்வரனுக்கு யாரும் ஆசைப்படறதில்லையே?

No comments: