Pages

Friday, August 1, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 2

 
இந்த உலகம் / மக்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்பதில் நமக்கு இருக்கிற கற்பனை மாற வேண்டும். இந்த விஷயத்தில் சில விஷ கற்பனைகள் நமக்கு இருக்கலாம். அவை நமக்கு எதிரிகள்!
- என்னை யாருமே கேவலமாகவோ மோசமாகவோ நடத்தக்கூடாது.
- உலகம் யாருக்குக்கும் முக்கியமா எனக்கு எதிராக இருக்கக்கூடாது.
- நான் நினைச்சதை அடைய யாரும்/ எதுவும் குறுக்கே வரக்கூடாது.
- எந்த நிகழ்வும்/ யாருடைய நடத்தையும் என் குற்ற உணர்ச்சி, தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது; எனக்கு வெட்கம், அவமானம் நிகழும் படி நடந்து கொள்ளக்கூடாது.
எல்லாம் சரிதான், ஆனா நாம அதுக்கு தகுதியா இருக்கோமா என்ன? இல்லை என்கிற போது எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்கமுடியும்? நிபந்தனை இல்லாம இதை எல்லாம் எதிர்பார்கிறது சரியில்லை!
இதை வெகு நேரம் ஆராய்ந்து நம் பார்வையை மாற்றிக்கொண்டால் ஒழிய நாம் அப்படியேத்தான் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். பொதுவாக நாம் நம்மைப்பற்றி/ பிற மக்களைப்பற்றி/ உலகத்தைப்பற்றி என்ன பார்வை வைத்து இருக்கிறோம் என்பதே நம் உணர்ச்சிகளில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
ஆரோக்கியமான உணர்வுகள் வளர நாம் நம் பார்வையை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.
நம் நடத்தை கொஞ்சமாவது நெகிழ வேண்டும். ஆமாம், உலகத்தில் எல்லாமே 100% சரியாக இல்லை என்று ஒப்புக்கொள்ள முடிய வேண்டும். கொஞ்சம் பொறுமை வேண்டும். மிருக காட்சி சாலையில் எல்லா மிருகங்களும் இருக்கும் என்பது போல உலகத்தில் எல்லா வகை மக்களும் இருக்க இடமுண்டு என்று புரிய வேண்டும்.
இதை எல்லாம் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் இதை ஆராய்ந்து ஒப்புக்கொண்டு நம் பார்வையை மாற்றிக்கொள்வதை செயலில் கொண்டு வர வேண்டும்.

முதலாவதா மற்ற மக்களுடன் வாழ்வதைப் பார்க்கலாம்.
இறைவன் உலகையும் படைச்சு ஏராளமான பூச்சிகள், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், மனிதர்கள் ன்னு நிறைய உயிரினங்களை படைச்சு இருக்கார். நாம் வாழ்வதற்கு எப்படி ஒரு ரைட் இருக்கோ அதே போல அவை வாழ்வதற்கும் ரைட் இருக்கு, இல்லையா?
மனிதர்களை படைச்சதிலேயும் பல விதங்கள் ... குட்டை நெட்டை; கருப்பு சிவப்பு பழுப்பு; புத்திசாலி மந்தபுத்தி; பலசாலி சோனி; சுறுசுறுப்பு பேர்வழி சோம்பல் பேர்வழி.... லிஸ்ட் முடிவே இல்லாதது! சுருக்கமா ஒவ்வொரு ஜீவனும் தனித்துவம் வாய்ந்ததுன்னு சொல்லிடலாம். இதை ஒத்துக்கொண்டா அப்புறம் சமம், சமமில்லை ன்னு ஒரு விஷயமே கிடையாது!
நமக்கு பிடிக்குதோ இல்லையோ நாம் இவங்க கூடத்தான் வாழ்ந்தாகணும்! "உன்னை எனக்குப்பிடிக்கலை நீ ஒழிஞ்சுப்போ" ன்னு சொல்ல முடியாது. பிடிக்கலைன்னா விலகி இருக்கலாம்; கண்டுக்காம இருக்கலாம். ஆனால் நீ இருக்கக்கூடாது ன்னு சொல்ல நமக்கு ஒரு ரைட்டும் இல்லை!
சில சமயம் நமக்கு இந்த சுதந்திரம் இல்லாமல் போயிடலாம். நமக்குப்பிடிக்காதவர் கூட வாழ வேண்டி இருக்கலாம். அது வாழ்கைத்துணையோ, பக்கத்து வீட்டுக்காரரோ, அலுவலக சக ஊழியரோ.... இவர்களுடன் நாம் உறவாடும் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இந்த சமயத்தில்தான் நமக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது
 
மற்றவரை அவருடைய குறை நிறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகி விடுகின்றன!
சவிதா தினசரி அலுவலக பேருந்தில் வேலைக்குப்போகிறார். பஸ் ஏறும்போது ட்ரைவருக்கு குட் மார்னிங் சொல்கிறார். அந்த ட்ரைவர் பதிலுக்கு ஒண்ணும் சொல்வதில்லை. தினசரி இது நடப்பதை பார்த்த கவிதா அவரை கேட்கிறார்: என்ன திமிர்? பதிலுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லலைனாலும் இப்படி ஒரு ரெஸ்பான்ஸும் இல்லாமலா இருப்பான் ஒரு மனுஷன்? நீ ஏன் தினசரி இவனுக்கு குட் மார்னிங் சொல்கிறாய்?
சவிதா சிரித்துக்கொண்டே சொன்னார்: எனக்கு குட் மார்னிங் சொல்லத்தோன்றுகிறது, அதனால் சொல்கிறேன்; பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து சொல்லவில்லை! அவருக்கு இது பழக்கமில்லாமல் இருக்கலாம்; அவர் இயல்பாகவே சிடுமூஞ்சியாக இருக்கலாம்; நாகரீகம் தெரியாமல் இருக்கலாம். வேண்டுமென்று என்னை அவமானப்படுத்த இப்படி செய்வதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு நல்ல நடத்தை இல்லை என்பதற்காக என் நன்நடத்தை ஏன் இல்லாமல் போக வேண்டும்?
இதில் ஒவ்வொரு வரியிலும் ஒரு விஷயம் இருக்கிறது!
பார்வை சரியாக இருந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகிவிடும் என்பது புரிகிறதா?

 

No comments: