அண்ணாமலை
ஸ்வாமி ஓய்வு எடுப்பதை பகவான் விரும்பியது இல்லை. ஒரு நாள் அண்ணாமலை ஸ்வாமியின்
காலில் வலி கண்டது. சுருக் சுருக் என்று ஆணியால் அடிப்பது போல இருந்தது. ஓய்வு
எடுக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அன்று பகவான் எக்கச்சக்க வேலைகளை
செய்யச்சொன்னார். வலியை பொறுத்துக்கொண்டு அண்ணாமலை எல்லா வேலைகளையும் முடித்தார், ஒன்றைத்தவிர. அதை பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தார். பகவானிடம் போய்
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டதாக சொன்னார். பகவான் அவர் செய்யாத வேலையை
குறிப்பிட்டு அதை முடித்தாயிற்றா என்று வினவினார்.
அண்ணாமலை
வலி காரணமாக செய்யவில்லை என்றும் வலி சரியானதும் செய்து முடிப்பதாகவும் சொன்னார்.
பகவானோ “ முதல்லே போய் அந்த வேலையை முடி. வேலையை ஆரம்பிச்சா வலி சரியாகும்” என்றார்.
அண்ணாமலையும்
போய் அந்த வேலையை துவக்கினார், வலியும் போய் விட்டது!
அண்ணாமலைஸ்வாமி
கடப்பாரையால் குழி தோண்டிக்கொண்டு இருந்தார். பகவான் அங்கே வந்து “நீயே இதை செய்யறியா? இல்லை யாரேனும் செய்யச்சொன்னாங்களா?” என்று கேட்டார். அண்ணாமலை சின்னஸ்வாமி செய்யச்சொன்னதாக சொன்னார். பகவான் முகம்
மாறியது. “அவன் வேலை கொடுக்கறானா? ஏன்?” என்று சொல்லியபடியே சென்றுவிட்டார்.
சிறிது
நேரம் சென்று வந்தா யோகி ராமையா “அண்ணாமலை ரொம்ப வேலை பாக்கறார்.
இளைச்சுட்டார். அவருக்கு ஓய்வு கொடுக்கணும்” என்றார்.
பகவான் “சரி, ஓய்வு கொடுக்க வேண்டியதுதான்” என்றார்.
இரு
நாட்கள் சென்றன. பகவான் குளிக்கும்போது அண்ணாமலைஸ்வாமியும் மாதவஸ்வாமியும் உதவிக்கு
இருந்தனர். குளியல் முடிந்த பிறகு மாதவஸ்வாமி “கஞ்சா
லேகியம் சாப்பிடறவங்க ஆனந்தம்ன்னு சொல்லறாங்களே! அது எப்படி இருக்கும்? ஆத்மானந்தமும் அதுவும் ஒண்ணா? என்று கேட்டார்.
பகவான் “அது தப்பான பழக்கம்” என்று சொல்லிவிட்டு கஞ்சா லேகியம்
சாப்பிட்டவர்கள் செய்வது போல அண்ணாமலைஸ்வாமியை கட்டிப்பிடித்து “ஆனந்தம் ஆனந்தம்” என்றார். இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்தார்.
அண்ணாமலை உணர்வற்றுப்போனார். உணர்வு திரும்பிய போது பகவானும் மாதவஸ்வாமியும்
சாப்பிடப்போய்விட்டனர்! அண்ணாமலைக்கு மணி அடித்ததோ இவர்கள் சாப்பிடப்போனதோ தெரியவே
இல்லை!
அண்ணாமலை
சென்று உணவு உண்டார். பின் பகவானை தேடிப்போனார். அவர் மலையில் ஒரு பாறை மீது
உட்கார்ந்து இருந்தார். “நான் ஆசிரமத்தைவிட்டு போயிடலாம்ன்னு
இருக்கேன். பலாக்கொத்தில் இருந்து கொண்டு தியானம் பண்ணாலாம்ன்னு இருக்கேன்!” என்றார். பகவானும் “ஆஹா! ரொம்ப நல்லது, ரொம்ப நல்லது!” என்றார்.
அண்ணாமலை
தன் பொறுப்புக்களை ஆபீசில் ஒப்படைத்துவிட்டு பலாக்கொத்தை நோக்கி நடந்தார்!
அண்ணாமலைஸ்வாமி
மலைக்குகையில் நாளெல்லாம் தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஒரு குகையை
கண்டு பிடித்து வசிப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்தார். அதி காலையிலேயே
விழித்துக்கொண்டு உணவு தயார் செய்து கொண்டு குகைக்குச் சென்றார். அது என்னவோ
சரிப்படவில்லை. யாரேனும் வந்து தொந்திரவு கொடுத்தப்படி இருந்தார்கள். தவம்
தடைப்பட்டதால் பகவான் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்தார்.
பகவானிடம்
போய். “யாரும் வராத இடத்திலே இருந்துகொண்டு தபஸ் பண்ணப்
பாக்கிறேன். கொஞ்சம் உணவு என் முயற்சியே இல்லாம கிடைக்கணும். எந்நேரமும் கண்ணை
மூடி உலகத்தை பாக்காம தியானம் செய்யணும். இப்படி ஒரு ஆசை உள்ளே வளந்துகொண்டே
இருக்கு. இது சரியா பகவானே?” என்று கேட்டார்.
பகவான்
நிதானமாக பதில் சொன்னார். “இப்படி ஆசை எல்லாம் பட்டா
அதுக்குன்னு ஒரு ஜன்மா வரும். எங்கே வசிக்கிறே என்கிறது முக்கியமில்லே. மனசு
ஆத்மாவிலே இருக்கணும். அவ்வளோதான். ஆத்மாவுக்கு அந்நியமா ஒரு இடமும் இல்லை.
நினைப்புன்னு ஒண்ணு இருந்தா குகை கூட ஜனக்கூடம் இருக்கிற இடமே.
கண்ணை
மூடித்தான் தியானம் பண்ணனும்ன்னு ஒண்ணுமில்லே. மனசை மூடணும். மனசே உலகம். நியாய
வழியிலே போறவா இப்படி எல்லாம் ப்ளான் பண்ண மாட்டா. கடவுள் விட்ட வழியிலே போவா.
கடவுள் நம்மை உலகத்துக்கு அனுப்பும் முன்னே இவனுக்கு இன்னதுன்னு நிர்ணயம்
பண்ணிதான் அனுப்பறார்.” என்றார்.
பலாக்கொத்திலேயே
தங்கி இருந்த அண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்து போகும் வழியை முட்களை அகற்றி சீர்
செய்தார். பாதை சுத்தமாயிற்று. அன்றிரவு பகவானைப் பார்க்கப்போனார்.
பகவான் “பலாக்கொத்து பாதையை யார் சுத்தம் பண்ணா?” என்று
கேட்டார்.
“வழி எல்லாம் முள்ளா இருந்ததாலே நாந்தான் செய்தேன்” என்றார் அண்ணாமலை.
“செஞ்சா அத்தோட அதை மறந்துடணும். நான் செஞ்சேன், நான் செஞ்சேன்ன்னு ஏன் அதையே மனனம் செஞ்சுண்டு இருக்கே?” என்று கடுமையுடன் கேட்டார் பகவான்.
பகவானுக்கு
சேவை செய்தோம் என்ற பெருமிதம் இருந்ததோ என்னவோ!
தொடர்ந்து
“ செஞ்சதை அப்பவே மறந்துடணும்; திரும்பிப்
பார்க்கப்படாது. அப்படி இருந்தா உனக்கு நல்லது நடக்கும்” என்றார்
பகவான்.
அண்ணாமலை
இரவு சென்று பகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அது மிகவும் பிடித்து
இருந்தது. பகவானும் எப்போதுமில்லாத கருணையுடன் இருப்பார்.
சில
நாட்கள் சென்றன. அண்ணாமலை போகும்போது பகவான் வழக்கத்துக்கு மாறாக ஒரு துண்டால்
தலையை மறைத்துக்கொண்டு இவரை பார்ப்பதை தவிர்த்தார். இதே போல தொடர்ந்து நடந்தது.
மூன்றாம் நாள் பொறுக்க முடியாமல் அண்ணாமலை கேட்டேவிட்டார். “பகவான் ஏன் இப்படி முஸ்லிம் பெண்பிள்ளைகளைப்போல நான் வரும்போதெல்லாம் முகத்தை
மூடிக்கிறீங்க?”
“நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்! நீ ஏன் பேசறே?”
அண்ணாமலை
திகைத்துப்போனார். ஹாலை விட்டு வெளியேறி மரத்தடியில் நின்றார். ஒன்றுமே
புரியவில்லை.
சற்று
நேரத்தில் பகவான் அழைப்பதாக வந்து சொன்னார்கள். உள்ளே வேறு யாருமில்லை. பகவான்
கேட்டார்: “நீ நாஸ்திகனா?”
ஏன்
இப்படி கேட்கிறார்? புரியவில்லை.
“கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகன் நிறைய பாபம்
செய்யலாம். அதனால துன்பம் அனுபவிப்பான். நீ பக்குவமானவன். பக்குவமான பின் கடவுள்
வேறே நீ வேறே ந்னு நினைக்கிறது பெரிய பாபம். நாஸ்திகனுக்கு சமம். அவனுக்கு
ஏற்படும் கதியே உனக்கும் ஏற்படும்.”
“நீ இனிமே இங்கே வர வேண்டாம். நீ வேற, இது வேறங்கிற நினைப்பை போக்கிக்கோ!”
அத்துடன்
அண்ணாமலை ஆசிரமத்துக்கு வருவது நின்று போனது.