Pages

Monday, May 25, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 24



1926 இல் அருணாசலம் பிள்ளைக்கு கனவு ஒன்று வந்தது. அடுத்து பிறக்கப்போகும் கன்றுக்குட்டியை ரமணாசிரமத்துக்கு விடச்சொல்லி உத்திரவாயிற்று.
அருணாசலம் பிள்ளையும் அதே போல தாயையும் கன்றையும் ஆசிரமத்துக்கு கொண்டு வந்தார்.
இதெல்லாம் எங்களுக்கு எதுக்கு?” என்றார் பகவான்.
சாமி! உத்திரவுன்னு படகு ரயில்ன்னு சிரமப்பட்டு ஏத்தி கொண்டு வந்திருக்கேன். ஏத்துக்கணும் என்றார்.
அதான் கொடுத்தாச்சே! இப்போ பகவானுதுன்னு நினைச்சு கொண்டு உம்மிடமே வைத்துக்கொள்ளும்!”
அருணாசலம் மனந்தளர்ந்தார்.
இங்கே யார் பாத்துப்பா?”
ராமநாத ப்ரம்மச்சாரி முன் வந்தார். வெள்ளிக்கிழமை வந்ததால் லக்‌ஷ்மி எனப்பெயரிட்டனர்.
தினசரி பகவான் தரிசனத்துக்கு அவள் வரும்போது அவ்வளவு வேகமாக வருவாள். வழியில் யாரும் இருந்துவிட்டால் அவ்வளவுதான்! வந்ததும் பகவான் கால்களில் தலையை வைப்பாள்.
ஆசிரமத்தில் விசேஷம் என்றால் லக்‌ஷ்மிக்கு விருந்து ஓல்ட் ஹாலிலேயே தரப்படும். சமயத்தில் கொட்டிலுக்கே கூட சென்று கொடுத்துவிட்டு வருவார்.

ஒரு நாள் ஆசிரமத்து பசுமாடு லக்‌ஷ்மிக்கு தீவனம் இல்லாமல் போயிற்று. இதை தெரிந்து கொண்ட பகவான் அன்றைக்கு மதிய உணவுக்குச் செல்லவில்லை. “எனக்கு உள்ளதை லக்‌ஷ்மிக்கு கொடுங்கோ என்றார். விஷயம் அறிந்து கொண்ட நிர்வாகத்தினர் கடையில் இருந்து தீவனம் தருவித்து லக்‌ஷ்மிக்கு கொடுத்தனர். அதன் பின்னரே பகவான் உணவுண்டார்.

1948 ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம் போல லக்‌ஷ்மிக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கழுத்தில் மாலை சார்த்தி இருந்தனர். அவள் காலை பரப்பி படுத்து இருந்தாள். வெங்கடரத்தினம் விசிறிக்கொண்டு இருந்தார். அவளுடைய இறுதி காலம்.
பகவான் கோசாலைக்கு வந்தார். தலைமாட்டில் அமர்ந்தார். அவளுடைய முகத்தை கைகளால் ஏந்தி என்னம்மா என்ன?’ என்றார். கால் மணி நேரம் கழித்து இங்கேயே இருந்தேன்னா எல்லாரும் இங்கே வந்துடுவா. அப்புறம் அம்மாவுக்கு ஆனது போல உன்னைச்சுத்தி எல்லாரும் இருப்பா. அதெல்லாம் எதுக்கு? நான் போகட்டுமா?” என்று கேட்டார்.
லக்‌ஷ்மி அமைதியாக இருந்தாள்.
என்னம்மா என்ன சொல்றே?” என்று மீண்டும் அன்புடன் கேட்டார். பின் புறப்படத்தயாரானார். “வாய்க்குள்ளே ஈ போகாமே யாராவது பாத்துக்கணும் என்றார்.
சற்று நேரத்தில் அவள் அடங்கினாள். பகவானுக்கு தகவல் போயிற்று. அவர் வந்து அருகில் அமர்ந்து ஒரு குழந்தையை சீராட்டுவது போல தலை துக்கிப்பிடித்து என்னம்மா லக்‌ஷ்மி! லக்‌ஷ்மி!’ என்று கூப்பிட்டார்.
கண்களில் நீர் கோர்த்திருந்தது! “இவளாலேதான் இந்த சம்சாரம் இவ்வளவு பெரிசாச்சு!” என்றார். எழுந்து லக்ஷ்மிக்கு நல்ல சமாதி கட்டணும்ன்னு ராமக்ருஷ்ணன் சொல்லிண்டே இருக்கான்என்று சொல்லியபடி வெளியேறினார்.
 

No comments: