சின்னசாமியின் புதல்வர் வேங்கடராமன். இவரது துணைவி நாகலக்ஷ்மி/ வேங்கடராமன் பகவானின் பணிக்காக 1938 இல் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்துவிட்டார். அப்போதெல்லாம் குடும்பத்துடன் வருவோர் தங்க ஆசிரமத்தில் வசதி இல்லாமல் இருந்தது. அதனால் குடும்பமாக வருவோர் இவரது வீட்டில் தங்குவார்கள்.
ஒரு முறை ஆசிரமத்துக்கு ஒரு தாயும்
மகளுமாக வந்தார்கள். இவரது
வீட்டில் தங்கினார்கள். மகள்
நாகலக்ஷ்மி வயதொத்தவள். இருவரும்
நட்புடன் இருந்தனர்.
ஒரு நாள் இருவரும் குளத்துக்கு
குளிக்கச்சென்றனர். குளித்து
உடை உடுத்தியபின் அந்த பெண் அணிந்த சேலையை பார்த்து கள்ளமில்லாமல் நாகலக்ஷ்மி “புடவை நன்னாயிருக்கு“ என்றார்.
ஊருக்கு திரும்பிய அந்த பெண் ஒரு
பார்சலை நாகலக்ஷ்மிக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டு சேலைகள் இருந்தன.
இந்த பார்சலை கண்ட பகவானின் முகத்தில்
கருமை ஏறியது.
அன்று மதியம் பகவான் சமையலறைக்கு வந்த
போது நாகலக்ஷ்மி நமஸ்கரித்தார். பகவான்
கண்டிப்பான குரலில் “ நாம் ஆசிரம வாழ்கைக்கு வந்துட்டோம். என்ன கிடைக்கறதோ என்ன இருக்கோ அதில த்ருப்தியா
இருக்கணும். நிறைய வசதியானவா
இங்கே வரலாம். அவா நிறைய
வசதியா உடுத்திண்டு இருக்கலாம்; வசதியா
போட்டுண்டு இருக்கலாம். அவாளை
பார்க்கிறப்ப நாமேதான் அப்படி வசதியா உடுத்திண்டு இருக்கோம்; வசதியா போட்டுண்டு இருக்கோம்ந்னு
நினைக்கணும். அப்படி
பார்த்து பழகிட்டா எதனாலேயும் பாதிப்பு இல்லாம இருக்கலாம்.
பகவான் உன்னை எப்படி வெச்சுண்டு
இருக்கானோ அப்படியே திருப்தியா இரு! எதுக்கும் ஆசைப்பட வேண்டாம். இதான் நமக்குண்டான வாழ்கை. புரிஞ்சுதா?” என்றார்.
நாகலக்ஷ்மி மனம் உடைந்து அழலானார்.
கூட இருந்தவர்கள் “அவாளாதான் அனுப்பி இருக்கா.
நாகு கேக்கலே” என்று சமாதானம் சொன்னார்கள்.
“தெரியும்! உன் நல்லதுக்குச் சொன்னேன்” என்றார் பகவான்.
ஒரு நாள் காலை முன் பின் தெரியாத
ஐரோப்பியர் ஒருவர் குதிரை வண்டியில் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். நேராக பகவானை பார்க்கச் சென்றார்.
ஒரு பேப்பரில் ஏதோ எழுதி பகவானிடம்
காட்டினார். பகவான் பதில்
சொல்லாமல் அவரையே கண் இமைக்காமல் பார்த்தார். அவரும் பகவானை பார்த்தபடி அமர்ந்தார். பகவான் கண்களை மூடினார். அவரும் கண்களை மூடிக்கொண்டார்.
ஒரு சிறு அசைவு கூட இருவரிடமும் இல்லை!
நேரம் சென்றது. மதிய உணவுக்கான ஒலி ஒலித்தது. மாதவஸ்வாமி கமண்டலத்தை எடுத்துக்கொண்டு
தயாரானார். ஆனால் பகவான்
அசையவே இல்லை. யாரும்
நெருங்க முடியாதபடிக்கு ஒளிர்ந்தார். சாப்பாட்டு ஹாலில் எல்லோரும் காத்து இருந்தார்கள். சின்னஸ்வாமி யாரிடமோ உரக்க பகவான்
காதில் பேசுவது கேட்கும்படி பேசினார். பாத்திரங்களை உருட்டி சப்தம் எழுப்பினர். பலன் இல்லை.
பன்னிரண்டு மணிக்கு பகவான் கண்களைத்
திறந்தார். கண்களில்
தெய்வீகம் பொங்கியது. எழுந்து
மாதவஸ்வாமியுடன் சாப்பாட்டுக்குச் சென்றார்.
ஐரோப்பியர் குதிரை வண்டிக்கு
திரும்பினார்.
அதன் பிறகு யாரும் அவரை பார்க்கவும்
இல்லை; கேள்விப்படவும்
இல்லை!
No comments:
Post a Comment