Pages

Tuesday, May 5, 2015

அடியார்கள் - ராமநாதன், விஸ்வநாதஸ்வாமி


நாடு எங்கும் பரவிய ப்ளேக் நோய் திருவண்ணாமலையையும் அணுகியது. ராமநாதன் பாதிக்கப்பட்டார். கந்தாஸ்ரம குகையில் படுக்க வைக்கப்பட்டார். பகவான் அவரிடன் ராமநாதா! ஒண்ணும் பயப்படாதே. அருணாசலத்துல இருக்கோம். அது போதும். நான் ப்ரதக்‌ஷிணம் போறேன். வந்துடுவேன். ஒரு பயமும் இல்லை என்று சொல்லி கிளம்பினார். கூடவே ரங்கசாமி ஐயங்கார், பெருமாள் ஸ்வாமி இன்னும் சிலரும் கிளம்பினார்கள். பச்சையம்மன் கோவிலை அடைந்தவுடன் அவர்கள் தங்களுடைய திட்டத்தை மெதுவாக சொல்லத்தொடங்கினார்கள்.
ராமநாதனுக்கு ப்ளேக். அது தொத்துவியாதி. நாம் எல்லாருமிங்கேயே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் நாங்க ஒருத்தர் போய் ராமநாதனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடலாம்.”
பகவான் முகத்தில் கடுமை ஏறியது. “நன்னா இருக்கே நீங்க சொல்லறது! அவன் சின்ன வயசுலேயே நம்மகிட்ட வந்துட்டான். நம்மைத்தவிர அவனுக்கு யாருமில்லை. நம்மை அண்டினவனை இப்படி கைவிட்டா என்ன அர்த்தம்? உங்களுக்கு பயமா இருந்தா நீங்க எல்லாரும் இங்கேயே தங்கிக்கோங்க. நான் போய் அவனை பாத்துக்கறேன். அவனுக்கு சாப்பாடு கொண்டு வரப்ப எனக்கும் கொஞ்சம் கொண்டு வந்தா போறும் என்றார்.
திட்டம் கைவிடப்பட்டது.
  
ரமணரின் அன்னை அழகம்மாளுடைய சகோதரர் ராமஸ்வாமி. பிற் காலத்தில் செல்வாக்கும் நேர்மையும் வாய்ந்த வக்கீலாக திண்டுக்கல்லில் பணி புரிந்தார். அவரது மகனே விஸ்வநாத ஸ்வாமி. இவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிட்டார்.
பகவான் அவரைப் பார்த்து கேட்டார்: நீ இங்கே வந்தது ஆத்துல யாருக்கும் தெரியுமா? லெட்டராவது எழுதி வெச்சுட்டு வந்தியா?
இல்லை பகவானே!
லெட்டர் எழுதி வெச்சுட்டுத்தான் நான் வந்தேன். இப்பவே நான் பத்திரமா திருவண்ணாமலையில் இருக்கேன்ன்னு ஆத்துக்கு ஒரு லெட்டர் எழுது.
சிறிது நாட்களில் ராமஸ்வாமி திருவண்ணாமலை வருவதாக கடிதம் வந்தது.
பகவான் விஸ்வநாத ஸ்வாமியை பார்த்து பயப்படாதே! ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய் அவர்களை அழைத்து வந்து எங்கே தங்க ஏற்பாடு ஆகியிருக்கோ அங்கே கொண்டு விடு. நீ குகைக்குப்போய் உன் ஜபத்தை விடாம பண்ணு. நான் கூப்பிடறப்ப வா. வந்து நேர அப்பாகிட்ட போய் அவர் கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணு. பேசாம ஓரமா நில்லு. மீதியை நான் பாத்துக்கறேன்.” என்றார்.
ராமஸ்வாமிக்கு பகவானை வேங்கடராமனாகத்தான் தெரியும். அவரது நிலையை அப்போது அறிந்திருக்கவில்லை.
பகவான் கல் மண்டபத்தில் அமர்ந்து இருக்கையில் அவரை பார்க்க வந்தார். பகவான் விஸ்வநாதனை அழைத்து வரச்சொன்னார். பகவான் சொல்படி அவர் வந்தவுடன் தந்தையின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். ஓரமாக நின்றுகொண்டார்.
கடுங்கோபத்துடன் ராமஸ்வாமி போதும் போதும்! கிளம்பு, ஊருக்குப்போகலாம். உன்னை கூட்டிப்போகத்தான் வந்தேன் என்றார்.
பகவான் விஸ்வநாதன் இந்த பாதைக்கு வந்துட்டானே? இறைவனே கதிங்கறானே?” என்றார்.
ராமஸ்வாமி சம்மதிக்கவில்லை.
பகவான் விஸ்வநாதன் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு அதுதான் நல்லது.” என்றார்.
ஏதோ மந்திரம் போட்டது போல ராமஸ்வாமியின் மனம் மாறியது. “விஸ்வநாதனுடைய ஆத்மிகத்துக்கு பகவான் பொறுப்பு ஏத்துக்கும்ன்னா நான் விட்டுட்டு போறேன் என்றார்.
விஸ்வநாதநோட ஆத்மிகம் என் பொறுப்பு!” என்றார் பகவான். அத்துடன் அது முடிந்தது!
 

No comments: