Pages

Thursday, May 14, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 21




பகவானுடைய இளைமைக்கால குஸ்தி சிலம்பம் விளையாட்டுத்தோழன் வெங்கட்ராமையர். ஒரு முறை குடும்பத்துடன் பகவானைப்பார்க்க வந்திருந்தார். அந்த நாள் பகவானுடன் பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து மலையுச்சிக்கு போக ஏற்பாடு ஆகி இருந்தது. மலையேறிச் செல்கையில் வழியில் ஏழு சுனையில் பகவானுடன் சிலர் சற்று இளைப்பாறினர். அந்த குழுவில் வெங்கட்ராமையரின் மனைவியும் ஒருவர். மற்றவர்கள் உச்சிக்கு போய் விட்டார்கள்.
மதிய உணவை கொண்டு வரும் வேலையை ஏற்று வெங்கட்ராமையரும் ராமநாத ப்ரம்மச்சாரியும் ஏற்று இருந்தனர். தயாரான உணவை ஒரு பெரிய அண்டாவில் நிறைய போட்டு எடுத்துக்கொண்டு அதை தூக்கிக்கொண்டார். மீதியை ராமநாதன் தூக்கிக்கொள்ள இருவரும் மலை ஏறலானார்கள். சிரமத்துடன் எடுத்துச்செல்லும் வழியில் பகவான் குறுக்கு வழியில் ஏழுசுனையை நோக்கி செல்வதை கண்டார்கள். பகவானைப் பார்த்ததுமே களைப்பு தெரியவில்லை! ‘! நமக்கு குறுக்கு வழி காட்டுகிறார் என்று நினைத்து தொடர்ந்து சென்று சீக்கிரமே ஏழு சுனையை நெருங்கி விட்டார்கள். சுனையை அடைவதற்கு முன்னரே பகவானின் உருவம் மறைந்து போயிற்று!
ஏழு சுனையை அடைந்து அங்கே பார்த்தால் பகவான் மற்றவர்களுடன் சாவகாசமாக உரையாடிக்கொண்டு இருந்தார்!
வெங்கட்ராமையர் ஆவேசமடைந்து பகவானே! எங்க முன்னாடி வழி காட்டிக்கொண்டே வந்துட்டு இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி இங்க உக்காந்து இருக்கியா?” என்று கத்தினார்.
எல்லாரும் பயந்துவிட்டார்கள்!
பகவான் ஒண்ணும் பயப்படாதீங்கோ! சரியாப்போயிடும் என்றார். சற்று நேரத்தில் வெங்கட்ராமையர் நிலைக்கு வந்தார்!

ஒரு முறை பகவான் துவையலுக்கு ஆட்டு உரலில் நிரைய அரைத்ததில் கைகளில் கொப்பளங்கள் ஏற்பட்டன. இருந்தும் பகவான் தன் செய்ய வேண்டிய வேலைகளை தானே செய்து கொண்டு இருந்தார்; யார் சொல்லியும் கேட்கவில்லை.
மறு நாள் விஸ்வநாதஸ்வாமி சீக்கிரம் ஆரம்பித்து பகவான் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டார். பகவான் வந்து பார்த்துவிட்டு விஸ்வநாதா! ஏன் இப்படி செஞ்சே?” என்று கேட்டார்.
கையிலே கொப்பளத்தோட நீங்க வேலை செய்யறதை பார்க்க முடியலே ஸ்வாமி!” என்றார் விஸ்வநாதர்.
விஸ்வநாதா! ஆரம்ப காலங்களிலே பிக்‌ஷைக்கு போவேன். இப்போ ஓசிலே கிடைக்கறது! அதுக்கு ஏதேனும் வேலை பாக்கணுமோனோ? அதான் ஏதாவது செய்யறேன். இன்னைக்கு என் வேலையை நீ பாத்துட்டே. அதனால் உன் வேஷ்டியை கொடு. துவச்சு தந்துடறேன்.” என்றார்!
பகவானின் எளிய நடத்தை மனதை குழைத்தது!

ராமஸ்வாமி பிள்ளை ஒருமுறை சாவிகளை தொலைத்துவிட்டார். தேடித்தேடி காணவில்லை. பதைபதைப்புடன் பகவானிடம் வந்து பகவானே! சாவி தொலைஞ்சுடுத்துஎன்றார்.
பகவான் சிரித்துக்கொண்டே அது எங்கேயும் தொலையலை ஓய்! அது இருக்கிற இடத்திலேதான் இருக்கு. நீர்தான் அதை வெச்ச இடத்தை மறந்துட்டீர்.”
நீர் சாவியை தொலைச்சுட்டேன்ன்னு சொல்கிறா மாதிரிதான் இங்கே எல்லாரும் ஆத்மாவை தேடி வரா. அது எப்பவும் இருக்கிறபடிதான் இருக்கு. நாம்தான் அதை மறந்துட்டோம்! அதை பல வழிகளிலே தேடறா. அதை இன்னும் முழுமையா அடையலேன்னு புலம்பறா. என்னாலே முடியலேன்னு வருத்தப்படறா.”
எப்பவுமே அதா இருந்துண்டு அதைத் தேடி அடையணும்ன்னு நினைக்கறா பாரு! அதுவே உலகத்தில் புரியாத மாபெரும் புதிர்!”

மணவாசி ராமசாமி ஐயரின் பக்கத்து வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தது. குழந்தைகள் பயந்து போனார்கள். ராமசாமி குழந்தைகளை ஆசிரமத்தில் இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தார். குழந்தை ரமணிக்கு இனம் புரியாத பயமும் பதட்டமும். ஆசிரமம் வந்தவுடன் ஒரு யோசனையும் இல்லாமல் நேரே பகவானிடம் போய் சேர்ந்தாள். அவரை கண்ட மாத்திரத்தில் பயம் விலகியது. பகவான் ரமணியை பார்த்து செத்த பொணத்தை பாத்து ஏன் பயப்படணும்? உசிரோட நடமாடற பொணத்தை பாத்து பயப்பட்டா ஒரு வேளை அதுக்கு அர்த்தமிருக்கலாம்!” என்றார்.


 

No comments: