Pages

Tuesday, May 26, 2015

அடியார்கள் - முருகனார், பலராமரெட்டி



முருகனாரின் தேகம் 1975 இல் நலிவுற்றது.ஆசிரமத்தில் டிஸ்பென்சரி அருகில் உள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார். அமாவாசை அன்று உடல்நிலை மிகவும் சீர் கெட்டது. அன்பர்கள் வந்து தரிசித்தனர். ஆக வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். ஆசிரம அன்பர் ஆஞ்சநேயலுவை கூப்பிட்டு சமாதி குழிக்கான இடத்தை தேர்வு செய்யும்படி பணித்தனர். உயிர் அடங்கியது. குழி வெட்ட ஆட்கள் வந்தனர்.
முதல் முறை காட்டில் சோண தீர்த்தத்தில் பகவான் பார்வையில் அவர் சிவத்துடன் கலந்த போது அவரும் அண்ணாமலையாரும் வெளிவந்தனர். வெளி வந்ததும் அண்ணாமலையை வணங்கினர்.
இப்போது சிவத்தில் கலந்தவர் சிவமாகவே நின்று தான் வெளி வந்ததை பார்த்தார்.
முருகனார் கண் விழித்தார் என எல்லாரும் ஆனந்தமடைந்தனர். இருப்பிடம் திரும்பினர்.
ஆஞ்சநேயலு நேரே முருகனாரிடம் சென்றவர் என்ன சாமி! உங்களுக்காக எல்லா ஏற்பாடும் பண்ணி இடத்தை மார்க் பண்ணி வெச்சு தோண்ட ஆரம்பிச்சா இப்படி எழுந்து வந்துட்டீங்களே?” என்று உரிமையுடன் கேட்டார்.
முருகனார் கவலைப்படாதே! அடுத்த வருஷம் இதே நாள் உனக்கு வேலை இருக்கு!என்றார்.
அடுத்த ஆண்டு சரியாக அதே ஆவணிமாத அமாவாசை அன்று உடலைவிட்டார். நான் வந்தாலும் போனாலும் வருபவனும் போகிறவனும் நான் இல்லைஎன்பதை மீண்டும் மெய்ப்பித்தார்.



பலராம ரெட்டி திருவண்ணாமலையிலேயே தங்கி வாசம் செய்ய ஆரம்பித்த பிறகு தினசரி அதி காலையிலேயே ஆசிரமத்துக்கு வந்துவிடுவார். ஓல்ட் ஹாலின் கதவு திறக்க காத்திருப்பார். திறக்கப்படும் போது பகவானை தரிசித்து அவர் இரவு போர்த்தி இருந்த சால்வையை மடித்து வைப்பார். இந்த சிறிய சேவையை பகவான் அனுமதித்தார். மதியமும் இதே போல பலராம ரெட்டி தயாராக இருப்பார். பகவான் முன் த்யானத்தில் அமர்ந்து இருப்பார். சில நாட்கள் சென்றன. பக்தர்கள் பலர் மதியம் மூன்றரைக்கே வர ஆரம்பித்தனர். பலராம ரெட்டிக்கு இது கஷ்டமாக இருந்தது. தான் தங்கி இருக்கும் இடத்திலேயே மதிய த்யானத்தை செய்ய நினைத்து மதியம் ஓல்ட் ஹாலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
2-3 நாட்கள் ஆயின. ஜி.வி சுப்பராமையா மதியம் ஆசிரமத்துக்கு வந்தார். பலராமரெட்டி எங்கே என்று பகவானிடம் விசாரித்தார்.
அடுத்த நாள் காலை சால்வையை மடித்துக் கொண்டு இருந்த போது பகவான் இது பற்றி பலராமரெட்டியிடம் கூறினார். பகவான்  மறைமுகமாக எப்போதும் போல மதியம் வரச்சொல்லுகிறார் என்று அவருக்கு தோன்றினாலும் மதியம் ஒல்ட் ஹாலுக்கு போகவில்லை. அடுத்த நாள் காலை சால்வையை மடிக்கச்சென்ற போது பகவான் அதை அவரிடம் தரவில்லை; தானே மடித்துக்கொண்டார்.
தன் முன்னேற்றத்துக்காக அவரது அருகில் இருப்பதை பகவான் விரும்புகிறார் என்று உணர்ந்து மீண்டும் மதிய வேளைகளில் பகவான் எதிரில் அமர்வதை தொடர்ந்தார். சால்வை மடித்து வைக்கும் பாக்கியமும் கிடைத்தது!


No comments: