அண்ணாமலை ஸ்வாமி பணியில் அமர்ந்த
மூன்று வாரங்களிலேயே அவருக்கு அங்கே இருந்த சூழ்நிலை, அங்கிருந்தவர்களின் மனநிலை
ஆகியன பிடிக்கவில்லை. பகவானை மானசீக குருவாக வைத்துக்கொண்டு
வேறெங்கும் போய் இருக்கலாம் என்று முடிவு செய்தார். ஒரு
பௌர்ணமி இரவு யாரிடமும் சொல்லாமல் இரவு ஒரு மணிக்கு கிளம்பிவிட்டார். போளூர் சாலையில் நடந்து சென்றார்.காலையில் போளூரை
அடைந்தார். பசி வாட்டியது! பிக்ஷை
எடுக்க முடிவு செய்து பல வீடுகளுக்கும் போய் கேட்டுப்பார்த்தார். எங்குமே பிக்ஷை கிடைக்கவில்லை. மாறாக திட்டே
கிடைத்தது!
வேறு வழியில்லை. போளூர் மகான் விட்டோபாவின்
சமாதிக்குச் சென்றார். அங்கு ஒரு கிழவி கொஞ்சம் கம்பங்கூழ்
கொடுத்தார். பின் நிதானமாக தன் செயலை மறு பரிசீலனை செய்தார்.
தன் முடிவு பகவானுக்கு சம்மதம் இல்லை என்று தோன்றியது. திரும்புவதற்கு முடிவு செய்தார். சிறிது தூரம் நடந்த
பின் ஒரு ஓட்டல் முதலாளி அவருக்கு உணவும் வழி செலவுக்கு சிறிது பணமும் கொடுத்தார்.
ரயில் ஏறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். நேராக
போய் பகவானை நமஸ்கரித்தார்.
பகவான் அவரைப்பார்த்து “ உனக்கு இங்கே காரியம் இருக்கு.
உனக்கு விதிச்ச வேலையை விட்டுட்டு ஓடினா எங்கேயும் போக முடியாது” என்றார். அடுத்த பதினைந்து நிமிடங்கள் அவரை
பார்த்தபடி இருந்தார் பகவான். அப்போது அண்ணாமலை ஸ்வாமியின்
உள்ளே ரேடியோவில் கேட்பது போல பாடல் கேட்டது; அது வரை அந்த
பாடலை அவர் கேட்டதில்லை.
“சாதுறவு சாரவுளஞ் சார்தெளி
விசாரத்தால்
ஏது பரமாம் பதமிங்கு எய்துமோ- ஓதுமது
போதகனால் நூற்பொருளால் புண்ணியத்தால்
பின்னுமொரு
சாதகத்தால் சார ஒணாதால்”
இந்த பாடல் மும்முறை கேட்டது.
பின் அண்ணாமலை பகவனை நமஸ்கரித்து
எழுந்து “நீங்க
என்ன சொல்லறீங்களோ அதை செய்யறேன். எனக்கு மோட்சம் கொடுங்க.
நான் மாயையில் மாட்டிக்க விரும்பலை” என்றார்.
பகவான் “சரி சரி” என்றார்.
கட்டிடங்களின் கட்டுமானப்பணி
அண்ணாமலைஸ்வாமிக்கு கொடுக்கப்பட்டது..
பகவானின் உத்தரவுகளை செயல் படுத்தத்துவங்கினார்.சுட்டெரிக்கும் வெயிலில் பணி. கட்டுமானத்தின் எல்லா
பொறுப்புகளையும் ஏற்று நடத்த வேண்டும்.
பல முறை அவருக்கு மனதில் தோன்றும். ஏன் பகவான் இப்படி கஷ்டமான
வேலை எல்லாம் எனக்குத்தரார்? மத்தவங்களைப்போல த்யானம்
செய்யத்தானே நான் இங்கே வந்தேன்? வேலை ரொம்ப கஷ்டம். என்னாலே முடியலை!
ஒரு முறை இப்படி நினைத்துக்கொண்டு
இருக்கையில் பகவான் மேற்பார்வை இட வந்துவிட்டார்.
அண்ணாமலையிடம் மெதுவான குரலில் “நா ஒண்ணு சொன்னா நீ பார்ப்பே,
உன்னால முடியும்ன்னு நினைச்சுத்தான் வேலை சொல்லறேன். உன்னால முடியாதுன்னு தோணித்துன்னா விட்டுடு!”
துடி துடித்துப்போனார் அண்ணாமலை.
கண்கலங்கிய படி “பகவானே! நீங்க
சொல்லற வேலையிலே நான் செத்தாலும் சரி; உங்க உத்தரவுக்கு
கட்டுப்பட்டு நடக்கிறதான் என் ஒரே தர்மம். நான் செய்யறேன்
பகவானே” என்றார்.
அன்றுடன் அந்த எண்ணம் மறைந்தது.
அண்ணாமலை ஸ்வாமியின் கட்டப்பணியில்
முக்கியமானது ஆசிரம சமையல் கூடமும் உணவுண்ணும் கூடமும்தான். இந்த பணியில் ஈடு
பட்டுக்கொண்டு இருக்கும் போது நாளடைவில் அவரிடம் ஒரு மாறுதல் வந்தது. தன்னால்தான் எல்லாம் செய்யப்படுகிறது என்ற எண்ணம் தலை தூக்கியது. நாளாக ஆக வலுப்பட்டது.
ஒரு நாள் இப்படிப்பட்ட சிந்தனையில்
இருந்த போது பகவான் வேலையை பார்வையிட வந்தார். அவர் அருகில் வந்ததும் கருப்பான நிழல் போன்ற
உருவம் ஒன்று தன்னை விட்டு நீங்குவதை அண்ணாமலை கண்டார். அது
நீங்கியதும் மனது அமைதியானதையும் உணர்ந்தார்.
இதை பகவானிடம் சொன்ன போது “ஆமாம், நல்ல
பூஜாரியை பாத்தா ஆடுற பேய் ஓடும்!” என்றார்.
No comments:
Post a Comment