நடேசய்யர் பகவான் சேவையில் சேர்ந்த
புதிதில் ஒரு முறை பகவானிடம் “பகவானே, எனக்கு ஏதாவது சொல்லுங்கோ!” என்றார்.
பகவான் “என்ன ஓய் தெரியணும்?” என்றார்.
நடேசய்யர் “எனக்கு ஒண்ணும் தெரியாது பகவானே!
உங்க வாயால ஏதாவது சொல்லுங்கோ!” என்றார்.
“ஓய்! ஒண்ணும்
தெரியாதுன்னு உமக்கே தெரியறதோல்லியோ? அதான் ஓய் அறிவு!
அத தெரிஞ்சுக்க இன்னொரு அறிவு அவசியம் இல்ல! அதா
இருக்கறதுக்கு இன்னொரு இருப்பு இல்ல. அதான் ஓய் முக்தியே!”
என்றார்!
நடேசய்யரின் சாதுவான தன்மையால்
பிரச்சினை ஏற்பட்டது! பாகசாலையில் இருந்த பெண்கள் எல்லாரும் கடினமான வேலைகளை அளவுக்கு மீறி அவர்
மீது திணித்தார்கள்! சில சமயம் இந்த சாதுவுக்கு இது தாங்க
முடியாமல் போய்விடும். வெளியே போய் யாருமில்லாத இடமாக
பார்த்து மண்ணில் உருண்டு புரண்டு கத்தி கோபத்தை ஆசுவாசப்படுத்திக்கொண்டு
வேலைக்குத் திரும்புவார்.
நாளாக ஆக தன் கோபத்தை கட்டுப்படுத்த
முடியாமல் அது குறித்து வருந்தி பகவானிடம் கிரிபிரதக்ஷிணம் செல்ல உத்திரவு
கேட்டார். பகவானும்
உத்திரவு கொடுத்தார்.
அன்றிலிருந்து எப்போது கோபம் அதிகமாக
வந்தாலும் பகவானை நமஸ்கரித்துவிட்டு கிரிபிரதக்ஷிணத்துக்கு கிளம்பிவிடுவார். “கோபத்திலேந்து விடுபடத்தானே
பண்ணறான்! நல்லது, செய்யட்டும்” என்றார் பகவான்.
நடேசையருக்கு உணவுக்கூடத்தில் அவர்மேல்
திணிக்கப்படும் வேலை பளுவை தாங்க முடியவில்லை. ஆசிரமத்தை விட்டு வெளியேற தீர்மானித்தார். யாரிடமும் சொல்லவில்லை. ஒரு நாள் அதிகாலை பழைய
ஹாலின் வெளியிருந்தே பகவானை நமஸ்கரித்தார். தன் சொந்த ஊரான
சிதம்பரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரிடம் பணமில்லை.
மாலை விழுப்புரம் சென்றடைந்தார். அங்கே ஒரு
குளத்தில் குளித்துவிட்டு ஒரு புளிய மரத்தடியில் இரவு தூங்க முயன்றார். படுக்கும் முன் பகவானை நினைத்து ப்ரார்த்தனை செய்துகொண்டு விபூதி
இட்டுக்கொண்டார்.
சிறிது நேரத்தில் பகவான் தன்னருகே
நிற்பதைக்கண்டார்.
“பகவானே, நீங்கோ
எப்படி இங்கே வந்தேள்!” என்று கேட்டார்.
“பகவான் என்னை விட்டு நீ எவ்வளவு
தூரம் போயிடுவே?” என்றார். புன்னகைத்தபடியே
மறைந்து போனார்.
நடேசய்யர் கலங்கிவிட்டார். அதி காலையில் இருந்து நடந்த
சோர்வையும் பொருட்படுத்தாமல் உடனே திருவண்ணாமலையை நோக்கி நடக்கலானார். அடுத்த நாள் காலை வந்து சேர்ந்தார். உள்ளே நுழைந்து
நேரே பகவானிடம் சென்று நமஸ்கரித்தார். இப்போதும் பகவான்
புன்னகைத்தபடியே “என்னை விட்டு நீ எவ்வளவு தூரம் போயிடுவே?”
என்றார்.
நடேசய்யர் கதறி கதறி அழுதார். பதில் ஏதும் சொல்லாமல் தன்
பணிக்குத்திரும்பினார். பிறகு எந்த வேலையுமே அவருக்கு
சுமையாகத்தெரியவில்லை. சமையலறை, உணவுக்கூடம்
என வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கிரி பிரக்ஷிணம்
செய்து விட்டோ நீண்ட பயணம் செய்தோ கால தாமதமாக உணவு நேரத்தை தாண்டி வரும்
அன்பர்களுக்கு சூடான உணவு தயாரித்து கொடுப்பார். அன்பர்கள்
தேவையை கவனிப்பதே அவருக்கு ஆனந்தமாயிற்று; இப்போது
கோபப்படுவதே இல்லை. யார் எதற்கு கூப்பிட்டாலும் ‘ஓம் வந்துட்டேன்’ என்று போய் நிற்பார்.
பகவான் விதேகம் ஆனபிறகும் நடேசய்யர்
ஆசிரமத்தில் பணி புரிந்தார். வயதாகிவிட்டதால் சமையலறை பணியாக இல்லாமல் பழைய ஹாலை பார்த்துக்கொள்ளும்
சுலபமான வேலையை கொடுத்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் நடேசய்யர் “பகவான் என்னை கூட்டிண்டு
போறேன்னு சொல்லி இருக்கார், இன்னும் பத்து நாள்ள போயிடுவேன்” என்றார். இன்னொருவரிடம் வர வியாழக்கிழமை இல்லாம
அடுத்த வியாழக்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு வேத பாடசாலை பசங்களோட வேத பாராயணம்
செய்யப்போறேன்” என்றார். அனால் அவரால்
வேதம் பாராயணம் செய்ய இயலாது என்று அனைவருக்கும் தெரியும்!
அடுத்த நாள் “பகவான் என்னை கூட்டிண்டு
போறேன்னு சொல்லி இருக்கார். இன்னும் ஒன்பது நாள் இருக்கு!”
என்றார்.
எல்லாரும் “என்ன மாமா! உடம்புல ஏதாவது பிரச்சினையா? “ என்று கேட்டார்கள்,
டாக்டர்கள் சோதித்து விட்டு உடல் நிலை நன்றாக இருப்பதாக
சொல்லிவிட்டார்கள்.
தினம் தினம் அவர் நாட்களை எண்ணிவந்தார். எட்டு நாள்... இன்னும் ஏழு நாள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
சிலர் “நடேச மாமாவுக்கு பைத்தியம் பிடிச்சிடுத்து!”
என்றனர்.
அவர் பொருட்படுத்தவில்லை.
இன்னும் “ரெண்டு நாள் இருக்கு!” என்றார். ஒருவர் அவரிடம் “மாமா!
பயப்படாதீங்கோ! நீங்க க்ஷேமமா இன்னும் பல
வருஷம் இருப்பேள்!” என்றார். “பயமா?
எதுக்குடா பயம்? பகவான்கிட்டே போறேன்! அதுக்கு ஏண்டா பயம்? பகவானே கூப்பிடறார்டா!” என்றார்.
அவர் சொல்லியபடி பத்தாம் நாள் வியாழக்கிழமை
மாலை ஆறு மணிக்கு அவரது முகம் திடீரென பிரகாசமானது. “ என்னது, பகவான்
வந்துட்டாரா? ஓம் வந்துட்டேன்!” என்றார்.
அடங்கிவிட்டார்!
No comments:
Post a Comment