மணவாசி ராமசாமி ஐயர் திருவண்ணாமலைக்கு
மாற்றலாகி வேலையில் அமர்ந்தார். வேலை நேரம் போக மீதி நேரம் முழுக்க பகவானுடனேயே இருப்பார். இதை பார்த்த ஒரு உயர் அதிகார் உமக்கு கொடுக்கும் நூத்தி ஐம்பது ரூபாய்
சம்பளம் அதிகம்தான் என்று கேலி செய்தார்.
இதை மணவாசி ஐயர் பகவானிடம்
தெரிவித்தார். பகவான்
அதை கேட்டு சிரித்துவிட்டு “இதுக்கே இப்படி சொன்னா சம்பளம்
இருநூறா ஆனா என்ன சொல்லுவார்?” என்றார்.
அடுத்த மாதமே சம்பளம் இருநூறாக
உயர்ந்தது!
ஒரு முறை பகவான் சட்னி
அரைக்கச்சென்றார். பார்த்த
முருகானார் பின் தொடர்ந்தார். பகவான் ஆட்டுக்கல் பக்கத்தில்
உட்கார்ந்ததை பார்த்தவுடன் தான் அரைப்பதாக கூறினார். “சரி
நீங்க அரைங்கோ; நா தள்ளிக்கொடுக்கறேன்” என்று பகவான் சொல்ல வேலை துவங்கியது.
பகவான் மலை வாச நாட்கள் பற்றி ஏதேதோ
பேசிக்கொண்டே இருந்தார். முருகனார் கை அரைத்துக்கொண்டு இருந்ததே தவிர கவனம் அதில் இல்லை; பகவானின் பேச்சிலேயே இருந்தது. கொஞ்ச நேரத்தில் வேலை
முடிந்ததை கவனிக்கவே இல்லை. அரைத்துக்கொண்டே இருந்தார்.
பகவான் தண்ணீரை சட்டினிக்கு தெளிப்பதாக போக்குக்காட்டி முருகனாரின்
முகத்தில் தெளித்தார். அதையும் முருகனார் கண்டுக்கொள்ளவில்லை.
ஏதோ சட்னிக்கு தெளித்தது முகத்தில் பட்டுவிட்டதாக
நினைத்துக்கொண்டார். முகத்தை துடைத்துக்கொண்டு அரைத்தலை
தொடர்ந்தார். பின் பகவான் “ நீர்
பாட்டுக்கு உருட்டிக்கொண்டே இருக்கீரே! சட்னி அரைபட்டது
தெரியலையா?” என்று கேட்ட பின்பே அதை உணர்ந்தார்!
ரங்கஸ்வாமி ஐயங்கார் ஒரு முறை பகவான்
வைஷ்ணவ சின்னங்களை அணிந்து பார்க்க விரும்பிக் கேட்டார். “பகவானே, நீங்க ஒரு முறை திருமண் இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு போனீங்களாமே!
ஒரே ஒரு முறை எங்க திருப்திக்காக நாமம் போட்டுக்கோங்களேன். அப்படி உங்களை தரிசிக்க ஆசையா இருக்கு!” என்றார்.
பகவான் “நாயனா இட்டுக்கொண்டா நானும்
இட்டுக்கறேன்” என்றார்.
அது நடக்க வாய்ப்பில்லை என்பதால்
எல்லாரும் சிரித்தார்கள். எல்லாருக்கும் அவரிடம் பயம்; நேராக அவரிடம்
கேட்கவும் முடியாது!
பகவான் புன்னகைத்தபடியே “நீங்க அவர் சாப்பிட வரும்போது,
இலைக்கு பக்கத்திலே நாமக்கட்டியும் த்ரிசூர்ணமும் வையுங்கோ. அவர் இட்டுக்கொண்டா நானும் இடுக்கறேன்” என்றார்.
அதே போல தயார் செய்யப்பட்டது. நாயனா வர
காத்திருந்தார்கள். நாயனா உள்ளே நுழைந்தார். பகவானிடம் ஏதோ சுவாரசியமாக பேசிக்கொண்டே நாமக்கட்டியை குழைத்து நாமம் போட்டுக்கொண்டார்!
பின் பகவானும் நாமக்கட்டியை எடுத்து நாமம் இட்டுக்கொண்டார். சிறிது நேரம் சென்று நாயனா பகவானை பார்த்து ஆச்சரியத்துடன் “எப்போலேந்து இந்த வேஷம்?” என்று கேட்டார்.
பகவான் ஒன்றுமே தெரியாதவர் போல் “ எல்லாம் நீங்க போட்ட பிறகுதான்!”
என்றார். நாயனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
பகவான் ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொல்லி நாயனானின் முகத்தை
அவருக்குக்காட்டினார். அப்போதுதான் நாயனாவுக்கு தான் நாமம்
இட்டுக்கொண்டு இருப்பது தெரிய வந்தது!
No comments:
Post a Comment