Pages

Friday, May 22, 2015

அடியார்கள் - அண்ணாமலை ஸ்வாமி -3




 அண்ணாமலைஸ்வாமியின் அடுத்த பணியாக கோசாலை கட்டும் பணி தரப்பட்டது. அப்போது ஆசிரமத்தில் லக்‌ஷ்மி மட்டுமே இருந்தாள். ஆகவே சின்னசாமி ஒரு சிறிய 10*10 அளவுக்கு கோசாலை அமைக்க திட்டமிட்டார்.
பகவான் விருப்பம் அதுவாக இல்லை. பூமி பூஜை ஆயிற்று. எல்லாரும் சென்றுவிட்டனர். பகவான் அண்ணாமலைஸ்வாமியிடம் வரும் காலங்களிலே நெறைய பசுமாடு வரப்போறது. பெரிசா கட்டு, நீயே முன்னிருந்து கட்டணும்!” என்றார். பின் கைத்தடியால் எங்கிருந்து எது வரை என்று காட்டிக்கொடுத்தார். 48 அடிக்கு 48 அடி, சரியா என்றார். கடைசியாக இதெல்லாம் நீயே செய்யறதா இருக்கட்டும். நான் சொன்னதா சொல்லாதே!” என்றார். அருணாசலம் விளையாடியது. குரு குதிஎன்றதும் சீடனும் மலை உச்சியில் இருந்து உடனே குதித்தான்.
அஸ்திவாரம் தோண்டுதல் ஆரம்பித்தது. சின்னசாமி அருகில் இல்லை. வேலை மள மள என்று நடந்தது. மதியம் சின்னசாமி வந்து பார்த்த போது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அண்ணாமலையை பார்த்து பெரிசா இருக்கே? நீதான் ப்ளானை மாத்தினியா? மாத்த உனக்கு என்ன அதிகாரம்? நீ யார் ப்ளானை மாத்த?” என்று கோபமாக கேட்டார்.
அண்ணாமலை நாந்தான் மாத்தினேன். பெரிசா கட்டினாத்தான் நன்னாயிருக்கும் என்றார்.
சின்னசாமி என்கிட்டே கேட்காம ஏன் மாத்தினே? இங்கே நாந்தானே சர்வாதிகாரி? நான் இந்த ஆசிரமத்தை நல்லா கொண்டு வரணும்ன்னு நினைக்கிறேன். ஆளுக்கு ஆள் தன்னிஷ்டத்துக்கு பண்ணா எப்படி? நீயே இதை நடத்து; நான் போறேன்என்று இரைந்தார்.
அண்ணாமலை ஆட்களிடம் உங்க வேலையை பாருங்கஎன்று சொல்ல வேலை தொடர்ந்தது.
சின்னசாமியை யாரும் அது வரை அப்படி எதிர்த்தது இல்லை. கோபத்துடன் வெளியேறி ஒரு பாறை மீது அமர்ந்தார்.
ஏன் என்று வந்து கேட்டவர்களிடம் அவனே ஆசிரமத்தை நடத்தட்டும்; நான் எங்கேயாவது போறேன்என்றார்.
டி.கே.சுந்தரேசஐயர், ராமக்ருஷ்ணஸ்வாமி, முனகால வேங்கட ராமையா ஆகிய மூவரும் வந்து நடந்ததை கேட்டு அறிந்தார்கள். அவர்களிடம் சின்னசாமி அவனை வெளியே அனுப்புங்கோ நான் உள்ளே வரேன் என்றார்.
நேரம் கழிந்தது. வேறு வழியின்றி அவர் உள்ளே வந்தார்.
அன்று மாலை எல்லா பக்தர்களையும் கூட்டிக்கொண்டு பழைய ஹாலுக்கு வந்தார். தன் ப்ளானுக்கும் அண்ணாமலை ப்ளானுக்கும் இருக்கும் வித்தியாசம்; அதனால் ஏற்படக்கூடிய அதிகப்படி செலவு எல்லாவற்றையும் எடுத்துக்கூறி நியாயம் கேட்டார்.
பகவான் மௌனமாகவே இருந்தார்.
மற்ற பக்தர்கள் எல்லாரும் சிறிய கோசாலையே சரி என்றனர்.
சின்னசாமி இதை ஓட்டுக்கு கொண்டு வந்தார். எல்லோரும் சின்ன கோசலைக்கே ஓட்டளித்தனர்.
பகவான் அண்ணாமலையைப் பார்த்து உன் ஓட்டு எதுக்கு? என்று கேட்டார்.
பெரிய கோசாலை, இப்ப தோண்டி இருக்கற அஸ்திவாரத்திலேயே கட்டணும்என்றார் அண்ணாமலை.
பகவான் நடு நாயகமாக இருப்பதாக காட்டிக்கொண்டார். “ரெண்டு கட்சியா பிரிஞ்சு நிக்கறேள். என்ன நடக்கறதோ பார்ப்போம்!” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல மலையை சுற்ற கிளம்பிவிட்டார்.
பகவானின் குறிப்புணர்ந்த அண்ணாமலை பணியை தொடர்ந்தார்.
மெதுவாகவே சின்னசாமிக்கு அதன் பின்புலம் தெரியவந்தது. வேலை தொடர்ந்தது.
அப்போதைய காலத்தில் லக்‌ஷ்மிக்கு கட்டப்பட்ட கோசாலையே மிகப்பெரிய கட்டிடம். அப்போது அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.
ஒரு நாள் பகவான் கட்டிட வேலையை மேற்பார்வை இடும் போது லக்‌ஷ்மிக்கு பெரிசா கோசாலை கட்டினா பெரிய டைனிங் ஹால், அம்மா கோவில், புஸ்தகாலயம் எல்லாம் கட்ட புண்ணியம் கிடைக்கும்!” என்றார்.
கோசாலை பணி இனிதே நிறைவுற்றது!


 

No comments: