எச்சம்மாள் ஒரு முறை பகவானுடைய படத்துக்கு ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதாக சங்கல்பித்தார். 50, 000 இலைகள் கிடைத்தன. கடும் கோடை. வேறு எங்கும் இலைகள் கிடைக்கவில்லை. பகவானிடம் முறையிட்டார். “உன் உடம்பை கிள்ளி பூஜை பண்ணு!” என்றார் பகவான் கடுமையாக.
எச்சம்மாளுக்கு தூக்கி வாரிப்போட்டது. “கிள்ளினால் வலிக்குமே!”
என்றார்.
“மரத்துலேந்து இலையை கிள்ளினால்
வலிக்காதா?” என்றார்
பகவான்.
எச்சம்மாளுக்கு தன் தவறு புரிந்தது. “பகவானே! முன்னேயே சொல்லி இருந்தால் அந்த ஐம்பதாயிரம் இலைகளை கிள்ளி இருக்க
மாட்டேனே?” என்றார்.
“உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்ன்னு
தெரியும்; இலைகளை
கிள்ளினா அதுக்கு வலிக்கும்ன்னு தெரியாதா? இதெல்லாம்
சொல்லிக்கொடுக்கணுமா?” என்றார் பகவான்.
எச்சம்மாள் பகவான் மலையில் இருந்த போது
தினசரி உணவு கொண்டு வந்து தருவார்.
மலை மீதிருந்து கீழே ஆசிரமத்துக்கு பகவான் வந்த பிறகும் இது
தொடர்ந்தது. ஒரு நாள் ஆபீஸில் “ஆசிரமத்திலேயே
வேணது இருக்கு. இனிமேலும் ஏன் பாட்டி சிரமம் உனக்கு ?
நாளையிலிருந்து கொண்டு வர வேண்டாம்!” என்று
சொல்லிவிட்டார்கள்.
பாட்டி நேரே பகவானிடம் போய் “ பகவானே! எனக்கு
வயசாயிடுத்து, என்னையும் என் உடைமையும் உனக்கு சேவை
செய்யறதுலேயே செலவழிச்சுட்டேன். அதுக்கு நீ செய்யறது ரொம்ப
நன்னாயிருக்கு! நீ இந்த மலைதானே? கல்லு!
நான் போறேன்” என்று கண்கலங்கி சொல்லிவிட்டு
போய்விட்டார்.
அடுத்த நாள் மதிய உணவுக்கு மணி
அடித்தது. எல்லாரும்
பகவான் டைனிங் ஹாலுக்கு போக எழுந்திருப்பார் என்று காத்திருந்தனர். ஆனால் பகவான் கல் போல அமர்ந்தே இருந்தார், 5...10... 15 நிமிடங்கள் ஆயிற்று; பகவான் எழுந்திருக்கவே இல்லை.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது
புத்திசாலியான ஒரு ஹால் சேவகர் விஷயத்தை யூகித்து, ஆபீஸுக்கு
சென்று நடப்பதை கூறினார்.
உடனே நிர்வாகிகள் எச்சம்மாள்
வீட்டுக்குச் சென்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு உணவோடு ஆசிரமத்துக்கு வருமாறு
வேண்டினர். ஆனால்
எச்சம்மாள் மறுத்துவிட்டார்!
“சரி! உன்னாலே பகவான் இன்னைக்கு பட்டினி!” என்றார்கள்.
பட்டினி என்று கேட்ட மாத்திரத்தில்
பாட்டியின் தாயுள்ளத்தில் கோபம் தணிந்தது.
உணவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
எச்சம்மாளுக்கு வயதாகி விட்டது. முன் போல கொண்டு கொடுக்க
முடியவில்லை. இன்னொருவர் மூலம் கொடுத்து அனுப்பிக்கொண்டு
இருந்தார். ஒரு நாள் அதை பெற்றுக்கொண்ட தொண்டர் அதை
சமையலறைக்கு அனுப்பிவிட்டார்.
வழக்கமாக உணவு பரிமாறலில் ஒரு நியமம்
உண்டு. பகவானுக்குத்தான்
கடைசியாக பரிமாறுவார்கள். எல்லோருக்கும் பரிமாறியாகிவிட்டது
என்று உறுதியான பின் பகவான் தனக்கு வலது பக்கம் இருப்பவரை பார்த்து தலையசைப்பார்.
பின் எல்லோரும் சாப்பிட ஆரம்பிப்பார்கள்.
அன்றும் வழக்கம் போல நடந்தது. எல்லோருக்கும்
பரிமாறியாகிவிட்டது, ஆனால் பகவான் தலையாட்டவில்லை. எல்லோரும் குழப்பமடைய ஒரு புத்திசாலியான சேவகர் உண்வு பரிமாறுவோரிடம்
சென்று எச்சம்மாள் அனுப்பியதை பரிமாறினீர்களா என்று கேட்டார். அவர்கள் ‘அச்சச்சோ மறந்துவிட்டோம்’ என்று சொல்லி உள்ளே போய் அதை எடுத்து வந்து பரிமாற பகவான் சந்தோஷமாக
தலையாட்ட எல்லாரும் சாப்பிட ஆரம்பித்தனர்!
No comments:
Post a Comment