Pages

Thursday, May 28, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 25



1940 களில் அம்மாவின் கோவில் கட்டப்பட்டு வந்தது. பணப்பற்றாக்குறை. வேலை தடங்கி நின்றது. இன்னும் ஐம்பது ஆயிரம் தேவைப்பட்டது.

அப்போது வட நாட்டிலிருந்து சகன்லால் யோகி என்றோரு அன்பர் பகவானை முதன் முதலாக தரிசிக்க வந்து இருந்தார். சின்னசாமிக்கு அவரைப்பார்த்தவுடன் ஒரு யோசனை தோன்றியது. அவர் டி.பி. ராமசந்திரஐயரிடம்எனக்கு யோகியை அறிமுகப்படுத்தி வைங்கோ. நாம மூணு பேரும் ஜம்னாலாலை போய்ப்பார்த்தா பணம் கிடைக்கும். கோவிலை கட்டிவிடலாம்என்றார். இத்திட்டம் சகன்லால் யோகிக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் தர்மசங்கடம் என்பதால் ஒத்துக்கொண்டார். அடுத்து பெரிய தடை ஒன்றை கடக்க வேண்டும்! ஆமாம், பகவானிடம் இதற்கு உத்திரவு வாங்க வேண்டும்!

சின்னசாமிக்கு பகவானை நேரில் எதையும் கேட்க எப்போதுமே பயம். எதையும் வேறு யாரையும் விட்டு கேட்கச்சொல்வார். டி.பி. ராமசந்திர ஐயரை போய் இது பற்றி சொல்லச்சொன்னார். ராமசந்திரஐயர் இதை நான் எப்படி பகவான்கிட்டே சொல்லறது? நீங்களும் வாங்கோ!” என்றார். சின்னசாமி ஒத்துக்கொள்ளவில்லை. பின் மதிய வேளையில் ராமசந்திரஐயர் வேறு சிலருடன் பகவானை பார்க்கச்சென்றார். பகவான் இவர்களை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. பார்க்க விரும்பாதவர் போலவே இருந்தது. யாருக்கும் பேசவும் தைரியமில்லை. ஒரு வழியாக மௌனசாமி பகவானிடம் விஷயத்தை சொன்னார். நீண்ட நேரம் பகவான் பதிலே கொடுக்கவில்லை. கடைசியில் அவர்களை பார்த்து சொன்னார்: “ என் பேரை சொல்லி யாரிடமும் யாசிக்காதீங்கோன்னு பல முறை சொல்லிட்டேன். திரும்பவும் சொல்லறேன். இருக்கறதிலே திருப்தியா இருங்கோ! நடக்கிறது நடக்கும். அருணாசலத்துக்கிட்டே உங்களுக்கு எப்படி நம்பிக்கை இல்லாம போச்சு? அது வேண்டியது எல்லாம் கொடுக்கும் என்று மலையை நோக்கி கைகாட்டினார்.

இப்போ போய் பணம் கேட்டா கொடுக்கறவா கேப்பாளே? பகவான் உத்தரவிலேதான் வந்தேளான்னு? அப்ப என்ன பதில் சொல்லுவீங்க?” என்றார் பகவான்.
சகன்லால் கண்டிப்பா கேப்பாங்க. உத்திரவு இல்லேன்னு தெரிஞ்சா பைசா கூட கொடுக்க மாட்டாங்க!” என்றார்.
ஒவ்வொருவராக வெளியே சென்றுவிட்டனர். ராமசந்திரஐயர் மட்டும் மிஞ்சினார்.

இந்த ஆசிரமும் இந்த கட்டடங்களும் யாசகம் கேட்டா வந்தது? என்ன நடக்கணும்ன்னு இருக்கோ அது நடந்தே தீரும். எதுவும் நம்ம முயற்சியிலே இல்லே. அம்மா விதேகமான போது, இருட்டினப்பறம் சப்தமில்லாம கொண்டுபோய் யாருக்கும் தெரியாம ஆள் அரவம் இல்லாத இடத்திலே புதைச்சுட்டு வந்துடுன்னு சொன்னேன். அப்படியா நடந்தது? எது எப்படி நடக்கணுமோ அப்படித்தான் நடக்கும்! பாத்தியோ? விடியறதுக்குள்ளே சத்தமில்லாம புதைக்கசொன்ன இடத்துலே எத்தனை கட்டிடம் சுத்தி வந்துடுத்து? நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தா போறும். என்னென்ன நடக்க வேண்டி இருக்கோ அத்தனையும் தானா நடக்கும்என்றபோது பகவான் முகம் கம்பீரமாக தோன்றியது!
 

No comments: