Pages

Monday, May 11, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 20




டாக்டர் ஸ்வாமிநாதனின் தந்தை க்ருஷ்ணஸ்வாமி. முனிசிபல் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர். பகவானை தரிசித்தபோது அவரிடம் கேட்டார் திருவண்ணாமலையிலே எங்கே பாத்தாலும் சாது சன்னியாசியா இருக்கா. அவாள்ள யார் அசல்ன்னு தெரிஞ்சுக்கிறது எப்படி?”
யார்கிட்டே இருக்கும்போது மனசு முயற்சி இல்லாம அமைதியாகிறதோ அவா அசல்என்றார் பகவான்.

ஒரு முறை சாது நடனானந்தாவின் சகோதரர் பகவானை தரிசிக்கச்சென்றார். போகும் போது எல்லாரும் பகவானை ஈஸ்வர அம்சம்ன்னு சொல்கிறார்களே, அப்படியானால் அவர் இன்றைக்கு என் மனசில இருக்கிற, ஆத்மா பத்திய சந்தேகங்களுக்கு பதில் கேட்காமலே சொல்லட்டும் என்று நினைத்துக்கொண்டார்.
வழக்கமாக பகவானிடம் கேள்வி கேட்டாலே பதில் வருவது கஷ்டம்தான்! உடனே வந்தாலும் வரும்; வராமலே போனாலும் போகும்; திடீரென்று வேறு சமயத்தில் வந்தாலும் வரும். ஆனால் அன்றைக்கு இவர் போய் நமஸ்கரித்து அமர, பகவான் ஆத்மாவின் இயல்பு குறித்து பேசலானார்!

கார்த்திகை ப்ரமோற்சவ சமயத்தில் கோவிலில் கச்சேரி நடக்கும் பெரிய பெரிய பாடகர்கள் எல்லாரும் வந்து கச்சேரி செய்வார்கள். கோவில் தர்மகர்த்தா வீரப்பச்செட்டியார் அவர்களை அழைத்து வந்து ஆசிரமத்திலும் பாட வைப்பார்.
ஒரு முறை பகவான் சன்னிதியில் புதுக்கோட்டை தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா, சுந்தரம் ஐயர் கடம் முதலிய பக்க வாத்யங்களுடன் அரியகுடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி துவங்கியது. பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்கு முடிந்தது. வழக்கமாக பகவான் நடுவில் எழுந்து வெளியே சென்று வருவார். அன்றைக்கு அசலமாகிவிட்டார்.
(பின்னால் பிள்ளை அவர்கள் தம் வாழ்க்கையில் கச்சேரியில் தம் பங்கு பிரமாதமாக அமைந்தது பகவான் சன்னிதியில்தான் என்றும் மற்றவர்களுக்கும் அப்படியே என்றார்.)
அன்று இரவு எல்லோரும் உணவு அருந்திக்கொண்டு இருந்த போது அன்பர் ஒருவர் இன்னிக்கு கச்சேரி பிரமாதம். எங்கே இருக்கோம் என்கறதே மறந்துடுத்து! பகவானுக்கு எப்படி இருந்தது?” என்று விசாரித்தார்.
அதற்கு பகவான் அவா நமஸ்காரம் பண்ணி உக்காந்ததுதான் தெரியும். அப்புறம் முடிச்சு எழுந்ததுதான் தெரியும். எல்லாத்தையும் உள்ளே இருக்கறவன் சாப்பிட்டுடறானே? என்னத்தை கேக்கறது? “ என்றார்!

ஒரு மஹா சிவராத்திரி அன்று பக்தர்கள் பகவான் அன்று இரவு தக்‌ஷிணாமூர்த்தி அஷ்டகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகவானும் இசைந்தார்.
இரவாயிற்று. எல்லோரும் பழைய ஹாலில் குழுமினர். பகவானும் வந்து அமர்ந்தார்.
விளக்கத்தை ஆரம்பிப்பார் என்று பக்தர்கள் காத்திருந்தனர்.
பகவான் வாயை திறக்கவே இல்லை.
ஹாலில் பரிபூரண அமைதி!
எல்லோரும் ஏதோ ஒரு நிலைக்கு சென்றுவிட்டனர்.
கொஞ்ச நேரம்கழித்து பகவான் எழுந்துவிட்டார். மலைக்கு உலாவச்சென்றுவிட்டார். எல்லோரும் அப்போதுதான் விடிந்து விட்டது என்று உணர்ந்தனர்!


No comments: