Pages

Thursday, January 23, 2014

தயை செய்து குழப்பாதீங்க!


ஆன்மீகவாதிகளே, தயை செய்து குழப்பாதீங்க!

நாத்திகர்களுக்கு பிரச்சினையே இல்லை. கடவுள் இல்லை என்கிற ஒரே பாய்ன்ட் தான் அவங்களுக்கு. அதனால பெரிசா அதுல வகை வகையா ஒண்ணுமில்ல. பாசிடிவா கடவுள்ன்னு ஒன்னு இல்லை என்கிறவங்க, ஆதாரம் தர வரைக்கும் கடவுளை நம்ப தயாரா இல்ல என்கிறவங்களுமா ரெண்டே வகைதான்.

ஆத்திகர்களுக்குத்தான் நிறைய பிரச்சினை! யார் கடவுள்?

அவரவர் குடும்பத்தில் எதோ ஒரு முறை இருக்கிறது. அதைத்தான் முதலில் பின் பற்றுகிறோம். பின்னால் நம் அனுபவத்தில் சில மாற்றங்கள் வரகூடும். தீவிர ஆத்திகன் நாத்திகனாவதைம் தீவிர நாத்திகன் ஆத்திகனாவதையும் பார்த்தாயிற்று!

இதில்லாமல் தான் வழிபடும் கடவுளையும் முறையையுமே பலர் மாற்றிக்கொள்கிறார்கள். வயதாகி ஓரளவு முதிர்ச்சி வந்த பின் இப்படி செய்வதில் ஆச்சரியம் இல்லை. அது பாட்டுக்கு இருக்கட்டும்.

வெகு சிலரே ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் மேலும் மேலும் தெரிந்து கொள்வதில் இறங்குகிறார்கள். அவர்களிலும் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் ஆளுக்கு ஆள் வேறு படுகிறது. கடந்த ஜன்மத்து நிலையிலிருந்தே மேலே செல்ல ஆரம்பிகிறார்கள். இந்த ஜன்மத்தில் எவ்வளவு மேலே செல்ல இயலும் என்பதும் பிறவியின் போதே நிர்ணயிக்கப்பட்ட ஓன்று. இவர்களையும் விட்டுவிடுவோம்.

பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். அதுவே குடும்பத்தில் வழக்கம். ராமாயணம் மகா பாரதம் கதை கேட்டு இருக்கலாம். கொஞ்சம் படித்து இருக்கலாம். இப்போது ஒவ்வொரு பத்திரிகையும் கூடுதலாக விற்கும் ஆன்மீக மலர்களை படிக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவர்களது கான்சப்ட் பலவித கடவுள்கள், ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி, ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு சாமி, கோவில்கள், பாவ புண்ணியங்கள், பிராயச்சித்தங்கள்.... இந்த ரீதியிலேயே போய்விடுகிறது.

இவர்களிடம் போய் “என்ன முட்டாள்தனம் இது? வித விதமா சாமி கும்பிடுகிறாயே? இதெல்லாம் இல்லவே இல்லை; எல்லாம் மாயை. பிரம்மம் தெரியுமா பிரம்மம்? தெரியாதா? நீயேதான் பிரம்மம். ஏன் இன்னொருத்தரிடம் உனக்கு வேண்டியதை கேட்கிறாய்?” என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால் அவ்வளோதான்! குழம்பிப்போய் விடுவார்.
முட்டை நேரடியாக வண்ணத்து பூச்சி ஆவதில்லை. பிறர் வெறுக்கும் புழுவாகி, பின் கூட்டில் அடைந்து கிடந்து கஷ்டப்பட்டு அதை பிளந்து வெளிவரும்போது எல்லாரும் விரும்பும் வண்ணத்து பூச்சி ஆகிறது.

நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து கடை தேற பல ஜன்மங்கள் காத்திருக்க வேண்டி  இருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களை தானாக மெல்ல மேலேற விட வேண்டும். அவர்களுக்கு பொருந்தாத தத்துவங்களை சொல்லி அவர்களை குழப்பக்கூடாது. அது கூட்டை வெட்டி முதிர்ச்சி அடையாத பூச்சியை வெளிவிடுவதாகும்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் பகவான் ரமணர். அவருடைய தனித்துவம் வாய்ந்த யார் நீ விசாரணைக்கு நிகரில்லை. இருந்தாலும் அதையே அவர் எல்லாருக்கும் உபதேசிக்கவில்லை. நான் ஜபம் செய்து வருகிறேன் என்றால், ரொம்ப நல்லது அதையே செய் என்பார். நான் சிரத்தையுடன் கர்மா செய்கிறேன் என்றால் ரொம்ப நல்லது அதையே செய் என்பார்.

பழைய நூல்களை பாருங்கள். இந்த நூல் யாருக்கு பயன் படும், இதை பயிலத்தொடங்கும் முன் தயாரிப்பு என்ன தேவை என்பதை சொல்லி விட்டுத்தான் மேலே விஷயம்ன் சொல்ல ஆரம்பிப்பார்கள்!

யாரும் நம்மை அணுகி இது என்ன சமாசாரம் என்று கேட்காமல் உபதேசம் செய்யக்கூடாது என்கிறது சாத்திரம். அதில் அர்த்தம் இருக்கிறது!

இந்த நிலையில் நிறைய படித்துவிட்டு நிறைய புரிந்து கொண்டதாக நினைத்து காலங்காலமாக வழி வரும் பலருக்கும் ஆறுதலை தந்து கொண்டிருக்கிற ஆன்மீக ஆதாரங்களை சாடுவது சற்றும் பொருத்தமில்லை. இவை இல்லாமல் நம்ம நாட்டில் பலரும் காலம் தள்ள முடியாது. மேலை நாட்டில் இருக்கும் அளவு மனோ தத்துவ நிபுணர்களும் மனநல மருத்துவ மையங்களும் நமக்கு தேவையில்லாமல் போனதற்கு இவையே காரணம்.
நீங்கள் பலதையும் படித்து பல விஷயங்களை புரிந்து கொண்டு விட்டதாக நினைத்தால் அதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்! அல்லது உங்களை போன்ற சிந்தனை உள்ளவருடன் பகிர்ந்து விவாதித்து சண்டை போட்டு.... மேலும் சண்டை போட மேலும் படியுங்கள்.

கேட்டுக்கொள்வதெல்லாம் அவற்றை பொதுவில் வைத்து பலரையும் குழப்பாதீர்கள் என்பதே!

அதைதானே நீயும் செய்கிறாய் என்று யாரும் கேள்வி கேட்கும் முன் நான் எஸ்கேப்! ஆகிவிடுகிறேன்.
வரட்டா?


 

No comments: