Pages

Thursday, January 23, 2014

ஸ்ரீ ருத்ரம் சொல்லுகையில் ஏற்படும் வழக்கமாக தவறுகள்.




தயாராகிக்கொண்டு இருக்கும் ஒரு டாக்குமெண்டிலிருந்து..

இந்த பக்கங்கள் தமிழில் ருத்திரம் பயின்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம். இப்போதைய தமிழ் உரைகளில் ‘க’ வர்க்கம் ‘ப’ வர்க்கம் போன்றவற்றுக்கு நான்கு ஒலிகள் இல்லை. குருவிடம் கேட்டு சொல்லியே பழக வேண்டி இருக்கிறது. இதில் போதிய பயிற்சியும் உன்னிப்பாக கேட்டு திருத்தலும் நடக்கவில்லையானால் பிழைகள் மலிந்துவிடுகின்றன. ஆரம்பத்திலேயே இவற்றை களையாவிட்டால் பின்னால் திருத்திக்கொள்வது சிரம சாத்தியமே. இருந்தாலும் வேத மந்திரங்கள் ஆகையால் எப்பாடு பட்டினும் சரி செய்து கொள்வது அவசியம்.
ருத்ரம்/ சமகம் சொல்லும் போது ஏற்படும் முக்கால்வாசி பிழைகள் முதல் இரண்டாம் சப்தங்கள்; மூன்றாம் நான்காம் சப்தங்கள் இவற்றுக்கு இடையே போதிய வித்தியாசத்தை காட்டாததே ஆகும். வெகு சுலபமாக “இவற்றை கவனியுங்கள்; பல பிழைகள் இங்கே நேருகின்றன” என்று சொல்லிவிடலாம்! இங்கே குறிப்பிட்டுள்ளவை வழக்கமாக பிழை மலியும் இடங்கள்.
இரண்டாவதாக தமிழில் சிவாய நமஹ என்று சொல்லிப்பழகி ஶிவனுக்கு சிவன் என்றே சொல்லி வருகிறோம். (ஸி அல்லது chi) சம்ஸ்க்ருத உச்சரிப்பில் அது சி இல்லை. அது ஶி . அது ஸி க்கும் ஷி க்கும் இடைப்பட்ட உச்சரிப்பு.
ஸரஸ்வதியில்  ஸ. கிருஷ்ணாவில் ஷ; ஶிவன் இதில் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பு.
ஸரஸ்வதியில் ஸ நுனி நாக்கு பல்லை தொடும். ஷ வில் அடிநாக்கு மேலண்ணைத்தை பின் பக்கம் தொடும். இந்த ஶ வில் நாக்கின் நடு பாகம் மேலண்ணத்தை நடுவிலே தொடும்.
இந்த உரையில் ம்ʼ என்று குறிப்பிட்டுள்ளத்தின் சரியான உச்சரிப்பை கேட்டு தெரிந்து கொள்ளவும். அது ம் இல்லை.
சில இடங்களில் குறில் நெடிலாக உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக முதல் வரி
||  ஓம்ʼ நமோ ப³வதே ருத்³ராய ||
இது ருத்ராய மட்டுமே. பலரும் இதை ருத்ராயா என்று நீட்டி உச்சரிக்கிறார்கள்.
ஸ்வரம் குறித்து ஒரு வார்த்தை. இது குரு முகமாக கேட்டு கற்பது. இருந்தாலும் சரி செய்து கொள்ள ஒரு சிறு குறிப்பு. பல இடங்களில் மேலே தூக்கி உச்சரிக்கும் எழுத்துக்கு அடுத்து கீழே இறக்கி உச்சரிக்கும்படி ஸ்வரம் அமையும். குறிப்பாக இல்லை என்றால் மிக எளிதாக இது கீழே இறங்காமல் ஸ்வரமே ‘இல்லாமல்’ அமைந்துவிடும். இதை சரியாக உச்சரிக்க ஒரு எளிய வழி இருக்கிறது. மேலே தூக்கி உச்சரித்த உடனேயே ஒரு சிறு “கட்” – ஒரு சிறு தாமதம் கொடுப்பதால் அது சுலபமாக கீழிறங்கும். முயற்சி செய்து பாருங்கள்.
பிழை நேராமல் இருக்க முக்கியமாக கவனிக்க வேண்டிய இடங்கள் மட்டுமே சிவப்பில் உள்ளன. தேவையான இடங்களில் மட்டுமே குறிப்பு இருக்கிறது.
 டாக்குமென்ட் சில நாட்களில் தயாராகிவிடும். தேவை என்று இங்கே சொல்பவருக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படும். முன் அறிமுகம் இல்லையானால் மின்னஞ்சல் முகவரி தேவை.
 

No comments: