நம் மனசை எப்படி இருக்குன்னு கவனிக்கிறது போலவே மத்தவங்க மனசையும் கவனிக்கப்பார்க்கணும். இது சுலபமில்லைதான். நம் மனசு நம்மோடது; அதை பார்த்து கேட்டு தெரிஞ்சுக்கலாம். மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
ம்ம்ம்ம்..... அப்படியே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியாதுதான். ஆனா அதுல இருக்கிற உணர்ச்சிகளை கொஞ்சமாவது தெரிஞ்சுக்க முடியும்.
பிறக்கிறப்ப எல்லாருக்கும் இந்த உணர்வுகளை உணருகிற ஆற்றல் இருக்காப்போல இருக்கு.
வயசாக ஆகத்தான் இது காணாப்போயிடும் போல இருக்கு!
ஒரு ஒன்பது மாச குழந்தைக்கு தான்ன்னு ஒண்ணுமே கிடையாது. இன்னொரு குழந்தை
அடிபடறதை பாத்தா தானும் அழும்; அல்லது அப்செட் ஆகும்! ஒரு வயசுல அஹங்காரம்
கொஞ்சம் முளை விட்டு இருக்கும். ஆனாலும் அது மற்ற குழந்தைகளின் உணர்வுகளை
பிரதிபலிக்கும்.
இந்த மாதிரி குழந்தைகள் நாலஞ்சு இருந்தா அதுகளை பார்க்கிறதே தமாஷா இருக்கும்.
எல்லாமே ஏக காலத்துல அழும்; அல்லது சிரிக்கும்! அவை எல்லாம் உணர்வு பூர்வமா
ஒண்ணாகறதாலே இப்படி! பின்னால அகங்காரம்
அதிகமாகி திடப்பட மற்றவர் உணர்வுகளை உணருவதை விட்டுவிடறோம்.
குழந்தைகளுக்கு இந்த உணர்ச்சிகளை கிரஹிக்கிற சக்தி இருக்கறதாலத்தான் வீட்டில்
நடக்கிற எந்த யுத்தமும் குழந்தைகளை பாதிக்காம விடாது! நாம்தான் நம் சண்டை எல்லாம் யாருக்கும்
தெரியாதுன்னு நினைச்சு கொண்டு இருக்கிறோம். அம்மா அப்பா நடுவில இருக்கிற சண்டை மௌன யுத்தமா இருந்தாக்கூட
அதை குழந்தைகள் உணருவாங்க. அது அவங்களை பாதிக்கும்!
பல வருஷங்களுக்கு முன்னே ஒரு சைல்ட் சைகாலஜிஸ்டை சந்திச்சேன். அவங்க பெற்றோர்
குழந்தைகளோட பிரச்சினைன்னு சொல்லிகிட்டு வரவங்ககிட்ட மணிக்கணக்கா அவங்களைப்பத்தியே
விசாரிப்பாங்க. பின்னால் கேட்டப்ப அவங்க சொன்னது: குழந்தைகளுக்குன்னு பிரச்சினைகள்
இல்லே. எல்லாம் அப்பா அம்மா நடுவில இருக்கிற பிரச்சினைகளோட பிரதிபலிப்புதான்!
சிலர் இருக்கிற உணர்ச்சியை அப்படியே முகத்தில காட்டுவாங்க. அப்படி இருந்தா
உடனே தெரிஞ்சுடும். சிலர் என்ன நடந்தாலும் ஒரு உணர்ச்சியையும் காட்டமாட்டாங்க.
அதுக்காக அவங்களுக்கு உணர்ச்சி இல்லைன்னு அர்த்தம் இல்லை. வெளியே காட்டறதில்லை; அவ்ளோதான்.
பெரும்பாலான மக்கள் இந்த ரெண்டு கோடிகளுக்கு இடையில இருக்காங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வகை! ஒருத்தர் உணர்ச்சியை சரியா புரிஞ்சுக்கறது உணர்வு
சார் நுண்ணறிவோட அடுத்த கட்டம். மற்றவங்களோட உறவாடுறதுல இது ரொம்ப முக்கியம்.
ஒருத்தர் என்ன பேசறார் என்கிறது வெளிப்படையா அவரோட மனசை பிரதிபலிக்கலாம். ஆனால் தன் உணர்ச்சியை காட்டறதுல அது 7 % தான். மீதி 93% உடல் மொழியாலேயும் சொல்லற்ற குறிப்புகளாலும்தான்
கடத்தப்படுதுன்னு சிலர் சொல்கிறாங்க.. இன்னும் சிலர் முகத்துக்கு முகம் கொடுத்து பேசும்போது
இது 35% - 65% என்கிறார்கள். எப்படி இருந்தாலும் பேச்சில்லாத பாகம் ரொம்பவே பெரிசு
என்பதை பாருங்க.
நாலு வயசு குழந்தைக்கு அப்பாதான் ஹீரோ. அப்பா எங்காவது நின்னுகிட்டு இன்னொருத்தரோட பேசிகிட்டு
இருக்கிறப்ப பக்கத்தில இருக்கிற குழந்தை தானும் அதே போல நிக்கும். அவர் நிக்கிற விதத்தை மாத்தி வேற மாதிரி நின்னா தானும் அதே மாதிரி நிக்கும். அவர் வலது காலை பின்னே ஒரு அடி நகர்த்தினா தானும் நகர்த்தும். இப்படி ஒத்தரை போலவே செய்கிறவங்க அவரோட மனநிலையில தானும் இருக்க நினைக்கிறவங்க! நாம் ஒத்தர்கிட்ட பேசறப்ப அவங்க இந்த மாதிரி நடந்துகிட்டா நம்மை புரிஞ்சுக்கிறாங்கன்னு
அர்த்தம்! அதே போல ஒத்தர்கிட்ட நாம் இப்படி நடந்துகிட்டா சீக்கிரமே அவங்க நம்மோட ஒத்துப்போயிடுவாங்க!
சாதாரணமா ஒத்தர் நம் கண்களை சந்திச்சு தயக்கமில்லாம பேசினா உண்மை சொல்கிறாங்கன்னு
அர்த்தம். நம்கண்களை தவிர்த்தா அனேகமா பொய்யாத்தான் இருக்கும். ஆனாலும் பொய் சொல்கிறதுல தேர்ந்த ஆசாமிக்கு இது
பொருந்தாது! அவனுக்கு எப்படி நடிக்கணும்ன்னு தெரியும்!
தலையை மேலும் கீழும் ஆட்டினா ஆமாம் போடறான்னு சொல்வாங்க. சீனாக்காரன்கிட்ட முடியாதுன்னு சொல்லறது கஷ்டமாம். அவங்க பேசறப்ப இப்படி தலையை மேல கீழ ஆட்டிகிட்டு
பேசுவாங்களாம்!
பேசுறப்ப தூக்கம் வராமலே கொட்டாவி விடறதும் பேச்சை மாத்தறதும் போர் அடிக்கறதுன்னு
சொல்லாம சொல்லுது இல்லையா?
பொதுவாக இல்லாம சிலருக்கே உரித்தான சில விஷயங்களும் இருக்கும். சீட்டாட்டத்துல முகத்தில ஒரு உணர்ச்சியும் காட்டாத நபர் ரொம்ப நல்ல கார்ட் வந்து
இருந்தா மூக்கை சொரியலாம்! அப்படி நடக்கும்போது அவரைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க
பேசாம ஆட்டத்தை விட்டுட்டு போயிடுவாங்க!
இதே போல கைகளை ஆட்டுவது, சுட்டிக்காட்டுவது, தொடுவது, உடம்பை தளர்த்திவிடுவது எல்லாம் ஒரு அர்த்தம் கொடுக்கும்.
நடிகர்கள் இதை எல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டு தன் நடிப்பில கொண்டு வந்தா சிறந்த
நடிகரா பரிமளிப்பாங்க. மக்கள் “ அடாடா! என்ன நடிப்பா! நடிப்பாவே தோணலை. ரொம்ப இயல்பா நடிச்சு இருக்காரு” ந்னு சொல்வாங்க!
இதைப்போல நிறையவே பார்த்துக்கொண்டு போகலாம். ஆனால் இப்படி முடிவுகளுக்கு வருவதுல கொஞ்சம் ஜாக்கிரதையாவே
இருக்கணும். நாம் பேசறப்ப தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கிற ஆசாமி நாம் சொல்வதுக்கு
உடன்பாடு இல்லைன்னும் காட்டலாம். அல்லது அவருக்கு குளிராவும் இருக்கலாம்! நம் கண்களை சந்திக்க மறுக்கிற குழந்தை பொய் சொல்லவும் சொல்லலாம் அல்லது அதன்
கலாசாரத்துல கண்களை நேருக்கு நேர் பார்க்கிறது அவமதிப்புன்னு சொல்லிக்கொடுத்து இருக்கலாம். அதனால ஒரே ஒரு சைகை, நடத்தையை வைத்து முடிவு எடுக்கக்கூடாது. எல்லா சைகைகள், நடத்தைகளையும் பார்த்தே இப்படி இருக்கலாம்ன்னு முடிவு
எடுக்கணும். எல்லாத்துக்கும் கால தேச வர்த்தமானத்தை பார்த்து நடந்துக்கணும்!
No comments:
Post a Comment