Pages

Tuesday, September 9, 2014

நேர்முறை எண்ணங்கள்.


நம்பிக்கை பெரிய வரப்பிரசாதம்
ஒரு முறை ஸ்கூல் முடித்து காலேஜ் சேர்ந்த மாணவர்களை வைத்து ஆய்வுகள் செய்தார்கள். அதுக்கு முதல் பரிட்சை முடிவுகளை ஆராய்ந்தாங்க. அதில  நிச்சயம் நல்லா செய்வோம் என்கிற எண்ணம் இருக்கிறவங்க நல்ல மதிப்பெண்கள் எடுத்தாங்க. இந்த எண்ணம் இருப்பது சாட் மதிப்பெண்களைவிட சரியா முடிவை காட்டுவதாக தெரிந்தது. எதானாலும் ‘நல்லா செய்ய எனக்கு திறமையும் மனதிடமும் இருக்கு’ என்ற எண்ணம் முக்கியம்.

நம்பிக்கையோட அண்ணன் நன்நம்பிக்கை என்கிற ஆப்டிமிசம். (optimism) ஒரு காரணமும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும் என்கிற மனப்போக்கு இவர்களுக்கு இருக்கும். கவலை என்பதே இராது! என்னதான் பெரிய தோல்வியை சந்திக்கட்டுமே, அடுத்த முறை நல்லபடியா நடக்கும்ன்னு அணுகுவாங்க! குறிப்பா சிறந்த விளையாட்டு வீரர்கள்கிட்ட காணக்கூடிய விஷயம் இது. தோல்வி கிடைத்ததா? அது ஏதோ ஒரு காரணத்தால், அடுத்த முறை அது மாறிடும்ன்னு நம்பிக்கை
மற்றவர்கள் தாந்தான் தோல்விக்கு காரணம்; அதனால அடுத்த முறையும் தன்னால முடியாதுன்னு நினைப்பாங்க

ஒரே அளவு புத்திசாலித்தனம் இருக்கறவங்க வாழ்கையில் சாதிக்கிறது அவர்களோட தோல்வியை ஏத்துக்கிற மனோதிடத்தை பொறுத்தது. இந்த இன்ஸ்யூரன்ஸ் விக்கிறவங்களை பாருங்களேன். இவங்க சந்திக்கிற முக்காலே மூணு வீசம் பேர் வேண்டாம்ன்னுதான் சொல்லுவாங்க. இருந்தாலும் இவங்க சிரிச்சுகிட்டே “ரைட் இன்னொரு முறை பார்க்கலாம்” ன்னு கை குலுக்கிட்டு கிளம்புவாங்க. நேரா அடுத்த ஆசாமியை பார்க்கபோயிடுவாங்க. இவங்க பார்வையில் அந்த ஆசாமிக்கு நிஜமாவே இன்ஸ்யூரன்ஸ் வேண்டாம்; அல்லது அவர் மோசமான மூட் ல இருந்தார், வேறு சந்தர்பத்துல திருப்பி பார்க்கலாம்; அல்லது வேற அணுகு முறை தேவை போலிருக்குஇப்படியே நினைப்பாங்க.

அப்படி இல்லாம இடிஞ்சு போய் உக்காருகிற ஆசாமியால ஒரு பாலிசியும் விக்க முடியாது. இவர் “எனக்கு திறமை இல்லை. என்னால பாலிசி விக்க முடியாது” ன்னு நினைப்பார். இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்?  இவங்களோட பிறவி குணம் அல்லது வளர்த்துகிட்ட மனநிலை.
சிலருக்கு அசாத்திய தன் நம்பிக்கை (self confidence) இருக்கும். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன், என்ன இப்ப? என்பார்கள். தன் வாழ்கை தன் கையில் என்ற நினைப்பு இவர்களுக்கு. தத்துவப்படி இது தப்புதான். ஆனாலும் அது சரியோ தவறோ இது அவங்களுக்கு உதவுது. என்ன தோல்வி வந்தாலும் அதுக்கு என்ன செய்யலாம்ன்னு மேலே மேலே பாத்துகிட்டு போவாங்க!

இதெல்லாம் புத்தியை பயன்படுத்தி செய்யற விஷயங்கள். எப்ப மனசு, புத்தின்னு ரெண்டுத்தையும் கழட்டி வைக்க முடியுமோ அப்ப நம்முள்ளே இருக்கிற பேராற்றலே வழிந்தோடும். இதை இறையாற்றல்ன்னும் சொல்லலாம். ஏதோ ஒரு சமயம் இந்த வாய்ப்பு கிடைச்சா அனுபவிக்கணும்! மனசளவில் விலகி நின்னு வேடிக்கை பார்க்க, தானா எல்லாமே நடக்கும். கை எழுதும். கால் நடனமாடும். வாய் பாட்டு பாடும். எல்லாமே மிக மிக உயர்தரமா இருக்கும்! சாதாரணமா செய்ய முடியாத விஷயங்கள் சர்வ சாதாரணமா கொஞ்சம் கூட அலட்டிக்காம நடக்கும்! இது சிலர் ‘ஜென் நிலை’ ன்னு கூட சொல்லலாம். யாரிந்த நிலைக்கு நினைச்சப்ப போக முடியுமோ அவங்களுக்கு ஆகக்கூடியது வேறு ஒண்ணுமில்லை!

அதிக வேலைக்கு நியோ கார்டக்ஸ்ல அதிக வேலை நடக்கணுமில்லையாஅப்படி இந்த நிலையில நடக்கிறதில்லை என்கிறதே இது புத்தி சார்ந்த வேலை இல்லை என்பதை காட்டுது. செய்கிற வேலையில் ஒரு காதல் இருக்கும் போது இது நிகழும் வாய்ப்பு இருப்பதா சொல்லறாங்க. குழந்தைகளுக்கு எது பிடிக்குதுன்னு கண்டு பிடிச்சு அது சம்பந்தமா அவங்களை படிக்க தூண்டும் போது மத்த விஷயங்களிலும் அவங்களுக்கு இந்த நிலை வாய்க்குதாம்.

ஆக மொத்தத்தில் நம் உந்துதல்களை கட்டுப்படுத்தறது;
வெகுமதியை தள்ளிப்போடும் அளவு நம் சுயகட்டுப்பாட்டை வளர்ப்பது;
நம் மூட்களை மாற்றிக்கொள்வது; அதனால் அவை செய்கிற வேலைகளுக்கு தடையாக இல்லாமல் துணையாக ஆக்கிக்கொள்வது;
இடர்கள் வந்தாலும் மனம் தளராமல் விடா முயற்சி செய்வதை வளர்ப்பது;
இதெல்லாம் உணர்ச்சிகள் நமக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கும்.


No comments: