Pages

Friday, June 26, 2015

அடியார்கள் - தேவராஜ முதலியார் , சாட்விக்


தேவராஜ முதலியார் ஒரு நாள் மத்தியானம் பகவானிடம் கை விசிறியால விசிறிக்கொண்டே கேட்டார்: “பகவானே ஒரு மனுஷனோட வாழ்கையில அவன் எந்த நாட்டில எந்த குடும்பத்தில பிறப்பான், என்ன தொழில் செய்வான், யாரைக் கல்யாணம் பண்ணிப்பான் எப்போ மரணம் ந்னு எல்லாமே நிர்ணயிச்சு இருக்கு ந்னு கேள்விப்படறேன். அதெல்லாம் அவனோட பூர்வ கர்மாவால நிச்சயிக்கப்பட்டிருக்குன்னு சொல்றா. ஆனா சின்ன சின்ன விஷயங்களும் இப்படித்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கா? உதாரணமா இப்ப விசிறிண்டு இருக்கேன். இப்ப விசிறியை கீழே வைக்கிறேன். இப்ப இந்த நாள் இந்த நேரத்துக்கு நான் விசிறியை கீழே வைப்பேன் என்கிறதும் நிச்சயிக்கப்பட்டிருக்கா? “
பகவான் சொன்னார்: “நிச்சயமா! இந்த உடம்பு எதை செய்யணும் எதை அனுபவிக்கணும் என்கிறது அது வரும்போதே நிச்சயிக்கப்பட்டுதான் இருக்கு! இதை சொன்னா போதும்! பக்குவி உடனே ஞானமடைஞ்சுடுவான்! மத்தவா தர்க்கம் பண்ணுவா.
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பதல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் .

ஒரு முறை தேவராஜமுதலியார் பகவானை கேட்டார் பகவானே, ஆத்ம முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமா வருமா... இல்லை உடனடியா வந்துடுமா?”
இருட்டான குகைக்குள்ளே நீர் டார்சை எடுத்துண்டு போறீர்... குகையில இருக்கும் இருட்டு கொஞ்சம் கொஞ்சமா மறையுமா இல்லை உடனடியா மறையுமா?” என்றார் பகவான்!

மேஜர் சாட்விக் ஆரம்ப காலங்களில் கிரிபிரதக்‌ஷிணம் செய்வார். பகவான் அருணாசலனேத்தான் என்று திட நம்பிக்கை பெற்ற பின் பழைய ஹாலை இரவு நேரங்களில் சுற்றி வருவார். ஒரு நாள் இரவு அப்படி சுற்றிவரும்போது யாரோ உம், உம்என்று முனகுவது கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். பகவாந்தான் அப்படி முனகிக்கொண்டு இருந்தார்!
அடுத்த நாள் மதிய உணவு முடிந்தபின் பகவான் ஓய்வாக இருக்கும்போது சாட்விக் அவரிடம் போய் கள்ளமில்லாமல் அவருடைய சந்தேகத்தை கேட்டார். “பகவானே ஞானிகளுக்கு சரீர பிரக்ஞை இராது என்கிறார்களே? ஆனா நேத்து நீங்க முனகினதை கேட்டேன். அது எப்படி பகவானே?”
இரண்டு நாளா உடம்புக்கு ஜுரம். அது ஏதோ முனகறது. அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லறேள்? அது அதோட தர்மத்தை செய்யறது. நாம உடம்பில்லையே?” என்றார் பகவான்.
சாட்விக் ஆசிரமத்துக்கு வந்து சில வருடங்கள் ஆயின. அவருக்கு தன் சாதனை சரியாக போகவில்லை என்று வருத்தம். புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஒண்ணுமே நல்லா நடக்கலே. த்யானம் பண்ண முடியலே. பகவான்கிட்டே சொன்னா யாருக்கு தியானம் பண்ண முடிலேன்னு பாரு என்கறார். நான் ஊருக்கே திரும்பி போகப்போறேன்... இப்படி கண்டவர்களிடம். புலம்பிக்கொண்டு இருந்தார். ஒரு நாள் பகவானிடமே தன் புலம்பலை ஆரம்பித்தார். மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்த பகவான் புலம்பி முடித்தபிறகு திரும்பி சாட்விக்கை ஒரு பார்வை பார்த்தார்! சாட்விக்கின் சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டது. ஓடிப்போய் தன் அறையில் புகுந்து கொண்டார். வெளியே வரவே இல்லை. இரண்டு நாட்கள் கழித்து குளிக்கும்போது திடீரென்று ஞானம் உதித்தது! இடுப்புத்துணியுடன் அப்படியே நேரே பகவான் இருந்த இடத்துக்குப்போனார். ”அவ்வளவுதானா பகவானே? அது இவ்வளோ எளிசா?” (Is that all bagavan? Is it so simple?). பகவானும் ஆமாம் சாட்விக்! அது அவ்வளவு எளிசானது!” என்றார். (yes chadvik, it is all. It is so simple!)
 

No comments: