பாவ்ராவ் மஹாராஷ்ட்ராவை செர்ந்தவர். பூனாவில் இருந்த அவரது குடும்பமே சாதுக்களை அண்டிய குடும்பம். அவரது தாத்தா மஹாராஷ்ட்ராவில் மிகவும் கொண்டாடப்பட்ட சாதுவான ஸ்வாமி நரசிம்ம சரஸ்வதியின் அத்யந்த பக்தர். ஆக ஆன்மீகமும் பக்தியும் சிறு வயது முதலே இருந்தது.
1939 இல் அவரது உடல்நிலை மிகவும் சீர்கெட்டுப் போயிற்று. ஸ்கையாட்டிக்கா என்னும் நோயால் நரக வேதனையை அனுபவித்தார். தூங்கவே முடியவில்லை. அங்கிருந்த சிறந்த மருத்துவர்கள் யாராலும் ஏதும் செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டுகள் வேதனை அனுபவித்த பின் இறப்பே பெரிய ஆறுதலாக இருக்கும் என தோன்றியது. 1942 பிப்ரவரி மாதம் ஒரு நாள் தங்கள் குல குருவான நரசிம்ம ஸரஸ்வதியின் படத்தின் முன் அழுதபடி “என் தாத்தாவுக்கு உங்களை தரிசிக்கிற பாக்கியம் இருந்தது, எனக்கு இல்லை. இருந்தா இப்படி எல்லாம் கஷ்டப்படுவேனா? ரொம்ப தளர்ந்து போயிட்டேன், எனக்கு இறப்பை கொடுங்க” என்று வேண்டினார்.
அதிகாலை அவருக்கு ஒரு கனவு வந்தது. ஒரு மலையில் உள்ள குகையில் ஒரு மகான் இருப்பதாகவும் அவரது பேச்சைக்கேட்க சாரை சாரையாக மக்கள் மலைப்பாதை ஒன்றில் ஏறிக்கொண்டு இருப்பதாகவும் கண்டார். அதில் அவரும் இருந்தார். குகையில் கூட்டமாக எல்லாரும் அமர்ந்து இருந்தனர். ஆனால் ஒரு சலசலப்பும் இல்லை. எல்லாரும் மௌனமாக அமர்ந்து இருந்தனர். இதோ பிரசங்கம் ஆரம்பிக்கும் என்று பாவ்ராவ் காத்து இருந்தார். ஆனால் ஒரு பிரசங்கமும் ஆரம்பிக்கவில்லை.
பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் “பிரசங்கம் எப்போ ஆரம்பிக்கும்?” என்று கேட்டார். அவர் “இங்கே மௌனம் மட்டுமே பிரசங்கம். அதிலே எல்லாரோட சந்தேகமும் தானா போயிடும்” என்றார்.
இவர் “ குரு எங்கே?” என்று கேட்டார்.
அவர் “உங்க
பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவர்தான்” என்றார்.பக்கத்தில் திரும்பிப்பார்த்தால்
ஒரு இளைஞன் வெள்ளை
கௌபீனத்துடன் முகத்தில்
புன்னகையுடன் அமர்ந்து இருந்தான்.
பாவ்ராவ் உடனே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். “உங்க பெயர் என்ன?” என்று கேட்டார். அந்த இளைஞன் அழகாக சிரித்துக்கொண்டே தன் ஹ்ருதயத்தை தொட்டுக்காட்டி “இதை ‘ரமண
மஹரிஷி’ என்னு சொல்றாங்க!” என்றான்.
கனவு கலைந்துவிட்டது.
அந்த கால கட்டத்தில் ரமணரின் புகழ் அவ்வளவு பரவி இருக்கவில்லை. மிகவும் படித்த சிலரைத்தவிர யாரும் இந்த பெயரை அறிந்திருக்கவில்லை. பாவ்ராவும் அறிந்திருக்கவில்லை. யார் இவர் என்ற ஏக்கத்துடன் சில நாட்கள் சென்றன. பத்தாம் நாள் தெரிந்த ஒருவரை சந்தித்தார், அவர் ராமேஸ்வரம் போய் வந்திருந்தார். அவர் தான் திருவண்ணாமலையும் சென்று வந்ததாகவும் அங்கே ரமண மஹரிஷியை பார்த்ததாகவும், ஒவ்வொருவரும் அவசியம் தம் வாழ்வில் சந்திக்க வேண்டியவர் அவர் என்றும் சொன்னார்.
பாவ்ராவும் உடனே திருவண்ணாமலைக்கு கிளம்பினார். காலை ஆறு மணிக்கு ஆசிரமத்துக்குப் போய் சேர்ந்தார்.அப்போது பகவான் இவர் எதிரில் இவரை நோக்கி வந்துக்கொண்டு இருந்தார். தரிசன மாத்திரத்திலேயே இவருக்கு ஆனந்தம் உண்டாயிற்று. கீழே வீழ்ந்து நமஸ்கரித்தார். பகவான் “பூனாவில் இருந்து வந்துட்டியா? ரொம்பவே தளர்ந்து போயிட்டே!” என்றார். இவருக்கோ மிகவும்
ஆச்சரியம்! மதியம் பழைய ஹாலில் பகவான் முன் சென்று அமர்ந்தார். பகவான் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின் அவரை கருணையுடன் பார்த்து “இங்கே எந்த பயமும் இல்லாமல் இருக்கலாம். உங்க வியாதியும் குண்மாயிடும்!” என்று அருளினார். பின் பகவத் கீதை ஒண்றை கூறினார். “எவன் இந்த விஷயங்களில்
சிக்கிக்கொள்வதில்லையோ அவன்
சுக துக்கங்களில் பாதிக்கப்படாதவனாய்
கர்ப்ப வாசத்தின் சம்பந்தம்
அற்றவனாக ஆகிறான். பின்னர் அவன் எந்த ஸ்திதியில் இருந்தாலும் உருக்கொண்ட பரப்ரஹ்மமே ஆவான்”
பாவ்ராவின் கவலை மறந்தது. நோய் நீங்கியது. அதிலிருந்து வருடம் நான்கு முறை வந்து தரிசனம் செய்து போகலானார்.
No comments:
Post a Comment