Pages

Tuesday, June 23, 2015

அடியார்கள் - குஞ்சுஸ்வாமி- 2



ராமக்ருஷ்ணஸ்வாமியின் தம்பி வாசுவுக்கு யோக சாதனையில் உஷ்ணம் ஏற்பட்டு மூளையில் தாக்கி எப்போதும் ஈஸ்வரா! நாராயணா!’ என்று அரற்றிக்கொண்டு தூக்கமில்லாமல் சிரமப்படுவதாக ஆசிரமத்துக்கு கடிதம் வந்தது.
பகவான் ராமக்ருஷ்ணஸ்வாமியையும் குஞ்சுஸ்வாமியையும் போய் வருமாறு சொன்னார். அப்போது கைங்கர்யத்துக்கு இந்த இருவர் மட்டுமே இருந்தார்கள். ராமக்ருஷ்ணஸ்வாமியிடம் ஒருவர் ஊருக்கு போய் வர மட்டுமே பணம் இருந்தது. மேலும் இந்த மாதிரி சமாசாரங்கள் பற்றி ராமக்ருஷ்ணஸ்வாமிக்கு ஒன்றுமே தெரியாது. இதனாலும் குஞ்சுஸ்வாமி மட்டுமே போய் வருவதாக முடிவாயிற்று. அன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஒரு அன்பர் நிறைய பூரிகளை செய்து எடுத்து வந்தார். ஆசிரமத்தில் பகவானுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாறினார். பகவான் வழக்கமாக இரண்டுக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால் அன்று அந்த அன்பர் வைத்த ஆறு பூரிகளையும் பேசாமல் ஏற்றுக்கொண்டார்! எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். பரிமாறி முடித்ததும் பகவான் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அழகாக பொட்டலாமாக கட்டி குஞ்சுஸ்வாமியிடம் கொடுத்தார்.
“”பாவம்! அவன்கிட்ட ரயிலுக்குத்தான் பணமிருக்கு. சாப்பிட என்ன பண்ணுவான்?” என்றார்.
பிற்காலத்தில் இதை நினைவு கூறுகையில் குஞ்சுஸ்வாமி தேம்பித்தேம்பி அழுவார்.


குஞ்சுஸ்வாமி பலாக்கொத்துக்கு சென்றபின் ஒரு நாள் பகவானிடம் தன் இயலாமையை சொன்னார். ”பகவானே, எந்த நேரமும் ஆத்மாவிலே இருக்க முடியலே!”
பகவான் ஆனந்தமடைந்தார்.
இந்த கவலை தேவையில்லை. காலை தூங்கி எழுந்தவுடனே கொஞ்சம் விசாரம் பண்ணனும். அப்புறமா மத்த வேலைகளை கவனி. உன்னைத் தேடி எந்த வேலை வரதோ அதை பொறுப்பா செய். எல்லா வேலைகளுக்கும் ஆதாரம் ஆத்மாவே. மறுபடி தூங்க போகும் முன்னே கொஞ்சம் விசாரம் பண்ணு. அப்படியே தூங்கிடு. மொத்த தூக்கமும் ஆத்மாகாரமாவே இருக்கும். திரும்ப காலை எழுந்தவுடனே விசாரம் பண்ணு. தூக்கத்தில் ஏற்பட்ட சுகம் தெளிவாகும். பின்னே வேலைகளை கவனி. இப்படி இருக்கறதுதான் எப்பவும் ஆத்மாவிலேயே இருக்கறது.
நாம்தான் மூணு நிலையிலும் மாறாத இருப்புன்னு தெரிஞ்சுக்கறதே எந்த நேரமும் ஆத்மாவிலே இருக்கேன் என்கிறதுக்கு பொருள். அதை விட்டுட்டு நான்எப்பவும் ஆத்மாவிலே இருக்கேன்னா அகந்தைதான் மேலே சூக்‌ஷுமமா கிளம்பும். அதை பிடிக்கப்போனா அது காணாம போயிடும். அப்புறம் இந்த கேள்விக்கே அர்த்தம் இருக்காது.”
கொஞ்ச நேரம் பகவான் குஞ்சுஸ்வாமியை பார்த்தபடி இருந்தார். “குஞ்சு! தூக்கத்திலேயும் மனசு சிந்தனை எதுவும் இல்லாத சமாதி போதும் மட்டும் நீ ஆத்மாவா இல்லே! மனசு விபரீதமா எதையும் எண்ணும்போதும் கூட நீ ஆத்மாவாத்தான் இருக்கே! இனிமே நீ புதுசா எந்த நேரமும் ஆத்மாவா இருக்கப்போறேன்னு ஒண்ணுமே கிடையாது!” என்றபின் மௌனமானார்.
   

No comments: