Pages

Tuesday, June 16, 2015

அடியார்கள் - ராஜா ஐயர்


ராஜா ஐயர் போஸ்ட் மாஸ்டர். ஓர் இரவு கனவொன்று கண்டார். அப்போது அவர் போஸ்ட் மாஸ்டர் இல்லை. யாரோ யோகி சோஃபாவில் அமர்ந்து இருக்கிறார்கள். அவரைச் சுற்றி பிரகாசமாக இருந்தது. அவர் அருகே பங்கா இருந்தது. அவர் ராஜா ஐயரை பங்கா இழுக்கச்சொன்னார். அவ்வளவே; கனவு கலைந்து போயிற்று!
சிறிது நாட்கள் கழித்து ராஜாஐயர் பகவானை தரிசிக்க வந்தார். அப்போது பகவான் சோஃபாவில் அமர்ந்து இருந்தார்.
பகவானை நமஸ்கரிக்க அவர் போய் உணவு முடித்து வரச்சொன்னார்.
ராஜாஐயரும் உணவருந்த போனார். அப்போது தாம் கனவில் கண்ட யோகி பகவாந்தானோ என்று மனதில் தோன்றியது. உணவு முடித்து ஹாலுக்கு வந்தார். உடனே பகவான் இந்த பங்காவை கொஞ்சம் இழுஎன்றார்.
பொதுவாக பகவான் யாரை இப்படி வேலை சொல்லுவதில்லை!
இரண்டு நிமிடங்கள் ஆனதும் போதும் என்று சொல்லிவிட்டார்.
ராஜாஐயருக்கும் பகவான் கனவில் கண்டது தன்னையே என விளக்கவே இந்த வேலையை சொன்னதாக தோன்றியது.
பகவான் சேவகராக தன்னை ஏற்றுக்கொண்டதாக கருதி தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

ராஜாஐயர் ஆசிரமத்தில் தங்க வேண்டுமென்றால் ஏதேனும் சேவை செய்தாக வேண்டுமென்று சின்னஸ்வாமி திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ராஜாஐயருக்கோ எந்த வேலையும் செய்யாமல் முழு நேரமும் பக்தி செலுத்திக்கொண்டு இருக்கவே விருப்பம் இருந்தது.
பகவானிடம் உத்திரவு கேட்பதற்காக நடந்ததை கூறினார். பகவான் காலை இட்லி வேக வையேன்!” என்றார். பகவான் நான் சொல்லித்தரேன்என்று சொல்லி இட்லிக்கு மாவரைப்பது எப்படி என்பது முதல் எல்லாவற்றையும் ஒரு வாரம் சொல்லித்தந்தார். பின் இட்லியை வேகவைக்கச் சொல்லித்தந்தார், “நாளையிலேந்து நீயே செய்யணும்என்றார் பகவான்.
அடுத்த நாள் ராஜாஐயர் பதட்டத்துடன் ஓடி வந்தார். “பகவானே, இட்லியை முழுசா எடுக்க முடியலை! பிஞ்சு பிஞ்சு வரது!”
பகவான் நிதானமாக முத ஏடு இட்லியை அக்னிக்கு கொடுக்கணும்ன்னு சொன்னேனே? அத மறந்துட்டியா? அதான்! போய் அக்னிகிட்டே நாளையிலிருந்து முத ஏடு இட்லியை உனக்கு மறக்காம கொடுத்துடறேன்னு சொல்லு! எல்லாம் சரியாயிடும்!”
பகவான் சொன்னது போல அக்னியிடம் வேண்டிக்கொண்டு, அடுத்த ஏடு இட்லிகளை அருமையாக வைத்து எடுத்தார் ராஜா ஐயர்!

No comments: