Pages

Wednesday, August 6, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 3 - நீக்குப்போக்கான எதிர்பார்ப்பு, விரக்தி


 நீக்குப்போக்குடன் எதிர்பார்ப்பு:
'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற பிடிவாதம் இல்லாமல் 'இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்' என்ற ரீதியில் எதிர்பார்ப்புகளாக மாற்றிக்கொண்டால் பல விஷயங்கள் சௌகரியமாக போய்விடும். இது கெட்டகோபத்தை 'நல்ல' கோபம் ஆக்கிவிடும். பின்னால் அதை எதிர்பார்ப்பதையும் நீக்கி இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று மாற்றிக்கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பு! அப்போது கோபமே வராது!
ராமுவும் சோமுவும் சாப்பிட ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கே இரண்டு பேர்கள் குடித்துவிட்டு சத்தம் போட்டு அசிங்கமாக பேசிக்கொண்டு தொந்திரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ராமு முகம் சுளித்து "இங்கே இருக்க வேண்டாம், வேறு இடத்துக்குப்போய் விடலாம்" என்கிறார். மாறாக சோமு எழுந்து அவர்களைப்பார்த்து திட்டுகிறார். கடைசியில் குடிகாரர்கள் இன்னும் இரண்டு நண்பர்களை சேர்த்துக்கொண்டு சோமுவை நன்றாக அடித்துவிடுகிறார்கள்!
இங்கே ராமுவின் மனப்போக்கை பாருங்கள்: இவர்கள் இப்படி குடித்துவிட்டு கலாட்டா செய்வது நன்றாக இல்லை. இந்த கெட்ட சூழ்நிலையிலிருந்து விலகிவிடலாம். இவர்களை இந்த இடத்து சொந்தக்காரர் பார்த்துக்கொள்ளட்டும்.
மாறாக சோமுவின் மனப்போக்கு: இந்த முட்டாள்கள் என்னை அவமானப்படுத்துகின்றனர்; இவர்களுக்கு பாடம் கற்பிப்பேன். யார் பெரியவன் என்று பார்த்துவிடலாம்!
என்ன நடந்தது என்பது தானே விளக்குகிறது.
குறை நிறையுடன் மற்றவர்களை ஒப்புக்கொள்வது:
மற்றவரை முட்டாள், அசடு, ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை ன்னு நினைக்கும் முன் ஒரு விஷயத்தை ஆராயறது நல்லது. இப்படி செய்வது மிகவும் தவறான மிகைப்படுத்தல். அவர் எப்போதுமே அசடு/ முட்டாள்/ லாயக்கில்லை ன்னு இல்லை. அப்பப்ப அப்படி இருக்கலாம். அப்படித்தான் நாமும் அனேகமா இருக்கோம்!
எல்லாருமே எப்போதுமே புத்திசாலியாவும் சமர்த்தாவும் இருக்கோமா என்ன? நம்மில் அனேகமான பேர் அப்படி இல்லை. எப்போதோ அசட்டுத்தனம் செய்திருப்போம்; முட்டாள் போல நடந்திருப்போம்; லாயக்கில்லாம இருந்திருப்போம்! நம்மைப்போல இவரும் இப்ப அப்படி இருக்கிறார்! அவ்வளவுதான். இது நாம் சமநிலையை தவறாது வைத்துக்கொள்ள உதவும்; கோபம் வருவதை கட்டுப்படுத்தும்; எல்லாரையும் அவரவர் குறை நிறைகளுடன் ஏற்க சுலபமாக ஆக்கும்! குறைகளை மட்டும் பார்த்தால் இன்னொருவரை மதிப்பது கஷ்டம்! மதிக்காவிட்டால் நாம் உள்ளதை உள்ளபடி பார்க்க மாட்டோம். அப்படி பார்க்காவிட்டால் நாம் சரிவர நிலமையை புரிந்து கொள்ளாமல் நம் உறுதித்தன்மையை நிலைநாட்ட முடியாது.
இப்படி பார்வை சரியானால், நாம் ஒரு நபரை கண்டனம் செய்யாமல் ஒருவருடைய குறிப்பிட்ட செயலை கண்டனம் செய்வோம்! இது நல்ல பழக்கம். ஆனால் இது பலருக்கும் புரிவதில்லை!
இப்படி தொடர்ந்து செய்தால் இது பொது விதி ஆவதால் நம்மை நாமே கூட சுலபமாக ஒப்புக்கொள்வோம்! சிலருக்கு தன்னை பற்றியே நல்ல அபிப்பிராயம் இராது. தன் இயலாமை ஓங்கி வளர்ந்து பயமுறுத்தும்! இவர்கள் ஒரு எதிர்வினையாக பிறருடன் சண்டை போடுவார்கள்... உன்னை நசுக்குவதால் நான் பெரியவனாகிவிடுவேன் என்ற தவறான கற்பனை! எல்லாரைப்போலவும்தான் நானும் குறை நிறைகளுடன் இருக்கிறேன் என்று தோன்றிவிட்டால் இந்த தாழ்வு மனப்பான்மை மறைந்துவிடும்.
விரக்தி: நம் குறிக்கோள்களையும் இலக்கையும் அடைய தடையாக ஏதாவது வந்தால் நமக்கு விரக்தி ஏற்படுகிறது; இதுவே சம்பந்தப்பட்ட நபரிடம் கோபமாக மாறுகிறது. குறிக்கோள்களும் இலக்குகளும் நமக்கு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு விரக்தியும் கோபமும் அதிகமாகின்றன.
எவ்வளவு தடை ஏற்பட்டால் இந்த விரக்தி வருகிறது என்பது ஆளுக்காள் மாறுபடுகிறது.
'மிடிலை!' 'இனிமே தாங்காது!' 'போதும்பா போதும்!' இதெல்லாம் சுலபமா விரக்தி அடைகிற மனிதன் வாயில் வருகிறவை.
'ம்ம்ம்ம் கஷ்டம்தான்; இருந்தாலும் சமாளிச்சுடலாம்!' 'தாங்க முடியாதுன்னு தோணினாலும் தாங்க சக்தி இருக்கு!' 'சில குறிக்கோள்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக்க வொர்த்!' இதெல்லாம் சுலபமா விரக்தி அடையாத மனிதன் வாயில் வருகிறவை.
நமக்கு விரக்தி வரும்போது இப்படி யோசித்துப்பார்க்கலாம்:
  1. நிஜமாகவே இது அவ்வளவு மோசமான நிலமையா?
  2. இது மோசமான நிலமையா அல்லது எனக்கு பிடிக்காத நிலமையா?
  3. இது வெறும் இக்கட்டான நிலமையா அல்லது ஒத்துக்க முடியாத அளவு மோசமா?
உண்மையில் பல விஷயங்கள் நமக்கு சகிக்கவோ தாங்கவோ கஷ்டமானாலும் சகிக்க / தாங்க முடியக்கூடினவைதான். கசப்பானாலும் சோகமானாலும் முழுங்கக்கூடியவைதான்! நாம் வாழ்கையில் முன்னே சந்தித்த இதே போன்ற சமாசாரத்தை நினைவுக்கு கொண்டுவந்து பார்த்தால் புரிந்துவிடும், நாம் எவ்வளவு தாங்கி இருக்கிறோம் என்று!

உதாரணமா ட்ராபிக்ல ஒரு நாள் நல்லா மாட்டிக்கிடோம்ன்னு வெச்சுக்கலாம். ஆபீஸ்ல முக்கியமான வேலை! பெரிய க்லையண்ட் ஒத்தர் வரார். நேரத்துக்கு நாம போகலைன்னா பிரச்சினை வரும்! இப்ப என்னதான் கத்தினாலும் கொண்டாலும் ட்ராபிக் இம்ப்ரூவ் ஆகாது! மாறா நம்ம கோபம் இன்னும் சிலருக்கு கோபத்தை கிளப்பிவிட்டு இன்னும் மோசமாக்க முடியும்!
மாற்றா இது நல்ல கோபமா இருந்தா, கோபத்தை நம் கார் ஸ்டியரிங் மேல காட்டாம ஆபீஸுக்கு அலை பேசியில போன் பண்ணி மாற்று நபர் க்லையண்டை சந்திக்கவும், நாம் ஏன் வரலை என்கிறதுக்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம். நிறைய பேர் இதை புரிஞ்சுக்க முடியும்; தப்பா நினைக்க மாட்டாங்க.

No comments: