Pages

Friday, August 8, 2014

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 4 நம் அதிருப்தியை தெரிவிக்க ...


 
நாம் கோபமா இருக்கிறது நம்ம ரைட்ன்னு சிலர் நினைக்கலாம். கோபப்படுகிறதுக்கான காரணமும் நிஜமா சரியாகவே இருக்கலாம். ஆனால் கொஞ்சம் நாம் கோபப்படுகிறதுல என்ன சாதக பாதகம் ன்னு யோசித்துப்பார்க்கலாம். ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு தெரியும் போது நம்மோட கெட்ட கோபங்கள் நல்ல கோபங்களா ஆக வாய்ப்பிருக்கு!

பின்னே நம்மோட அதிருப்தியை எப்படி தெரிவிக்கிறதுன்னு கேட்கலாம். அது நல்ல கேள்வி!
ஏன்னா நாம் உணர்ச்சிகளை அப்பப்ப வெளிப்படுத்திட்டா பின்னால கெட்ட கோபமோ டிப்ரஷனோ வராதாம்! ஆனாலும் நாம் நினைக்கறதை அப்படியே வெளிப்படுத்த முடியாதே? அது பிறருக்கு உவப்பா இராது. அதனால் எப்படி வெளிப்படுத்தணும் என்பதை கொஞ்சம் ஆற்றுப்படுத்தணும்
 
நம்மோட நிலைப்பாட்டை சொல்வதில யாருக்கும் ஒரு ஆட்சேபணையும் இருக்க முடியாது! அதாவது அதை சொல்கிறபடி சொன்னால்! அது நம்மோட உறுதியை காட்டுது. இது மற்றவருடன் உடன் படலை என்பதை காட்டுமே ஒழிய அவங்களோட நமக்கு வேற காழ்ப்பு ஒண்ணுமில்லை. அதாவது ஒத்தரோட ஒரு நிலைப்பாடு/ கருத்துடன் நாம் உடன்படலை. அப்படி எப்பவும் உடன் படுவது அவசியமும் இல்லை. அதில வன்முறையோ வற்புறுத்தலோ பிறருடைய உரிமைகளை மீறுவதோ இல்லை. நான் பெரியவனா நீ பெரியவனா சமாசாரம் இல்லை. நீ தோற்கணும் நான் ஜெயிக்கணும் ன்னு ஒண்ணும் இல்லை.

இருந்தாலும் இடம் பொருள் ஏவல் தெரிஞ்சே நம் நிலைப்பாட்டை பதிவு செய்யணும்.
இப்படி செய்யும்போது மற்றவர்கள் நாம் சொல்வதை கூர்ந்து கேட்கும் வாய்ப்பு அதிகம். கோபப்பட்டால் எதிர்வினையாக அவர்கள் நாம் சொல்வதற்கு செவி சாய்க்காமல் போகும் வாய்ப்பே அதிகம்.
கோபம் வந்தாச்சு, இந்த சொல்கிறபடி சொல்வதை நம்மால் செய்ய முடியாதுன்னா பேசமலே இருந்துடலாம்; அலல்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துடலாம். பின்னால நாம் அமைதியா இருக்கும்போது திருப்பி கலந்துக்கலாம்.

இந்த நிலைப்பாட்டை நிலை நிறுத்துவதில சில விஷயங்கள் இருக்கு.
முதலாவதா மற்றவரோட கவனத்தை கவரணும். உதாரணமா ஏதாவது ஒரு கடையில ஒரு புகார் கொடுக்கணும் ன்னு வைத்துக்கொள்ளலாம். கடை சிப்பந்தி மற்ற ஒருவரை கவனித்துக்கொண்டு இருக்கிறார். நாம் கொஞ்சம் பொறுமையுடன் இருந்து அவர் அப்போதைய வேலையை முடிக்கும் வரை காத்திருந்து பிறகு நம் புகாரை சொன்னால் அது முறையாக கவனிக்கப்படும் வாய்ப்பு அதிகம். மாறாக நாம் பாட்டுக்கு கோபத்துடன் கத்த ஆரம்பித்தால், எப்படி புகாரை கவனிக்காமல் இருக்க முடியுமோ அந்த வழியைத்தான் அவர் கண்டுபிடிப்பார்!

அடுத்து சரியான இடம். போர்ட் மீட்டிங்கில் உங்களைப்பற்றி ஏதேனும் உங்கள் பாஸ் தவறுதலாக சொல்லிவிட்டால் அப்போதைக்கு சும்மா இருந்துவிடலாம். பின்னால் அவருடன் அவருடைய அலுவலகத்தில் தனியாக இருக்கும் போது நம்முடைய அதிருப்தியை சொல்லலாம்.
என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இந்த விஷயத்துக்கு புதிது என்றால் முன் கூட்டியே கொஞ்சம் ஒத்திகை பார்ப்பது நல்லது. கூச்சல், திட்டுவது என்பதெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியன.

நாம் ஒரு செயலுக்கோ நடத்தைக்கோதான் அதிருப்தியை தெரிவிக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும். குறிப்பிட்ட நபரைப்பற்றி சொல்ல வேண்டாம். "நீ முட்டாள்”, "அறிவிலி" போன்ற தனி நபர் தாக்குதல் வேண்டாம்.

அதிருப்தி நம்முடையது என்பதும் நினைவில் இருக்கட்டும். அடுத்த நபர் மீது குற்றம் சாட்டுவது நம் நோக்கம் இல்லை. நாம் நம் உணர்ச்சியை தெரிவிக்கப்போகிறோம். “ நீ செய்வதாக சொன்ன வேலையை சரியாக செய்யாதது எனக்கு வருத்தம்", “நீ தாமதப்படுத்தியதால் என்னால் நேரத்துக்கு என் வேலையை முடிக்க முடியவில்லை” போன்ற ரீதியில் இருக்கலாம்
 
நம் அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் இருக்கவும் பின்னால் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும்தான் நம் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படி இல்லை என்றால் இதை செய்வது அவசியம்தானா என்று சற்றே சிந்திக்க வேண்டும். குறிப்பாக நாம் கெட்ட கோபத்துக்கு அடிக்கடி ஆளாவதாக இருந்தால்.
நாம் இதுவே சரி என்பதால் வன்முறையை விட்டு அமைதியான இந்த நிலைநாட்டலை கடைபிடிக்கிறோம். இது எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை அமைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறோம். அவ்வளவே. என்ன நடக்குமென்பதில் எதிராளியின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. எதிராளி இதற்கு மோசமாக நடந்து கொள்ளலாம். அது அவருடைய பிரச்ச்சினை. இந்த அவருடைய பிரச்சினை நம்மையும் பாதிக்குமென்றால் நாம் நகர்ந்துவிடுவதே உசிதம்.
Post a Comment