விமர்சனம் என்பதை பல பேரால் சரியாக ஆள முடியவில்லை. நம் வேலையை யாரும் விமர்சிக்கக்கூடாது என்றே பலரும் நினைக்கிறோம். பாராட்டும் ஒரு விமர்சனம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்!
நாம் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுப்போய் கொடுக்கிறோம். பாஸ் அதை படித்துவிட்டு "இந்த அறிக்கை ரொம்ப மோசம்” என்கிறார். நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம்?
இந்த அறிக்கை ரொம்ப மோசம் >> என் அறிக்கைகள் ரொம்ப மோசம் >> என் வேலைகள் எல்லாமே ரொம்ப மோசம் >> நான் ரொம்ப மோசம்!
இப்படி மனசு போனால் நமக்கு கோபம் வந்து எதிர்வினைக்கு தயாராகிவிடுகிறோம்!
ஆகவே சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.
நம் வேலைதான் விமர்சனத்துக்கு உள்ளானதே தவிர நாம் அல்ல.
விமர்சனம் நம் வேலையை செம்மை படுத்தக்கூடியது. ஆகவே நம் உறவும் பலப்படலாம்.
விமர்சனம் செய்வது பாஸ் இன் உரிமை; கடமையும் கூட. உங்களை முன்னேற்றுவதும் அவருடைய வேலைகளில் ஒன்று.
கேட்கும் விமர்சனங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூட ஒன்றுமில்லை. அதை நிதானமாக ஆராய்ந்து சரி என்று நினைப்பதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடலாம்.
எல்லோருக்குமே அவ்வப்போது விமர்சனங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் விமர்சனத்துக்கு ஆட் படாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.
பொத்தாம் பொதுவாக யாரும் விமர்சித்தால் குறிப்பான கேள்வியை கேட்கலாம். அது அவர்களை வலுவிழக்கச்செய்து விடலாம். யோசிச்சு பாருங்க... “நீ முட்டாள்” ன்னு யார்கிட்டேயாவது சொன்னா அவங்க சிரிச்சுகிட்டே " அப்படியா? ஏன் அப்படி சொல்லறீங்க?” ன்னு கேட்டா அவங்களை என்ன செய்யமுடியும்? குறிப்பான காரணத்தை சொல்ல வேண்டி இருக்கும். அப்படி காரணத்தை சொல்ல முடியாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதான்! ஏதேனும் குறிப்பிட்டு சொன்னால் அதற்கு "ம்ம்ம் .. அப்படியா? அந்த விஷயத்தில நான் செஞ்சது முட்டாள்தனமா இருக்கலாம்" ன்னு சொல்லிட்டாலும் நாம் வாயை மூட வேண்டியதுதான்!
ஆமாம்! நமக்கு கிடைக்கிற விமர்சனம் எல்லாமே சரியான ஆரோக்கியமான விமர்சனம் இல்லைதான். அதில பல பொய்கள் இருக்கலாம்; தவறான முடிவுகள் இருக்கலாம்; வேண்டுமென்றே கூட சில பழிகள் சுமத்தப்படலாம். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது? எப்படி வலுவிழக்கச்செய்வது?
ஒரு உதாரணத்தைத்தான் மேலே பார்த்தோம். விமர்சனத்தில் கொஞ்சம் உண்மை இருந்தால் அதை ஒப்புக்கொண்டால் எதிராளியால் அதற்கு மேல் ஒண்ணும் சொல்ல முடியாது. வேணும்ன்னு சண்டை வளர்க்க வந்த ஆசாமிகிட்ட "ஆமா, இந்த குறிப்பிட்ட விஷயத்தில நீ சொல்கிறது சரியே" ன்னு சொல்ல கொஞ்சம் ஆடிப்போயிடுவார்! அடுத்து என்ன செய்யறதுன்னு அவர் யோசிக்கிறதுக்குள்ள நாம் அடுத்த விஷயத்துக்கு போயிடலாம்!
பொத்தாம் பொதுவான் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் நாம் கெட்ட கோபத்துக்கு ஆளாகி சண்டையை ஆரம்பிக்காமல் குறிப்பா விமர்சனம்செய்யச் சொல்லி கேட்கலாம். மேலே உதாரணம் பார்த்தோம் இல்லையா?
அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டலாம். “ நீ எப்பவும் லேட்டாத்தான் வரே!” என்று திட்டும் நண்பரிடம் " ஆமாம். சரிதான். எப்பவுமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் எனக்கும் கிடையாது" “ நிஜமா அவ்வளவு எரிச்சல் இருக்கா?” ன்னு கேட்டா .... முதலாவது பாதி உண்மை, ஒப்புக்கிறதுல பிரச்சினை இல்லை. எல்லாருமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் உடையவர்கள் இல்லை! அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டுவதால கொஞ்சம் இளகி "ஆமா, இன்னைக்கு எல்லாமே தப்பா போகிறது" ன்னு தன் பிரச்சினையை அவர் சொல்லலாம். அது புது பாதையை திறக்கும்.
No comments:
Post a Comment