ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது!
ரைட்! நாம் மத்தவங்ககிட்ட அன்பு பாராட்டியாச்சு. மத்தவங்களோட ஒரு கனெக்ஷனையும்
ஏற்படுத்திக்கொண்டாச்சு! எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு வாழ்த்தவும் வாழ்த்தியாச்சு!
கிடைச்ச நல்ல விஷயத்துக்கெல்லாம் சந்தோஷப்பட்டாச்சு; நன்றி சொல்லியாச்சு!
நமக்கு மத்தவங்க செஞ்ச ‘தப்புக்கு’ மன்னிப்பு கொடுத்தாச்சு; வாங்கவும்
வாங்கியாச்சு!
அடுத்து நாம் எங்கே போறோம்?
ஆமாம். கடந்த காலத்தை இப்ப கடந்து எதிர்காலத்தை கொஞ்சம் எட்டிப்பார்க்கலாம்.
வரும் காலத்தில நாம் எப்படி இருக்கணும்? அது பத்திய நம்மோட ஆசைகள் என்ன? கற்பனைகள்
என்ன? இன்னும் மூணு வருஷத்துல நான் இதை எல்லாம் சாதிக்கணும், செய்யணும் ந்னு யோசிக்கலாம்.
ஆய்வுகள் சொல்வது சாதாரணமா நாம் இன்னும் ஒரு வருஷத்தில செய்யப்போவதை
பத்தி அதிகமா மதிப்பீடு செய்யறோம். இன்னும் மூணு
வருஷத்துல செய்யப்போவதைப்பத்தி குறைவா மதிப்பீடு செய்யறோம்!
அதனால இப்ப மூணு வருஷம் கழிச்சு எப்படி இருக்கப்போறோம் என்பதை
கொஞ்சம் அதிகமாகவே கற்பனை செய்துக்கலாம். பத்து கோடி
சம்பாதிப்பேன்னு நினைக்கிறதை பதினஞ்சு கோடின்னு நினைச்சுக்கலாம். எதுக்கு கற்பனா தரித்ரம்?
கற்பனா தரித்ரம்னா என்னவா?
ஒரு பிச்சைக்காரன் இருந்தான். ஒரு
நாள் சாப்பிட ஒண்ணுமே கிடைக்கலை. போறதுன்னு சாப்பிடறதா பாவனை செய்துகிட்டு இருந்தான். கையில் ’இருக்கிற’ தட்டிலேந்து
எதையோ எடுத்து எதையோ தொட்டு சாப்பிடறா மாதிரி அசைவுகளை பார்க்க வினோதமா இருந்தது. பக்கத்துல இருந்த பிச்சைக்காரன் கேட்டான், என்னப்பா சாப்பிடறே?
“இட்லி!”
“தொட்டுக்க என்ன?”
“நேத்து வெச்ச சாம்பார்!”
இட்லி சாப்பிடறதா கற்பனை பண்ண ஆசாமி சுடசுடச்சாம்பாரை கற்பனை பண்ணக்கூடாதா? ஹும்!
இதான் கற்பனா தரித்திரம்!
அதுக்குன்னு நடக்கவே முடியாத விஷயத்தையும் கற்பனை செஞ்சுக்க
வேண்டாம். நான் அமெரிக்க அதிபர் ஆகணும் ந்னு கற்பனை பண்ணலாம். ஆனா அதுக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இருக்கணுமே?
ரியலிஸ்டிக்கா கற்பனை செய்வோம்!
ஜிம் கேரெ ந்னு ஒரு அமெரிக்க நகைச்சுவை நடிகர். இவரைப்பத்தி ஒரு கர்ண பரம்பரை கதை! வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வி! தோல்வி
மேலே தோல்வி! எதைத் தொட்டாலும் அது தோல்வி! திவாலே
ஆயாச்சு! இருந்தாலும் அவர் பர்ஸுலேந்து ஒரு பேப்பரை அடிக்கடி எடுத்து
பார்த்துகிட்டே இருப்பாராம்! அது என்னன்னா, அது ஒரு செக். அதுல
எழுதி இருந்தது- ஜிம் கேரிக்கு, அளித்த சேவைக்ககாக
ஒரு மில்லியன் டாலர்! சும்மா ஒரு ப்ளாங்க் செக்ல இவரே எழுதினது!
பல வருஷங்கள் கழித்து அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு
வந்தது. அந்த படம் ’ஹிட்’ ஆச்சு! அடுத்த படமும் நடிச்சு முடிச்சார். Dumb and Dumber. அதுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட செக்ல ஜிம் கேரிக்கு, அளித்த சேவைக்காக ஒரு மில்லியன் டாலர் ந்னு எழுதி இருந்தது!
இருந்தாலும் நாம ரியலிஸ்டிக்கா இருக்கறதே நல்லது! அதுக்கு மேலே நடந்தா வேணாம்ன்னா சொல்லப்போறோம்?
நமக்குன்னு சில இலக்குகளை நிர்ணயிச்சுப்போம். நம் எதிர்காலத்தை குறித்த ஒரு கற்பனை பார்வை இருக்கட்டும். அப்புறம் இதை எப்படி அடையப்போறோம்ன்னு ஒரு கற்பனை. மூணு பக்கெட் பட்டியல்கள்…. அது
என்னவா? மூணு பக்கெட்களை கற்பனை பண்ணிக்கோங்க. எந்த கலர் வேணா இருக்கட்டும். அப்பப்ப
உங்களுக்கு தோணுகிறதை இதுல போட்டு வைங்க. ஒண்ணுத்துல
என்னவெல்லாம் அனுபவிக்க நினைக்கிறோம். அடுத்ததுல
என்னென்ன வளர்ச்சி இருக்கணும். கடைசியா இந்த உலகத்துக்கு என்ன கொடுக்கப்போறோம்.
ரைட்! கற்பனை ஓடட்டும்!
No comments:
Post a Comment