Pages

Wednesday, December 17, 2014

மன்னிப்பு!




மன்னிப்பு!
இது பத்தி நான் முன்னேயே சொந்தமா  விசாரம் செய்து -’ஜிந்திச்சு’ - ஒரு பதிவு எழுதினேன். சுமார் இரண்டு வருஷம் கழித்து அந்த விஷயத்தை இந்த சீரியலில் பார்க்கிறது சந்தோஷமா இருந்தது! பாத்தீங்களா? என்னைப்பத்தி நல்ல விஷயம் ஒண்ணு யோசிச்சு வெச்சுட்டேன். நாளை பயிற்சியப்ப சொல்லிக்கலாம்

நம் வாழ்க்கையில பல விஷயங்கள் நமக்கு பிடித்தமா இல்லாம நடக்குது. காலை வண்டியை எடுக்கப்பாத்தா கேட்டுக்கு வெளியே இடைஞ்சலா கரக்டா ஒத்தர் வண்டியை நிறுத்தி வெச்சிருக்கார். ஒரு வழியா வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே ஓட்டிக்கொண்டு போறப்ப ஒரு விடலைப்பையன் சர்ர்ர்ர்ர் ந்னு பல்சர்லே இடது பக்கம் ஓவர்டேக் பண்ணி நமக்கு ஹார்ட் அட்டாக் வர வித்தையை காட்டறான். இது போல பல விஷயங்கள் தினசரி வாழ்க்கையில நடந்துகிட்டே இருக்கு.

இதெல்லாம் போக, நம்பின ஒத்தர் கைவிட்டு விடரார். ஆருயிர் நண்பன் துரோகம் பண்ணறான் ந்னு அப்பப்ப சீரியலானசாரி,  சீரியஸான பிரச்சினைகளும் எழுந்து கொண்டேத்தான் இருக்கும். இதில் பலதையும் நம்மால எளிதா கடந்து போக முடியலை! ’தீதும் நன்றும் பிறர் தர வாராந்னு படிச்சு ஆஹா ந்னு சொல்வோமே தவிர, தினசரி அனுபவத்துல தேவையான நேரத்துல அதை களத்துக்கு கொண்டு வந்து பார்க்க முடியலை. 99.99% பேர் அப்படித்தான் இருக்கோம்!

இப்படி எல்லாம் நடக்கிறப்ப சில சமயம் வெளிப்படையா திட்டறோம்; பல சமயம் அதுக்கு வாய்ப்பு இல்லாமலோ தைரியம் இல்லாமலோ வேற வழி இல்லாமலோ மனசுக்குள்ள திட்டிக்கொண்டு போகிறோம். தூங்கி எழுந்து பல விஷயங்கள் கவனத்துல இல்லாம போயிடும். பத்திரிகையில பரபரப்பா பேசப்படற விஷயம் ஒரு தர்க ரீதியான தீர்வு இல்லாமலே அடுத்த பரபரப்பான செய்தியால மறக்கடிக்கப்படற மாதிரி அடுத்து அடுத்து வர கசப்பான விஷயங்கள் முந்திய கசப்பான வருத்தம் கொடுத்த விஷயத்தால மறக்கப்பட்டாலும் அவை ஆழ் மனதுக்கு போய்விடும். சில சின்ன விஷயங்கள் நிஜமாகவே மறக்கப்படலாம். சிலது - நண்பர் ஒருவர் சொன்ன மாதிரி - கல்வெட்டிலே பொறிச்சு வைக்கப்பட்டு இருக்கும்; பின்னால் நினைச்சுப்பாத்து கோப தாபம் படுவதுக்கு! இந்த ஆழ் மனசுல இருக்கிற விஷயங்கள் இந்த பிறவி முழுக்கவே முள் போல அப்பப்ப நினைப்புக்கு வந்து பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருக்கும்! அடுத்த ஜன்மாவில வாசனை/ கர்மாவாக தொடருவதாக ஆன்மீகப்பார்வை. நம்புபவர்கள் நம்புங்க!
எப்படி இருந்தாலும் இது நம்மோட மன ஆரோக்கியத்துக்கு உகந்த்து இல்லை! இதை நீக்கணும்! எப்படி? மனசு பக்குவப்பட்டுதீதும் நன்றும் பிறர் தர வாராஎன்பது செயலுக்கு வந்தாச்சுன்னா பலதையும் கடந்து போய் விடுவோம்! ஆனால் இது பலராலேயும் முடியாது!

பின்னே?
பயிற்சி செய்யுங்க!

தினசரி உங்கள் மற்ற த்யானப்பயிற்சிக்கு பிறகு,  
நேத்து இந்த மாதிரி எரிச்சல் தந்த நபரை/ விஷயத்தை நினைவுக்கு கொண்டு வாங்க! அதிக முயற்சியே இல்லாம அப்போதிருந்த கோப தாபங்கள் உணர்வுக்கு வந்துடும்! நல்ல எண்ணங்களை இப்படி நினைவுக்கு கொண்டு வரதுதான் சிரமம். கெட்டது சுலபமாக நடக்கும்! போகட்டும்.

நினைவுக்கு கொண்டு வந்தாச்சா? இப்ப அவரைப்பாத்து மனசுக்குள்ள சொல்லுங்க! “நான் உங்களை மன்னிச்சுட்டேன்; நீங்க என்னை மன்னிச்சுடுங்க!”

அட! இதென்ன நீங்க என்னை மன்னிச்சுடுங்க?

நமக்கு அநியாயமா தோணுவது எல்லாம் நிஜமா அநியாயம்தான்னு ஒண்ணும் இல்லை. நடந்த விஷயங்களுக்கு தகுந்த காரணம் இருக்கலாம். கேட் எதிரில் வண்டி ப்ரேக் டவுன் ஆகி நின்னு போயிருக்கலாம். பல்சர்ல போன பையன் உயிர் காக்க ஓடுன டாக்டரா இருக்கலாம். இப்படி ஏதோ ஒண்ணு! எப்பவும் நாம 100% நிச்சயத்தோட ஒரு விஷயத்தை சொல்ல முடியாது! அப்படி ஒரு வேளை தப்பா நாம் சொல்லி இருந்தா? அதுக்குத்தான் நாம் மன்னிப்பு கேட்பது!

ரைட்! இப்ப இன்னும் ஒரு விஷயம். மேலே சொன்னபடி சொல்லி முடிச்சபிறகு அவர் நம்மகிட்டே சொல்கிறாப்போல கற்பனை செய்யுங்க!  நீங்க என்னை மன்னிச்சுடுங்க! நான் உங்களை மன்னிச்சுட்டேன்.”

தினசரி பயிற்சியால இது சுலபமா நடக்க ஆரம்பிக்கும். வெறும் வாய் வார்த்தையா இல்லாம உணர்வு பூர்வமாகவே சொல்லுவோம்! இது நடந்த பிறகு நாம் இலேசாக இருப்பதா உணர்வோம்! மனசிலேந்து எல்லா பாரத்தையும் இறக்கி வெச்சது போல!

இந்த பயிற்சி வெறுமே நேத்து நடந்த விஷயத்துக்கு மட்டும் இல்லை. போன சில நாட்கள்; போன வாரங்கள்; வருடங்கள். இது வரை நாம் வாழ்ந்த வாழ்க்கை முழுவதுக்குமே! எவ்வளவு நேரம் நம்மால இதுக்கு கொடுக்க முடியுதோ அவ்வளவு கொடுக்கலாம். ஏதேனும் காரணத்தால் ஒத்தரை மன்னிக்க நம்மால முடியலைன்னா அதை இன்னொரு நாளுக்கு விட்டுவிட்டு அடுத்ததுக்கு போயிடலாம். பின்னொரு நாளில விட்டதை முயற்சிக்கலாம்! ரொம்ப வருத்திக்காதீங்க! போகப்போக சுலபமாகிற சமாசாரம் இது! அவசியம் முயற்சி செய்யுங்க!


No comments: