Pages

Monday, May 20, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 13


111. கே: எப்பொழுதும் ஒருவன் நரகத்திலேயே வசிக்கும்படி நேருவதற்குக் காரணம் யாது?
: 1. யாசிக்கும் ஒரு ஏழை ப்ராம்ஹணனை, ஏதோ தருவதாக அழைத்து பிறகு இல்லை என்று எவன் கூறுகின்றானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.
2.வேதங்கள் தர்ம சாஸ்திரங்கள் இவற்றை அறிந்த அந்தணர்கள், தேவதைகள், பித்ருக்கள் இவற்றைக்குறித்த சிராத்தம் முதலியவற்றை எல்லாம் " எல்லாம் பொய், ஒன்றுமே உண்மையல்ல" என்று எவன் கூறுகின்றானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.
3.ஏராள்மான பொருள் இருக்கையிலே, தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் எவன் எப்பொழுதும் இல்லை என்று கூறிக்கொண்டு இருக்கிறானோ அவன் எப்பொழுதும் நரகத்திலேயே வசிப்பான்.

112. கே: ப்ராஹ்மண்யம் எதனால் சித்திக்கிறது? உயர்ந்த குலத்தில் பிறந்ததாலா? ஒழுக்கத்தாலா? வேதாத்யயனத்தாலா? வேதார்த்தத்தை உணர்ந்ததாலா? பல அறிஞர்களால் தீர்மானம் செய்யப்பட்ட பதிலை கூறுங்கள் பார்க்கலாம்!
: குலத்தாலோ, அத்யயனதாலோ, அல்லது அதன் பொருளை உணர்ந்ததாலோ ப்ராஹ்மண்யம் சித்திப்பதில்லை. நல்லொழுக்கத்தால்தான் ப்ராஹ்மண்யம் சித்திக்கிறது. இதில் ஐயமில்லை. ஆதலால் ப்ராஹ்மணனாக பிறந்தவன் நல்லொழுக்கத்துடன் வாழ பூர்ண முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணனாக பிறந்து ஒழுக்கமற்றவனாக இருந்தால் அவன் அழிந்தவன் என்றே கருதப்பட வேண்டும். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டதை அனுஷ்டிப்பவனே பண்டிதன். அனுஷ்டானமில்லாமல் ஏராளமாக படிப்பவர்களும் பிறருக்கு கற்பிக்கிறவர்களும், சாஸ்த்ர விமர்சனம் செய்பவர்களும் மூடர்கள்; வீணாக கஷ்டப்படுகிறவர்கள் என்றே கருதப்பட வேண்டும். நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்தவனாகிலும் கெட்ட ஒழுக்கமுடையவனாகில் அவன் நீசன் என்றும் அடக்க ஒடுக்கத்துடன் அனுஷ்டான சீலனாக இருப்பவனே சிறந்த ப்ராஹ்மணன் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

113. கே: பிரியமான வார்த்தைகளையே பேசுகின்றவன் எதை அடைகிறான்?
: அனைவருடைய அன்பை பெறுகிறான்.

114.கே :ஆலோசித்து காரியங்களை செய்பவன் எதை அடைகிறான்?
: எடுத்த காரியங்களில் அதிகமான வெற்றியைப் பெறுகிறான்.

115. கே: பல நண்பர்களை உடையவன் எதை அடைகிறான்?
: சுகமான வாழ்க்கையை நடத்துகிறான்.

116. கே: தர்மத்தில் ஈடுபட்டவன் எதை அடைகிறான்?
: தர்மத்தில் ஈடுபட்டவன் நற்கதியை அடைகிறான்.

117. கே : எவன் சந்தோஷத்துடன் வாழ்கிறான்?
: 5 அல்லது 6 நாட்களுக்கு ஒரு முறை அல்லது பகலை ஆறாகப்பிரித்து ஐந்தாம் பாகத்திலோ அல்லது ஆறாம் பாகத்திலோ தன் சொந்தமான க்ருஹத்தில் சாதாரண காய்கறிகளை சமைத்துப் புசிப்பவனும், கடனில்லாதவனும், தன் வீடு வாசல், பிள்ளை, குட்டி, அனைவரையும் விட்டுவிட்டு வேறு தேசத்துக்கு சென்று வசிக்காமல் இருப்பவனுமே சுகமாக வாழ்பவனாக கருதப்பட வேண்டும்.

118. கே: உலகில் எது ஆச்சரியம்?
: பிரதி தினம் பல பிராணிகள் யம லோகத்துக்கு சென்று கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை பார்த்துக்கொண்டெ இருக்கும் மற்றவர்கள் தாம் மட்டும் அழிவற்றவர்களாகவே இருக்க விரும்புகின்றனர். இதை விட வேறு ஆச்சரியம் என்ன இருக்கிறது?

119.கே: நம் செல்ல வேண்டிய மார்க்கம் எது?
: தர்மத்தின் தத்துவம் குஹைக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அது எளிதில் புலப்படுவதில்லை. “ இது தர்மம், இது அதர்மம்" என்று நாம் நம் புத்தியால் ஊகிக்க முடியாது. ஏனெனில் நம் ஊகம் நிலையற்றது. நாம் ஒருவாறு ஊகித்தால் வேறு சில மேதாவிகள் வேறு விதமாக ஊகிக்கலாம். வேதங்களும் பலவிதமாக காணப்படுகின்றன. ரிஷிகளும் பலர் பல விதமாக கூறியிருக்கின்றனர். ஆதலால் அறிஞர்கள் எந்த மார்க்கமாக செல்கின்றார்களோ அதுவே நாம் செல்ல வேண்டிய சிறந்த மார்க்கம்.

120. உலகில் பிரதி தினம் நடைபெறும் செய்தி என்ன?
: காலன் என்ற புருஷன், அறியாமை என்ற பாத்திரத்தில், இரவு பகல் என்ற விறகில், சூரியன் என்ற நெருப்பை வைத்து எரியவிட்டு, மாசம், ருது என்ற கரண்டியால் பிறட்டி பிறட்டிப்போட்டு எல்லாப்பிராணிகளையும் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறான் என்பதே உலகில் பிரதி தினம் நடைபெறும் செய்தி.

No comments: