Pages

Friday, May 24, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -2


"கொஞ்ச காலத்துக்குப்பின் அஷ்டாவக்கிர மஹாமுனி பட்டணத்துக்கருகில் வந்து ஒரு மரத்தின் கீழ் இளைப்பாறினார். அங்கிருந்த இரு பிராம்மணர்களிடன் "இந்த பட்டணத்தை ஆளும் ராஜா யார் அப்பனே?” என்று கேட்டார். அவர்கள் 'நீங்கள் இந்த பட்டணத்துக்குள் போக நினைக்கிறீர்களா என்ன?' என்று கேட்டார்கள். 'ஆமாம் அப்பா போக வேண்டும் என்று நினைப்பதால்தான் கேட்கிறேன்' என்றார் மாமுனி. அவர்கள் இருவரும் வினயத்துடன் 'ஸ்வாமி, அந்த பட்டணத்தை ஆளும் ராஜா எத்தனையோ பிராம்ஹணர்களை சிறையில் அடைத்து இருக்கிறார். அதனால் தாங்கள் அங்கே செல்ல வேண்டாம் என்று ப்ரார்த்திக்கிறோம். குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று ப்ராம்ஹணர்களிடன் ராஜா கேட்கிறார். முடியாது என்றால் அந்த வாக்கியத்தை சாஸ்திரத்தில் இருந்து எடுத்துவிடச்சொல்லுகிறார் ஸ்வாமி' என்றார்கள்.  
அஷ்டாவக்கிரர் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, 'ஓஹோ இதுவா சமாசாரம். அப்போது ஒன்று செய்யுங்கள். ஒரு பல்லக்கில் என்னை உட்கார வைத்து அந்த ராஜாவிடன் என்னைக்கொண்டு செல்லுங்கள். அந்த வாக்கியத்தை நான் நிரூபித்து பண்டிதர்களை நான் விடுவிக்கிறேன்' என்றார். அதைக்கேட்டதும் ப்ராம்ஹணர்கள் மகிழச்சி அடைந்து உடனேயே ஒரு பல்லக்கை கொண்டு வந்து அவரை உட்கார வைத்து தாங்களே அவரை சுமந்துபோய் ராஜ சபையில் இறக்கினார்கள்.
" தேஜோ மயமான அந்த முனிவரை கண்டதும் மன்னனுக்கு அவரை பூஜிக்கத்தோன்றியது. சட்டென்று சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்து கைகூப்பி, 'ஸ்வாமி! தாங்கள் இங்கே எழுந்தருளியதற்க்கு காரணம் ஏதும் உளதோ? என்னால் ஆக வேண்டிய காரியம் ஏதுமிருப்பின் தயை கூர்ந்து சொல்ல வேண்டும்' என்றான்.
"அரசனின் விநயமான பேச்சை கேட்டு மகிழ்ந்த முனிவர் 'எந்த அபராதத்துக்காக எல்லா பண்டிதர்களையும் சிறையில் அடைத்தாய்? அதை முதலில் சொல்; அப்புறம் என்னை விசாரிக்கலாம்' என்றார்.
'நான் ப்ராம்ஹணர்களை குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் முடியாதென்று சொன்னார்கள். அதனால் சிறையில் அடைத்தேன். அந்த வாக்கியத்தின் உண்மையை அறியவே இப்படி செய்தேன்' என்று கூறினார் ராஜா.
"சரியாப்போச்சு! சாஸ்திர வாக்கியத்தை நிரூபிக்க முடியவில்லை என்பதால் அது கற்பனை என்று தீர்மானித்துவிடலாமா? அது பொய்யில்லை என்றும், சாஸ்திர வாக்கியத்தின் ஒவ்வொரு அக்ஷரமும் உண்மையே என்று நான் பிரதிக்ஞை செய்கிறேன் என்றார் முனிவர். அபப்டியானால் இப்போழுதே குதிரையை கொண்டு வரச்சொல்கிறேன். தாங்கள் சாஸ்திர வாக்கியத்தை உண்மை என்று நிரூபித்து அனுக்ரஹிக்க வேணுமாய் ப்ரார்த்திக்கிறேன். ' என்றார் ராஜா. 'உன் எண்ணம் உத்தமமானதுதான். சந்தோஷம். ஞானோபதேசம் அதற்கு அருகதை இல்லாதவர்களுக்கு கொடுக்கக்கூடாது என்பதை நீ அறிவாய் அல்லவா? ஆகவே உனக்கு ஞானோபதேசம் பெற சிரத்தை இருந்தால் என் மீது பூரண சிரத்தையுடன் பக்தி செலுத்தி முதலில் சிறையிலுள்ள பண்டிதர்களை விடுதலை செய்வாயாக. பின் குதிரை ஏறி என்பின்னே காட்டுக்கு வா. உன் அருகதையை சோதித்து உபதேசம் செய்கிறேன்' என்றார் முனிவர்.
மிகத்தீர்மானமாக சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளை கேட்டதுமே அரசனுக்கு ஆவல் அதிகமாகியது. அக்கணமே சிறையில் அடைக்கப்பட்ட எல்லா பண்டிதர்களையும் விடுவித்தான். அஷ்டாவக்கிரரை பல்லக்கிலேற்றி அனுப்பி, கூடவே தானும் குதிரையேறி மந்திரி பரிவாரங்களுடன் காட்டுக்குப்போனான்
 ஒரு ஆல மரத்தடியில் பல்லக்கை நிறுத்தி அரசனையும் நிற்கச்சொல்லி, பின் 'இந்த பரிவாரங்களை எல்லாம் அனுப்பிவிடேன். உபதேசத்துக்கு இவர்கள் தேவையில்லையே' என்றார் முனிவர். சரி என்று ஜனகர் எல்லோரையும் அனுப்பிவிட்டார். உபதேசம் பெறுவதில் தாமதத்தை பொறுக்காமல் முனிவர் அனுமதி பெற்று குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்து ஏறி, இரண்டாவது காலை உயர்த்தும் முன் முனிவர் 'நில் நில்' என்று கர்ஜித்து இரண்டாவது காலை அங்கவடியில் வைப்பதற்கு முன் என் கேள்விகளுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்' என்றார். அரசன் 'ஆஹா! அப்படியே தங்கள் ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு சொல்கிறேன்' என்றார். 'நீ பரிசோதிக்கும் இந்த சாஸ்திரத்தில் இந்த வாக்கியம் மட்டும்தான் இருக்கிறதா அல்லது இன்னும் இருக்கிறதா?'
'இன்னும் பல வாக்கியங்கள் இருக்கின்றன ஸ்வாமி'
'ஞானம் பெற குரு ஒருவர் வேண்டுமென்று அதில் சொல்லி இருக்கிறதா இல்லையா?'
'ஆஹா! கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறது ஸ்வாமி'
'அப்படியானால் என்னை குருவாக வரிக்காமலே ஏன் ஞானம் பெற உபதேசித்து அருளும் படி அவசரப்படுத்துகிறாய்?'
'இல்லையில்லை. சாஸ்திர விதிப்படியே இந்த கணமே உங்களை குருவாக வரிக்கிறேன்.'
'குரு தக்ஷிணை?'
'இதோ இந்த க்ஷணமே என் உடல், உள்ளம். பொருள் எல்லாவற்றையும் தங்கள் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டேன். அனுக்ரஹம் செய்ய வேண்டும் ஸ்வாமி!'
"இதை கேட்ட அஷ்டாவக்கிரர் உடனே அருகில் இருந்த புதரில் மறைந்து காணாமல் போனார். ராஜா குதிரையின் அங்கவடியில் ஒருகாலை வைத்தபடியும், இரண்டாவது காலை பூமியிலிருந்து எடுக்கும் நிலையிலும் அப்படியே நிலை பெயராமல் நின்றான்.

No comments: