Pages

Sunday, May 26, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -4


முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
அதற்கு அவர் "ஸ்வாமி, இந்த சரீரத்தின் மீது எனக்கு எந்த சொந்தமும் கிடையாது. இந்தக்கைகள், கால்கள், நாக்கு, காது, கண்கள் ஆகிய ஸர்வேந்திரியங்களும் எனதில்லை. இந்த ராஜ்யம் எனதில்லை. உண்மையாகவே என் உடல், உடம்ப்பு, பொருள் எல்லாவற்றையும் உங்கள் பாதத்தாமரையில் சமர்ப்பித்துவிட்டேன். அதனால் உங்கள் அனுமதி இன்றி எவ்விதமான செயலுக்கும் நான் உரிமை இல்லாதவன். அதனால் இப்படி இருக்கிறேன்” என்றார்.
சிரத்தை பக்தியுடன் கூடிய அந்த சொற்களைக்கேட்டு உளம் மகிழ்ந்த அஷ்டாவக்கிர முனிவர் அந்த மஹாராஜனின் தலை மீது தம் கையை வைத்து 'அப்பனே நீ முக்தி பெறுவதற்கு தக்க அதிகாரிதானா இல்லையா என்று தெரிந்து கொள்ளவே இப்படி பரீட்சை செய்ய வேண்டி இருந்தது. அனுக்ரஹிப்பதற்கு தக்க அதிகாரி நீ இப்போது கிடைத்துவிட்டாய். இப்பொழுது நீ ப்ரம்ஹ ஸ்வரூபம்தான். நீ என்றும் முக்தன். பிறவிப்பயனடைந்தவன். பெறற்கரியது பெற்றவன். ஸதா அகண்ட ஸச்சிதானந்த ஸ்வரூபமே நீ' என்றார்.
அந்த அரசன் 'பேத உணர்ச்சியும் மனோ விகாரமும் போகாத அஞ்ஞானியன்றோ நான்? பிரம்ம ஸ்வரூபம் எப்படி ஆனேன்? ' என்று தன்னுள் தர்கித்துக்கொண்டு முனிவரை நமஸ்கரித்து 'ஸ்வாமி, ஞானம் பெறுவது எவ்வாறு? முக்தி நிகழ்வது எப்படி? வைராக்யம் வருவது எவ்வகையில்? அதை எனக்கு மொழிந்திட வேண்டும்.' என்று ப்ரார்த்தித்தார்.

"இப்படித்தான் அஷ்டாவக்கிர கீதை பிறந்தது. சிஷ்யர்கள் கேள்வி கேட்பதும் குரு விடையளிப்பதுமாக பிரச்சனோத்தர (கேள்வி பதில்) உருவில் இந்த கதை வாயிலாக அஷ்டாவக்கிரர் ஜனகருக்கு உபதேசம் செய்தார். அந்த உபதேசத்தினால் ஜனகருக்கு இரவு முழுதும் ஒரு நொடிப்பொழுதாக கழிந்துவிட்டது.

சூர்யோதயம் ஆனதும் வாயிற் கதவு திறந்திருக்கவே மந்திரி ஸாமந்தர்கள் எல்லாரும் உள்ளே வந்து பரமானந்தத்தினால் நிறைந்திருந்த மன்னனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். அப்பொழுது முனிவர் ஜனகரைப்பார்த்து 'என்ன! குதிரையின் அங்கவடியில் காலெடுத்து வைத்து ஏறி அடுத்த அங்கவடியில் கால் வைப்பதற்கு முன் ப்ரம்ஹ ஞானம் சித்திக்கும் என்ற சாத்திர வாக்கியத்தில் இன்னும் சந்தேகம் ஏதும் இருந்தால் கேள்' என்று சொன்னார். ராஜா பக்தி நிறைந்த மனதுடன் 'என் மனதில் எந்தவித சந்தேகத்துக்கும் இப்போது இடமில்லை. சாஸ்திர வாக்கியம் உண்மைதான். தங்கள் எல்லையில்லா க்ருபையினால் நான் க்ருதார்த்தனானேன்' என்றார்.

இதுதான் கதை. இந்த அஷ்டாவக்கிர கீதை ரிபு கீதையைப்போலவே அதீதமான கைவல்லிய நிலையை தெரியப்படுத்துகிறது. அதாவது, ஜனகர் உண்மையிலேயே தனது உடல் உள்ளம் பொருளை சமர்ப்பணம் செய்தவுடனேயே தன்னிலையில் ஒடுங்கி சமாதி பெற்றார். 'இந்த நிலையே உனது ஸ்வரூபம். இதிலேயே நீ ஸஹஜமாக அனுபவி!' என்று அந்த கீதையின் மூலம் அஷ்டாவக்கிரர் விளக்கினார்.

-நிறைந்தது- 

No comments: