Pages

Thursday, May 9, 2013

த்வைதம்.

 

நான் இருக்கிறேன். அது எனக்குத்தெரிகிறது. நான் இல்லை என்று யார் சொன்னாலும் அதை நம்ப முடியாது. அதுதான் ஸ்பஷ்டமாகவே தெரிகிறதே? அது யார் சொல்லியும் நான் உணரவில்லை; எனக்கே அது தெரிந்தது.
அதே போல இந்த உலகத்தை பார்க்க முடிகிறது; தொட முடிகிறது; ஐம்புலன்களாலும் உணர முடிகிறது. அதனால் இதெல்லாம் இருக்கிறது என்று என் மனது ஏற்றுக்கொள்கிறது.
அத்வைதம் இப்படி தனித்தனியாக இல்லை; எல்லாமே ஒன்று; பலதாக தெரிவது மாயையால் என்கிறது.
இதை ஒத்துக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. நான் இந்த ஆடு இல்லை; இந்த மாடு இல்லை; ஈஸ்வரன் இல்லை. ஈஸ்வரனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிற சக்திகள் ஒன்று கூட எனக்கு இல்லை. சர்வ நிச்சயமாக இல்லை.
அப்படி இருக்க இந்த 'எல்லாம் ஒன்று' எனக்கு உதைக்கிறது.

என்னதான் அத்வைதமே பரம சத்தியம், அதுவே உணர வேண்டியது என்று பல அறிஞர்கள், நூல்கள் பறை சாற்றினாலும் அதை நடை முறைக்கு கொண்டு வருவது மிகவும் கடினமாகவே இருக்கிறது. அது அறிவின்பாற்பட்டதாக இல்லை. அதை அனுபவிக்க வேண்டும்.... ஒரு க்ஷண நேரமாவது. அப்போதுதான் அதுவே சத்தியம் என்று புரியும். இப்படி அனுபவம் வாய்ப்பது மிகச்சிலருக்கே கிடைக்கிறது, மற்றவர்களுக்கு அது வெறும் புத்திபூர்வமாக ஒத்துக்கொண்டதாகவே இருக்கும். எப்படியும் கொஞ்சமாவது அதைக்குறித்த சந்தேகம் இல்லாமல் போகாது.
என்ன செய்யலாம்?
ம்ம்ம்ம்ம்... கொஞ்சம் இருங்க.... நான் இருக்கிறது தெரிகிறது. நான் அல்லாமல் பலதும் இருக்கிறது தெரிகிறது. இந்த பலது எல்லாமே ஒன்றுதான் என்றால்..... இருக்கலாம்!

நான் அல்லாத ஒன்று நிச்சயம் இயங்குகிறது. அது பல விஷயங்களை சாதிக்கிறது. என் பசியை தீர்க்கிறது; தாகத்தை தீர்க்கிறது; அமைதி கொடுக்கிறது. இதன் மீது எனக்கு கன்ட்ரோல் மிகக்கொஞ்சமே இருக்கிறது!

இதை ஈஸ்வரனின் பல வடிவங்கள் என்றால் எனக்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது. இந்த பல வடிவங்களாக என்னால் இருக்க முடியாது. நான் இல்லவும் இல்லை. அப்படி இருந்தால் நான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தது போல இதையும் உணர்ந்து இருப்பேனே?

ஆனால் ஈஸ்வரன் சக்தி வாய்ந்தவன்; அவனால் அப்படி இருக்க முடியும்.
நான் இருக்கிறேன். என்னைச்சுற்றி ஈஸ்வரனின் பல வடிவங்கள் இருக்கிறன. இவற்றின் மீது அன்பு செலுத்தலாம், பக்தி செலுத்தலாம், சும்மா விட்டுவிடவும் விடலாம்.

இதான் த்வைதம்!

No comments: