Pages

Thursday, May 30, 2013

ரமணர் - காலக்கணக்கு.

 
பகவான் புன் சிரிப்புடன் "ஆமாம். அது ஒரு கர்வம்தான். அதற்கு ஒரு கதை இருக்கிறது” என்றார்.....(போன பதிவின் தொடர்ச்சி)

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன், சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு 'இல்லை அப்பனே, உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள்.' என்றாராம். 'அதெப்படி? எல்லாரையும் படைப்பவன் நானாச்சே? என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள்? ' என்றார். 'சரி, வா, காட்டுகிறேன்' என்று மஹாவிஷ்ணு அழைத்துக்கொண்டு போனார்.

"ஒரு இடத்தில் லோமசர் என்று ஒரு மஹரிஷி காணப்பட்டார், அவரிடம் மஹாவிஷ்ணு 'ஐயா, தங்கள் வயதென்ன? இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள்?' என்று கேட்டார். அவர் 'அப்பனே என் வயதை கேட்டாயா? சொல்கிறேன். கேள். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் ப்ரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும்' என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது.

அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் 'ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுஸில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும்' என்றாராம்.

இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது. இபப்டி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. சரியான ஞானம் ஏற்பட்டால் இந்த சரீரம் யாருக்கு வேண்டும்? ஸதா ஸர்வ காலமும் நிர்மலமாக இருக்கும் தனக்கு இந்த சரீர சுமை எதற்கு?” என்றார் பகவான்.
"குரு கிருபை இல்லாமல் அந்த ஞானம் கிடைக்குமா? ஜடம் போலிருந்த ராமனுக்கு குரு போதனையினால்தானே அறிவு உண்டாகியது!” என்றார்கள் அந்த பக்தர்கள்.

"ஆஹா! சந்தேகமென்ன? குரு கிருபை அத்தியாவசியமே! அதனால்தான் தாயுமானவர் பத்துப்பாடல்களில் குருவை துதித்துள்ளார். மற்றொரு பெரியவர், 'குருநாதா, உன் பார்வை பட்டாலே போதும்; புலி பூனையாகிவிடும். பாம்பும் அணில் போல் சாதுவாகிவிடும். துஷ்டன் நல்லவனாகிவிடுவான். இன்னும் எதுதான் சித்திக்காது? உன் கடைக்கண் பார்வையாலேயே எல்லாம் மேன்மையடைகிறது. உன் மஹிமையை எப்படி வர்ணிப்பேன்?' என்று பாடி இருக்கிறார். குரு கிருபை என்றால் சாதாரணமான விஷயமா?” என்றார் பகவான்.

விஜயவாடாவிலிருந்து வந்தவர்கள் இந்தக்கதையை கேட்டு "குரு கிருபை எங்களுக்கு எவ்வளவு வாய்த்திருக்கிறது பாருங்கள். பகவான் இந்த கதைகள் மூலம் ஞானபோதனை செய்து எங்கள் விசனத்தை எல்லாம் போக்கிவிட்டார்” என மகிழ்ந்தனர்.

No comments: