Pages

Tuesday, May 14, 2013

ரமணர் - விஷ்ணு பரமாக...

 
பகவான் பக்தர் ஒருவர் கொண்டு வந்து கொடுத்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து அவர் காட்டிய சில பாடல்களுக்கு பொருள் சொல்ல ஆரம்பித்தார்.
"முன்னால் ஒரு தரம் முருகனார் விஷ்ணு பரமாக இரண்டு ஸ்துதி எழுதினார். ஒன்று சரீர சம்பந்தமானது. மற்றது வாக் சம்பந்தமானது. அவற்றின் சாராம்சம் இதுதான்.

1. ஸ்வாமி, நீ வராஹ அவதாரம் எடுத்து ஜலத்தில் மூழ்கி பூமா தேவியை வெளிக்கொண்டு வந்து உலக மக்களை காத்தீர். இப்பேர்ப்பட்ட உமக்கு அந்த பூமியில் வாடும் ஜீவனாகிய என்னால் என்ன கைம்மாறு செய்யமுடியும்? (கைம்மாறு - சரீர சம்பந்தம்)

2. உலகெல்லாம் ஜல ப்ரளயமாகி, உன்னிடம் தேவர்கள் ரக்ஷை கோரி நிற்க, நீ அன்ன பக்ஷி உருவில் அவதரித்து இரு இறகுகளினாலும் ஒரு முறை தண்ணீரை விசிறியதும், வெள்ளம் எல்லா திசைகளிலும் விலகி பூமி வெளிப்பட்டது. அப்பேர்ப்பட்ட உன்னை நான் என்னவென்று போற்ற முடியும்? (போற்றுதல் - வாக் சம்பந்தம்)

இது இரண்டையும் எழுதிவிட்டு மூன்றாவதாக மனது சம்பந்தப்பட்டதாக ஒரு பாடலை பகவானே எழுத வேண்டும் என்று வற்புறுத்தினார். எழுதாமல் தீரவில்லை. அப்போது 'அறம் தாழ மறமன் றெல்லாந் தோன்றி' என்ற பாடலை எழுதினேன். அதன் அர்த்தம் என்னவென்றால், அறம் (தர்மம்) தாழ்ந்து மறம் (அதர்மம்) ஓங்கும் போதெல்லாம் அவதரித்து 'அறமும் அறவோரும் வாழும் பொருட்டு, மறத்தை சாய்த்து, மண்ணுலகை உயிர்ப்பிக்கும் மாயனே, உனதுருவை போற்ற நான் யார்? ' எண்ணுதல் என்பது கணக்கிடுவது என்று அர்த்தம். நினைத்தல் என்றும் ஒரு அர்த்தம். 'நான் யார்?' என்றால் உன்னை விட்டு நான் எங்கே இருக்க முடியும் என்று பொருளாகும். இன்னும் சிலேடையாக என்னென்னவோ சொல்லலாம். இதை எழுதியதற்கு காரணம் முருகனாரின் வற்புறுத்தல்தான்" என்றார்.

பகவானை தவிர யார் மானசீகமாக எழுத முடியும் என்றார் பக்தை.

பகவான் தன் எதிரே இருந்த பக்தரை பார்த்தபடி, “அதோ இருக்கிறாரே க்ருஷ்ணஸ்வாமி ஐயர், அவர் பகவத் கீதைக்கு வியாக்கியானம் எழுதினார். அதன் கைப்பிரதியில் முகப்பில் ஒரு க்ருஷ்ணர் படத்தை ஒட்டிக்கொண்டு வந்து பகவான் இதன் கீழே ஏதாவது எழுத வேண்டுமென்று வற்புறுத்தினார். அப்போது தமிழில் 'பார்த்தன் தேரில்' என்ற செய்யுளை எழுதினேன்.

பார்த்தசாரதி ரூபேன ச்ராவயித்வா சுபாம்|
பார்த்தஸஸ்யார்த்தி ஹரோ தேவ: க்ருபா மூர்த்திஸ்ஸ பாதுன:
[பார்த்தசாரதி உருவில் நல் வாக்கினை நம் செவியிலேற்றி, பார்த்தனின் துயர் துடைத்த அருளாளனாகிய தேவன் நம்மைக்காப்பானாக ]
என்ற சமஸ்க்ருத ஸ்லோகமாக்கினேன்.

இந்த ஸ்லோகம் பகவத் கீதா ரத்னமாலிகாவில் இருக்கிறது. விஷ்ணு பரமாக எழுதிய பாடல்கள் இவை இரண்டு மட்டுமே! ”
" அன்ன பக்ஷி சமுத்திரத்தை தன் இறக்கைகளால் விலக்கிய கதை தமிழில் பரிபாடலில் மட்டுமே இருக்கிறது. வேறெங்கும் இவ்வளவு பிரபலமாக இல்லை. ஆனால் இப்படி கருடன் விலக்கிய கதையை மட்டும் பிரபலமாக எழுதி இருக்கிறார்கள்! ” என்று பகவான் சொல்ல அது என்ன கதை என்று ஒரு பக்தர் கேட்டார்.

No comments: